தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

சங்கரதாஸ் சுவாமிகள் காலமும் பிற்காலமும்

2.4 சங்கரதாஸ் சுவாமிகள் காலமும் பிற்காலமும்

சங்கரதாஸ் சுவாமிகள்
              
தமிழ் நாடக வரலாற்றில் சங்கரதாஸ் சுவாமிகளின்
காலம் மிகவும் குறிப்பிடத்தக்க காலமாகும். (சுவாமிகளின்
நாடகப் பணியைப் பற்றித் தனியே ஒரு பாடம் இடம்
பெற்றுள்ளது. அதில் இன்னும் கூடுதலாகச் சுவாமிகளைப்
பற்றித் தெரிந்து கொள்ளலாம்). சுவாமிகள் 50 நாடகங்கள்
எழுதித் தமிழ் நாடக     வரலாற்றிற்கு மிகப்பெரும்
தொண்டாற்றியுள்ளார். சுவாமிகளைப் பற்றி ஒளவை
தி.க.சண்முகம் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

‘அந்த நாளில் சுவாமிகள் என்றோலே போதும்; அந்தச்
சொல் அவர் ஒருவரைத் தான் குறிக்கும்; அவருடைய
நாடக அமைப்புத் திறன்; அந்த அமைப்பிலே காணப்படும்
நுணுக்கம்; நாடகப் போக்கிலே நாம் காணும் அழகு;
நாடகப் பத்திரங்களின வாயிலாகப் பாடல்களிலும்
உரையாடல்களிலும் அவர் வெளியிட்ட கருத்துகள்; அந்தக்
கருத்துகளால் நாடகம் பார்ப்பவர்கள் அடைந்த பயன்
இவற்றை எல்லாம் எண்ணிப் பார்க்கும் போது சுவாமிகளின்
நாடக நல்லிசைப் புலமை நமக்கு நன்றாகத் தெரிகிறது’ என்று
குறிப்பிடுகிறார்.

2.4.1 சுவாமிகள் கால நாடக ஆசிரியர்கள்

பம்மல் சம்பந்த முதலியார்
         
சுவாமிகளைப் பின்பற்றி அதே காலக்கட்டத்தில்
உருவானவர்தான் பம்மல் சம்பந்த முதலியார். நூற்றுக்கும்
மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். நாடகத் தமிழ்
என்னும் பெயரில் சிறந்த நாடக ஆராய்ச்சி நூலையும்
எழுதியுள்ளார். தமிழ்நாடக வளர்ச்சியை அறிவதற்கு இந்த
நூல் மிகவும் பயன்படும்.

பம்மல் சம்பந்த முதலியாரைப் பின்பற்றி உருவானவர்
மோசூர் கந்தசாமி     முதலியார் ஆவார். சம்பந்த
முதலியார் காலத்துக்குப் பின்னும் அவரது நாடகங்களைப்
பரப்பியவர் இவரே ஆவார். தமிழ் நாடக உலகத்தினரால்
இவர்     நாடக     மறுமலர்ச்சித்     தந்தை     என்று
போற்றப்படுகிறார். ஏகை சிவசண்முகம் பிள்ளை     என்பவர்
சங்கரதாஸ் சுவாமிகளின் காலத்தவர் ஆவார். சம்பூர்ண
இராமாயணம், கண்டிராஜா, அரிச்சந்திரா ஆகிய மூன்று
நாடகங்களால் புகழ்     பெற்ற சிவசண்முகம் பிள்ளை
சங்கரதாஸ் சுவாமிகளுக்கும் குரு என்னும் நிலையில்
இருந்தவர்.

    மதுரை தத்துவ மீனலோசனி வித்துவ பால
சபா
வில் சிறுவர் நடிகர்களாக அறிமுகமான தி.க.முத்துசாமி,
தி.க.சண்முகம், தி.க.பகவதி     ஆகியோர் பின்னாளில்
மதுரை ஸ்ரீ பாலசண்முகானந்த சபையையும், டி.கே.எஸ்.
நாடகக் குழுவையும்     நடத்தித் தமிழ் நாடகக்
கலைக்குப் பெரும் தொண்டாற்றினர். 75 நாடகங்கள்
இவர்களால் நடிக்கப்பட்டன. புராணம், வரலாறு, சமூகம்,
நாட்டு விடுதலை எனப் பல கதைக்கருக்களில் நாடகங்களை
நடத்தினர்.

