தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சமுதாயச் சிந்தனைகள்

5.4 சமுதாயச் சிந்தனைகள்

    இந்நாவல் விடுதலைக்கு முன்பும், பின்புமாகிய அக்காலச்
சமுதாய வாழ்வினைப் படம் பிடித்துக் காட்டுகிறது. மேலும்,
மார்க்சீயக் கருத்துகளைக் கதையின் போக்கோடு இணைத்துக்
கூறியுள்ளார் ஆசிரியர். அக்காலக் கிராம மக்களின் நிலை;
கல்விநிலையங்கள், மருத்துவமனை, முதலாளியின் ஆதிக்கம்,
மூடப்பழக்கம், சாதிஏற்றத்தாழ்வு, அரசு அதிகாரிகளின்
அடக்குமுறை, மனிதநேயம் இல்லாமை, பொதுவுடைமைக்
கருத்துகள் ஆகியவற்றை ஒரு சில உதாரணங்கள் மூலம்
தெளிவுபடுத்தலாம்.

5.4.1 கிராமவாழ்வும் மக்களும்

    “நாகரிகமில்லாத     இருண்ட பட்டிக்காடு” என்று
கூறுமளவுக்குச் சாலை வசதியும், மின்சார வசதியுமில்லாத
கிராமம். இந்நாவலின் மக்கள் நாகரிகமடையாத மக்கள் என்பது
தெரிகிறது. அவர்கள் உழைப்பை உயிர் மூச்சாகக்
கொண்டவர்கள்; மேலும் தம் உழைப்பிற்கே ஊதியத்தைப்
பெறாதவர்கள்; முதலாளியின் வயலில் வேலை செய்தனர்;
காட்டிற்குச்     சென்று     முந்திரிப்பழம்     சேகரித்தனர்;
குடியிருப்பதற்கோ, விவசாயம் செய்வதற்கோ சிறிது கூட
சொந்தநிலம் இல்லாதவர்கள்; கிராமத்தில் அம்மன் கோயிலில்
கொடை என்று ஏழை மக்களிடம் வரி வசூலித்தனர்;
வரிகொடுக்க இயலாத நிலையில் அவர்களுடைய உடைமை
பறிக்கப்படுகிறது; நசுக்கப்பட்டனர்; ஊர் முதலாளியை மக்கள்
தெய்வமென்றே எண்ணினர்; அதனால் அவர் மீது நம்பிக்கை
கொண்ட அப்பாவிகளாக இருந்தனர்; செய்தித்தாள் என்ற
ஒன்று இருப்பதே அம்மக்களுக்குத் தெரியவில்லை. மாடசாமி,
எசக்கி முதலான சிறு தெய்வங்களை வழிபட்டனர்; ஊரை
அவமதிக்கும் வகையில் தவறு செய்தால் தண்டனை
விதிக்கப்பட்டது; அம்மக்கள் தேநீராகச் சுக்கு நீரைப்பருகி
இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நடத்தினர். இத்தகைய
சூழலில் வாழும் மக்கள் எவ்வாறு துன்பப்படுகிறார்கள் என்பது
இந்நூலில் கூறப்படுகிறது.

கல்வி நிலையங்கள்

    இந்நாவலில் கிராமத்துப் பள்ளிகளில் ஆசிரியர் பாடம்
நடத்தாமல் தூங்கிவிட்டுச் செல்லும் நிலையை நகைச்சுவை
உணர்வோடு ஆசிரியர் சுட்டுகிறார். ஆசிரியர்கள் தவறு
செய்கின்ற படிக்காத மாணவர்களைச் சித்திரவதை செய்தனர்.
மேலும், ஆசிரியர் என்பவர் மாணவர்களைச் சமமாக நடத்த
வேண்டும். அப்படியில்லாமல் முதலாளி மகனை மட்டும்
ஆசிரியர் அடிக்காமல் இருப்பது மாணவர்களிடையே
ஏற்றத்தாழ்வை     ஏற்படுத்துகிறது என்பதை ஆசிரியர்
காட்டுகிறார்.

மருத்துவமனை

    “இந்த அரசாங்க ஆஸ்பத்திரிகளைப்போல
    கேடுகட்ட எடம் ஒலகத்தில இல்ல”

இதன் மூலம் அரசாங்க மருத்துவமனைகளின் சுகாதாரமற்ற
நிலையையும், அங்குள்ள ஊழியர்கள் லஞ்சம் வாங்கிக்கொண்டு
மருத்துவம் பார்ப்பதையும் எடுத்துரைக்கிறார் நாவலாசிரியர்
பொன்னீலன்.

5.4.2 சுரண்டும் வர்க்கம்

    இந்நாவலில் சமுதாயத்தைச் சுரண்டுபவர்களாகச் சுயநலம்
கொண்ட முதலாளிகள், சாதிவெறியர், அரசு அதிகாரிகள்,
மனச்சாட்சியில்லாதோர் உள்ளனர் என்பதை ஆசிரியர் பல
நிகழ்ச்சிகளின் மூலம் வெளிப்படுத்துகிறார்.

