Primary tabs
5.5 நாவலில் கையாளும் உத்திகள்
    நாவலில் கையாளும் உத்திகளால் நாவல் தனிச் சிறப்பைப்
பெறுகிறது. உத்தி மூலம் ஆசிரியரின் மொழித்திறனும்
எழுத்தாற்றலும்     வெளிப்படுவதோடு     அல்லாமல்
கலைப்படைப்பும் சிறப்புறுகின்றது. நாவலின் தலைப்பு,
நனவோடை உத்தி, கதைக்குள்கதை, எழுத்துநடை, வருணனை,
சொல்லாட்சி, உவமை, உருவகம் ஆகிய உத்திகளை
ஆசிரியர் கையாண்டுள்ளார். அவற்றை இனிக் காண்போம்.
5.5.1 தலைப்பும் நனவோடை உத்தியும்
     
 
 
    நாவலின் தலைப்பான புதிய மொட்டுகள் கதைக்கருவை
உருவக முறையில் குறிப்பாகப் புலப்படுத்துகிறது. மூடப்பழக்க
வழக்கங்கள் வேரோடிப்போன சமுதாயத்தின் புண்ணுக்கு
மருந்திட்டு, குணப்படுத்தி, புதிய சமுதாயத்தை உருவாக்கிட
புதிய மொட்டுகள் பூக்கத் தொடங்கி விட்டன என்ற கருத்தில்
ஆசிரியர் நாவலுக்குத் தலைப்பை வைத்துள்ளார். கதை
மாந்தர்களின் பண்பு நலன்களையொட்டி அவர்களுக்குப்
பெயரிட்டு,     குறிப்பால்     உணர்த்துவதை இந்நாவலில்
மேற்கொண்டுள்ளார். சுதந்திரராஜன், பெயரில் மட்டும்
சுதந்திரராஜனாக     இல்லாமல்     விடுதலை     வேட்கை
கொண்டவனாக விளங்குகிறான். அவன் அறியாமையில் மூழ்கிக்
கிடந்த மக்களை விழிப்படையச் செய்தான். அந்தக் கிராமத்தில்
மக்கள் அறியாமை நீங்கிப் புதிய மொட்டுகளாய் சுதந்திரராஜன்
வழியாக மாறினர் என்பதைக் கதைத் தலைப்பு குறிப்பாகப்
புலப்படுத்துகிறது.
• நனவோடை உத்தி
    இந்நாவல் கடந்த கால நிகழ்ச்சிகளை ஒரு பாத்திரத்தின்
வழி நினைவு கூர்வதாய் அமைந்துள்ளது. இதனைத் திருப்புக்
காட்சிகள் (Flash Backs) என்று கூறுவர். படைப்பில் ஒரு
குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும் பழங்கதைப் பற்றிய குறிப்பு
தேவைப்படுகிறது     என்ற சூழலில் இவ்வுத்தி முறை
புகுத்தப்படுகிறது. இந்நாவலில் ரசூல் என்பவரைத் துரைசாமி,
சுதந்திரராஜனின் சமாதியைக் காட்டுவதற்கு அழைத்துச்
செல்கிறான். அப்போது சுதந்திரராஜனின் வரலாற்றைக்
கூறுமுகமாய்ப் புதினத்தின் போக்கு அமைந்துள்ளது.
5.5.2 எழுத்து நடை
    நாவல் இலக்கிய உலகில் பொன்னீலனின் நடை
தனித்தன்மை வாய்ந்தது. ஏனெனில் அவரது நாவல்கள்
கிராமத்து மக்களின் வாழ்க்கையையே படம் பிடித்துக்
காட்டுகிறது. அவ்வகையில் இந்நாவலில் நாகர்கோயிலைச்
சுற்றியுள்ள கிராமமக்களின் பேச்சு வழக்குச் சொற்களைக் காண
முடிகிறது.
    “லே, ஒன் பேரென்னல” ன்று கேட்டான்.
    “தொரச்சாமில”ன்னு அதே அகங்காரத்தோடே
    நான் பதில் சொன்னேன். “இந்த ஊருக்கு
    ஏம்ல வாறீக” ன்னு பதிலுக்கு நானும்
    கேட்டேன், “சடுகுடுவெளையாடத் தெரியுமால?“ன்னான்,
    “தெரியுமிலே”ன்னேன். “சரிவா வௌயாடப்
    போவாம்”னு என் கையைப் பிடிச்சு இழுத்தான்”
கிராமத்துச்     சிறுவர்கள்     பேசுவதை     அப்படியே
கையாண்டிருப்பது     அவருடைய     எழுத்தாற்றலை
வெளிப்படுத்துகிறது. சில இடங்களில் படிக்காத பாமரமக்கள்
பேசுகின்ற கொச்சைத் தமிழும் இடம்பெற்றுள்ளது.
