Primary tabs
6.1 சுஜாதா
         
    தற்பொழுது     வாழ்ந்து வரும் எழுத்தாளர்களுள்
அனைவருக்கும் அறிமுகமானவர் சுஜாதா. இவர் பிறந்த தேதி
03.05.1935. இவரின் சொந்த ஊர் ஸ்ரீரங்கம். இவரது இயற்பெயர்
எஸ். ரங்கராஜன்; புனைபெயர் சுஜாதா; திருச்சி பி.எச்.இ.எல்
நிறுவனத்திலும், பெங்களுர் பாரத் எலெக்ட்ரானிக்ஸ்
நிறுவனத்திலும் பணிபுரிந்துள்ளார்; புதுமைக்கதைகள், அறிவியல்
கதைகள் படைத்துள்ளார்; தனக்கெனத் தனிப் பாணி வகுத்துக்
கொண்டவர்;     பொறியாளராகப்     பணியாற்றிய இவர்
பன்முகத்திறன் கொண்டவராக விளங்குகிறார். இவர் ஸ்டெர்லிங்
டி.எஸ்.எல் நிறுவனத்தின் அம்பலம் என்னும் இதழை
நிர்வகிக்கிறார். இவர், இணையத்தைப் பற்றி எழுதிய நூல்
வீட்டுக்குள் வரும் உலகம் ஆகும். மேலும் ஏன்?
எதற்கு? எப்படி? என்ற இவரது நூல் அறிவியல்
கேள்விகளுக்குப் பதில் கூறுகிறது.
    துப்பறியும் நாவல் துறையில் புதிய உத்தியைக் கையாண்டு
மக்களைக் கவர்ந்தவர் சுஜாதா. துப்பறியும் நாவல்கள்
இன்றளவும் மக்களிடம் பெரும் செல்வாக்கைப் பெற்றுள்ளன.
மர்மத்திற்குமேல் மர்மங்களும் கொண்டு பாமரமக்களும்
வாங்கிப் படிக்கும் நிலைக்கு இவரது துப்பறியும் நாவல்கள்
வளர்ந்துள்ளன. இவர் எழுதிய என் இனிய இயந்திரா
பதிப்பியலில் சரித்திரம் படைத்த அறிவியல் புதினம்.
இந்தக் கதை     வெளிவந்தபின் பலர் தங்கள்
வீட்டுச் செல்லப்பிராணிகளுக்கு     ஜீனோ     என்று
பெயரிட்டார்கள். இந்தக் கதையின் தொடர்ச்சியாக இவர்
மீண்டும் ஜீனோ என்னும் நாவலும் எழுதினார்.
6.1.1 சுஜாதாவின் படைப்புகள்
     அறிவியல் படைப்புகள் மூலம் ஓர் இனிய பரம்பரையை
 உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு. இவர் நூற்றுக்கு
 மேற்பட்ட சிறுகதைகளும் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாவல்களும்
 எழுதியுள்ளார். இவர் எழுதிய அறிவியல் சிறுகதைகள்
 வடிவங்கள், தேவன் வருகை போன்ற தொகுப்புகளாக வெளி
 வந்துள்ளன. என் இனிய இயந்திரா என்ற நாவல் பல
 பதிப்புகளைப்     பெற்றது.     மேலும்     இந்நாவல்
 தொலைக்காட்சியில் தொடராகவும் இடம் பெற்றது.
        
         தமிழ்வாணன் 
 
     எழுத்தாளர் தமிழ்வாணன் சங்கர்லால் என்ற கற்பனைப்
 பாத்திரத்தை உண்மை மாந்தர் என நினைக்கும் அளவிற்குத்
 தனது துப்பறியும் நாவல்களில் அமைத்தார். அவரது முறையைப்
 பல வருடங்கள் கழித்து வந்த சுஜாதா தனது நாவல்களில்
 பயன்படுத்தினார். தனது துப்பறியும் நாவல்களில் கணேஷ்,
 வசந்த் என்ற இரு கற்பனை மாந்தர்களை உண்மைமாந்தர்
 என எண்ணும்படி இவர் பயன்படுத்தி வருகிறார். இவரைப்
 பின்பற்றியே இன்றை நாவல்களில் புஷ்பா தங்கதுரை,
 ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், பட்டுக்கோட்டை பிரபாகர்,
 சுபா, தேவிபாலா முதலான நாவலாசிரியர்கள் தமது
 நாவல்களில்     நிரந்தரமான இரு கதாபாத்திரங்களை
 உருவாக்கினார்கள்.
 
     நாலாயிரத் திவ்விய பிரபந்த பாசுரங்களில் ஈடுபாடு
 கொண்ட சுஜாதா சில பாசுரங்களை எளிய முறையில் புதிய
 நடையில் மறு உருவாக்க முறையில் தந்துள்ளார்.
 மொழிபெயர்ப்பிலும் ஈடுபாடு கொண்ட சுஜாதா பல
 கவிதைகளை எளிமையுடன் மொழி பெயர்த்துள்ளார்.
 இவரது நாவல்களில் துப்பறியும் நாவல், அறிவியல் நாவல்
 என்ற இரு பிரிவுகளைக் காணலாம்.
    இவரது முதல் நாவல் 14வது மாடி என்பர். இதனைத்
தொடர்ந்து கரையெல்லாம் செண்பகப்பூ, 24 ரூபாய்த் தீவு,
கனவுத் தொழிற்சாலை, கொலையுதிர் காலம், நைலான்
கயிறு, நில் கவனி தாக்கு, 14 நாட்கள், வானமென்னும்
வீதியிலே, அனிதா இளம் மனைவி, ஜன்னல் மலர்,
நிர்வாண நகரம், மேற்கே ஒரு குற்றம், மறுபடியும்
கணேஷ் போன்ற நாவல்கேளாடு, 1992ஆம் ஆண்டு ஆ...!
என்ற பரிசோதனை நாவலையும் இவர் படைத்துள்ளார்.
    இவர் சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, விமரிசனம்
என்று பல துறைகளில் தன் பங்களிப்பைச் செய்துள்ளார்.
எழுபதுகளில் இவரது இலக்கியப்பணி தமிழ் நடையிலும்
கதைகளின் உட்பொருளிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை
விளைவித்தது. சுஜாதா அறிவியல் நாவலின் முதன்மை
முன்னோடியாளராகத் திகழ்கிறார். இன்று அறிவியல் கதைகள்
எழுதுபவர் பலரும், இவரது நாவல்களின் தாக்கத்தால்
எழுதுகின்றனர். இவர் மேடை நாடகங்களையும் எழுதி
அரங்கேற்றியிருக்கிறார்.     இவருடைய     படைப்புகள்
மொழிபெயர்க்கப்     பட்டிருக்கின்றன.     விஞ்ஞானப்
புனைகதைகள்     எழுதியுள்ள இவர் ம.இராஜாராமுடன்
இணைந்து     எலெக்ட்ரானிக்ஸ் பற்றிய     நூலொன்றும்
எழுதியிருக்கிறார். இவர் ஹைகூ கவிதையை எளிதாக
விளக்குவதில் வல்லவர்; எலக்ட்ரானிக்ஸ், இசை, சித்த
வைத்தியம், நாட்டுப்புறப் பாடல்கள் இப்படிப் பல செய்திகள்
பற்றியும் விளக்குகிறார். இந்திய மொழிகளில் இவருடைய
படைப்புகள் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.
 
						