• முதலாளிகள்

    மக்களுக்குச் சுதந்திர உணர்வு இருக்கக்கூடாது என்று
முதலாளிகள் கருதினர். மக்களின் ஏழ்மை நிலையைத் தனக்குச்
சாதகமாக்கிக் கொண்டு, அவர்களுடைய உடைமைகளைப்
பறித்தது முதலாளி வர்க்கம். அவர்களுக்குக் கடன் கொடுத்து
மூன்று மடங்கு வட்டி வாங்கினார் முதலாளி. வட்டிப்பணம்
கொடுக்க முடியாதவர்களின் உடைமை பறிக்கப்பட்டது.
தேர்தலில் தன்னை எதிர்த்து யாரும் நிற்கக் கூடாது என்று
எண்ணிய முதலாளி மக்களுக்கு உணவு, பணம் கொடுத்து
வெற்றி பெற்ற அவல நிலையைக் காணமுடிகிறது.
முதலாளிவர்க்கம்     தொழிலாள வர்க்கத்தை எவ்வாறு
சுரண்டுகிறது என்பது இந்நாவலில் பல இடங்களில்
கூறப்பட்டுள்ளது.

• சாதி வெறி

    சாதிகளை ஒழிப்பதற்கு அரசு பல்வேறு திட்டங்களை
எடுத்தாலும் அது முற்றிலும் ஒழியவில்லை. இதனை ஆசிரியர்
சுட்டிக்காட்டத்     தவறவில்லை.     ஊரில்,     சலவைத்
தொழிலாளியையும், வயல் வேலை செய்யும் உழவர்களையும்,
குலம் கருதியும், தொழில் கருதியும் ஊர் மக்கள் மரியாதைக்
குறைவாக நடத்துகின்றனர். இதனை,

    “இந்த மிக்கேலுக்க தகப்பனாரை அவன்தான்
    மொத மொதல்ல வாங்கோ போங்கோன்று
    கூப்பிட்டான். ஊர்ல ஒரே எதிர்ப்பு”

என்று அன்றைய சமூகநிலையை விளக்கிய பொன்னீலன்
சாதிகள் இல்லாத சமூகத்தைப் படைக்க விரும்புகிறார். சாதி
என்பது பிறப்பினாலோ, செய்யுந் தொழிலாலோ வருவதில்லை.
எனவே, சாதி ஏற்றத்தாழ்வற்ற ஒரு சமுதாயம் உருவாக
வேண்டும் என்று எடுத்துரைக்கிறார் பொன்னீலன்.

• அரசு அதிகாரிகள்

    காவலதிகாரிகளின் பணி மக்களுக்காக என்பது மாறி
ஆளுங்கட்சியினருக்காக என்று ஆகிவிட்டது, இந்நிலையை
ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். விசாரணை நடத்த வந்த
காவலதிகாரிகள்     பள்ளியின்     முதல்வரிடம் மூட்டை
மூட்டையாய்ப் பழவகைகளைப் பெற்றுக் கொண்டு விசாரணை
நடத்தாமல் செல்கிறார்கள். இது அதிகாரிகளின் ‘மாமூல்’ எனும்
இலஞ்சம் வாங்கும் வாழ்க்கையைக் காட்டுகிறது. நாடகம்
நடத்திய சுதந்திரராஜனையும் அவனுடைய நண்பர்களையும்
காவலர்கள் அடித்தனர்.

    “கம்யூனிஸ்ட் பிரச்சாரமா பண்ணுறீங்க? ராஸ்கல்,
    யார்கிட்ட அனுமதி வாங்கியிருக்கீங்க”

என்று இன்ஸ்பெக்டர் கூச்சலிட்டார். சில நேர்மையான
அதிகாரிகளும் முதலாளி போன்றவரின் ஆதிக்கத்தால் தம்
கொள்கையை விட்டுவிடுகின்றனர் என்பதையும் இந்நாவலில்
ஆசிரியர் வெளிப்படுத்துகிறார்.

• மனசாட்சி இல்லாதோர்

    உலகில் நிகழ்கின்ற அனைத்துப் பூசல்களுக்கும் மனித
நேயம் இல்லாமையே காரணமாகின்றது. சுதந்திரராஜன்
வரிப்பணம் கட்டாததால், அவன் இறந்த பிறகும்கூட
பணத்தைக் கொடுத்த பின்னரே பிணத்தைத் தூக்க
வேண்டுமென்று ஊர் மக்கள் ஒன்று கூடி நின்றனர்.

    “ஒங்களுக்கும் எங்களுக்கும் பாடுபட்ட
    ஒருத்தன் நமக்கெல்லாம் சொந்தக்காரன்
    செத்துக்கெடக்கான் ! நீங்களும் நானுமால
    அவனப் பொதைக்க விடமாட்டேங்கிறது !

என்று நெஞ்சம் குமுறும் ஒரு தொழிலாளி மூலம்
மனிதநேயமற்ற மனசாட்சி இல்லாத விலங்குகளைப் போன்ற
மக்களை ஆசிரியர் இந்நாவலில் எடுத்துக்காட்டுகிறார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 18:58:01(இந்திய நேரம்)