5.5.3 வர்ணனை
    நாவலில் இடம் பெறும் வர்ணனைகள் கதையோடு
பொருந்தியதாக அமைந்திருக்க வேண்டும், அவ்வகையில்
இந்நாவலில்
    “பதினஞ்சி வயசில சுதந்திரராஜனைப்
    பாத்தீங்கன்னாலும் இதே மாதிரித்தான், 
    நீண்ட கையும் காலுமாக, நீண்ட மொகமும், அதில் 
    கூர்மையான வட்டக் கண்ணும், வளையாத மொரட்டுக் 
    கருப்பு ரோமமும் நெறஞ்ச பெரிய தலையுமா, செவியுங்கூட
    இதே போலத்தான் அவனுக்கும் வெடச்சி நிக்கும்” 
என்று கதைத்தலைவன் சுதந்திரராஜனின் மகன் பகத்சிங்
வர்ணிக்கப்படுகிறான்.
    மற்றொரு இடத்தில், “அது பூக்கத் தொடங்கி நாலுவருஷம்
ஆகுது, ஓரொரு வருடமும் இந்த நாளுக்கு அது... பூவா
நெறஞ்சிருக்கும், பாருங்க, எல நிறைஞ்ச ஒவ்வொரு
கொண்டையிலேயும் வெள்ளை வெளேர்னு பூச்சரஞ்சூடி, அது
என்னமா காத்தில கொழையுது” இவ்வாறு இயற்கையை
வர்ணிக்கிறார்.
5.5.4 சொல்லாட்சி
    இந்நாவலில் சுதந்திரராஜனும், அவனுடைய நண்பர்களும்
சிறு வயதில் நாடகம் நடத்தியபோது நடந்த ஒரு நிகழ்ச்சியை
நகைச்சுவையோடு குறிப்பிட்டுள்ளார்.
    “நாடகத்துக்கு டிக்கட் உண்டு, பாக்க வாறவ
    னெல்லாம் ரெண்டு ரெண்டு முந்திரிக்கொட்ட,
    அல்லது ரெண்டு ரெண்டு செரட்ட கொண்டாந்து
    குடுக்கணும். ஒரு தடவ தெக்குத்தெரு பகவதி,
    நாடகம் பாக்குற ஆசையில, வீட்ல அவங்க அம்மா
    பாதி துருவிட்டு வச்சிருந்த தேங்காயத் தூக்கிக்
    கொண்டாந்து குடுத்துட்டான். அவங்க அம்மா
    கொளம்புக்குத் தேடியிருக்காங்க. காணல்ல.
    நேரே கொள்ளிக் கட்டையைத் தூக்கிட்டு நாடக
    அரங்குக்கு வந்துட்டாங்க. பகவதி முதுகுவீங்குது.
    அழுதுகிட்டே நான் குடுத்த தேங்காய்ச் செரட்டையத்
    தாங்கண்ணான். ஆனா அந்தச் செரட்டைய எங்கும்
    காணல. விசாரிச்சா, டிக்கட் வாங்கின பயலுக
    செரட்டைய ஒடச்சி தேங்காயத் தின்னு
    போட்டானுக, அந்த அம்மா திட்டுது, திட்டுது
    மானங்கெட்ட திட்டு. நாங்க காதப்பொத்திக்கிட்டு 
    ஓடினோம்”. இது போன்ற சொல்லாட்சி அமைந்துள்ளது.
    சுதந்திரராஜன் ஆறு ஆண்டுகள் கழித்து தன்னுடைய
ஊருக்கு வந்தான். தந்தைக்கு வேட்டியும் சட்டையும் வாங்கி
வந்தான். அதனை,
    “ஹோ, மகன் கொண்டு வந்த வேட்டியக்கட்டி
    கிட்டுத் துண்டத் தலையில சுத்திக்கிட்ட அவன்
    தகப்பனாரு ஒருவாரமா ஆகாயத்தப்பாத்து
    என்ன நட நடந்தாரு!” 
என்று     ஒரு     தந்தையின்     பெருமித உணர்வைச்
சித்தரித்துள்ளார். 
மேலும், 
    “தொரச்சாமி தங்கப்பனைப் பணம் கொன்னு
    போட்டு்தேன்னு சத்தமில்லாத அழு கொரல்ல
    சொன்னான். எனக்கு தேகம் முழுதும்
    செவந்திட்டுது. ஆன்னு லேசா அலறிட்டேன்”
தங்கப்பன் இறந்த செய்தியைக் கேட்ட சுதந்திரராஜன்
அளவில்லாத     துன்பத்தை     அடைந்தான்     என்பதை
இச்சொற்றொடரால் ஆசிரியர் எடுத்துரைக்கிறார். 
5.5.5 உவமை
     பொன்னீலன் கையாண்டுள்ள உவமைகளில் சிலவற்றை
 இங்குக் காணலாம். அவர் காட்டில் உள்ள மரங்களைப்
 பின்வருமாறு விளக்கியுள்ளார்.
     
    “எங்ககாடு அழகாருக்கில்லா?மா மரங்களும்,
    பலா மரங்களும், முந்திரி மரங்களும் காய்களும்
    பழங்களுமா அலக்கரித்த தேர்களப் போல அழகழகா
    நிக்குதில்லா? அதா தெரியுதே சதுரமா ஒரு சிறிய 
    கருங்கல் கட்டுமானம், அதுக்குள்ளதான் எங்க
    சுதந்திரராஜன் தூங்கறான்.” 
    மேலே உள்ள வருணனையில், சுதந்திரராஜனை அடக்கம்
செய்த     இடத்திலுள்ள மரங்கள், அலங்கரிக்கப்பட்ட
தேர்களைப்போல உள்ளதாக உவமை கூறி ஆசிரியர்
விளக்குகிறார்.
     ஊர் மக்களின் நிலங்களை முதலாளி ஏமாற்றி வாங்கிக்
 கொண்டதை,
துண்டுகளப் போல, பாவப்பட்டவனுகளுக
துண்டு துக்காணி நெலங்களெல்லாம்
எங்க மொதலாளி நெலங்கேளாட
ஒண்ணொண்ணாப் போயி ஒட்டிக்கிடுச்சி !”

 என்கிறார். சுதந்திரராஜன் சுதந்திர தினவிழாக் கொண்டாடிய
 போது ஊர் முதலாளி எதிர்க்க வந்ததை,
        
    “சூரியன் மேகத்தில மறஞ்சது போல இருந்தது.
    ஊர் மொதலாளி எங்கள நோக்கி தத்தக்க
    புத்தக்கன்னு ஓடியே வாறாரு”
என்று நகையுணர்வு தோன்ற ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் நிலாவினைத் தங்கத் தட்டோடு ஒப்பிடுகிறார்.
        
    “கெழக்கே நிலா ஒரு தங்கத் தட்டம் போல 
    மேல எழும்புது”
இவ்வாறு இந்நாவலில் பல இடங்களில் உவமை நன்கு பயின்று வந்துள்ளது.
5.5.6 உருவகம்
     ஆசிரியர் உவமைகளைக் கையாண்டிருப்பது போல
 உருவகங்களையும் எடுத்தாண்டுள்ளார். தங்கரளியின் சிரிப்பைப்
 பூஞ்சிரிப்பு என்று ஆசிரியர் உருவகப்படுத்தியுள்ளார்.
        
    “மொகத்தில ஒரு சாந்தமான பூஞ்சிரிப்பு படரும்
    பங்குனி மாசம் பூவரசம்பூ பூத்தாப்ல”
 மேலும், கிராமத்து மக்கள் காவலதிகாரிகளைக் கண்டதும்
 ஓடிவிட்டனர். 

தீக்குச்சி, தீக்குச்சி டோன்னு ஊள
போட்டானுக”
காவலதிகாரிகளைத்     தீக்குச்சி     என்று     ஆசிரியர்
உருவகித்துள்ளார். மற்றொரு இடத்தில்,
களும் ஆமா செய்ய வேண்டியதுதான்னு
தலய ஆட்டுது”

என்று ஆசிரியர் ஏதும் அறியா மக்களைச் செம்மறியாடுகள்
என்று உருவகப்படுத்தியிருப்பதன் மூலம் உணர முடிகின்றது.
இதே போன்று பல உருவகங்கள் இந்த நாவலில் இடம்
பெற்றுள்ளன.
 
						