    தெ.பொ.கிருஷ்ணசாமிப்     பாவலர் 1922 இல் பால
மனோகர    சபை
யைத் தொடங்கினார். இச்சபையில்
டி.கே.எஸ்.சகோதரர்கள்     நடிகர்களாக இருந்திருக்கின்றனர்.
தமிழக வரலாற்றில் முதல் தேசியப் படைப்பான கதரின்
வெற்றி
யை எழுதி இயக்கிய பெருமை கிருஷ்ணசாமிப்
பாவலரையே சாரும். மேலும், பதிபக்தி,     பம்பாய்
மெயில், கதர் பக்தி, பஞ்சாப் கேசரி, தேசியக்
கொடி
ஆகிய நாடகங்களையும் இவர் எழுதினார்.

    தமிழ் நாடக உலகில் காட்சி அமைப்பில் புதுமை
காட்டி மாறுதல்களை     உருவாக்கியவர்     சி.கன்னையா
அவர்கள். இவரது தசாவதாரம், ஆண்டாள், பகவத் கீதை
ஆகிய நாடகங்களின் காட்சி அமைப்பு தமிழ் நாடக
வரலாற்றில் குறிப்பிடத்தக்கது. கலையுலக பிரம்மா என்று
இவரைத் தமிழ் நாடகம் நன்றியுடன் குறிப்பிடுகிறது.

    20 ஆம் நூற்றாண்டு     நாடக     வரலாற்றில் பலர்
நினைத்துப் பார்க்கத் தகுந்தவர்கள். உடுமலை முத்துசாமிக்
கவிராயர், நடிகமணி விஸ்வநாத தாஸ், மதுரகவி
பாஸ்கர தாஸ், நவாப் ராஜமாணிக்கம், கலைவாணர்
என்.எஸ்.கிருஷ்ணன்
ஆகியோரின் நாடகப் பணி நின்று
நிலைபெறத் தக்கது.

2.4.2 நாடக சபைகள்

தஞ்சை கோவிந்தசாமிராவ் காலத்தில் இருந்தே
அமெச்சூர் நாடக சபாக்கள் தோன்றத் தொடங்கின.
மனமோகன நாடக     சபையைக் கோவிந்தசாமிராவ்
தோற்றுவித்தார். சுகுண விலாச சபையைப் பம்மல் சம்பந்த
முதலியாரும் மதுரை தத்துவ மீனலோசனி வித்துவ
பாலசபை
யைச் சங்கரதாஸ் சுவாமிகளும் தோற்றுவித்தனர்.
இவற்றிற்குப் பின்னர் பல சபைகள் தோன்றின. நாடகத்தை
ஒரு பொருள் ஈட்டும் தொழிலாக மட்டும் அல்லாமல் அதை
ஒரு வளரும் கலையாகவும் நினைத்து வளர்ப்பதில்
இச்சபைகள் ஆர்வம் காட்டத் தொடங்கின.
 
  • பாலர் சபைகள்

  •  
    தமிழ் நாடகக் கலை வளர்ச்சியில் இளம் நடிகர்களைக்
    கொண்ட பாலர் சபைகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. பாலர்
    நாடக சபையை உருவாக்குவதிலும் சங்கரதாஸ் சுவாமிகளே
    முன்னோடியாகத் திகழ்ந்தார்.     இவரது மதுரை தத்துவ
    மீனலோசனி வித்துவ பால சபா, தி.க.சண்முகம் உள்ளிட்ட
    பல நடிகர்களை உருவாக்கியது. மதுரை ஒரிஜினல் பாய்ஸ்
    கம்பெனி
         பல இளம்     நடிகர்களை உருவாக்கியது.
    பின்னாளின் திரை உலகில் புகழ்பெற்ற எம்.ஜி.ராமச்சந்திரன்,
    காளி.என்.ரத்தினம், பி.யு.சின்னப்பா போன்ற பல நடிகர்கள்
    இந்தச் சபையில் உருவானவர்களே ஆவர். மதுரை பால
    மீன ரஞ்சனி சங்கீத சபை
    யும் பல நடிகர்களை உருவாக்கியது.
    கே.சாரங்கபாணி, நவாப் ராஜமாணிக்கம்,     பி.டி.சம்பந்தம்,
    எம்.எஸ்.முத்துக்கிருஷ்ணன், டி.பி.பொன்னுசாமி, எம்.ஆர்.ராதா,
    சிதம்பரம் ஜெயராமன், ஏ.எம்.மருதப்பா ஆகியோர் இச்சபையில்
    இருந்து உருவான நடிகர்கள் ஆவர்.
     
  • நாடகப் பணிகள்
  • தொழில்முறை நாடகங்களில் இருந்த பல கூறுகள்
    சபைகளால் மாற்றம் பெற்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை சில.
     

  • இரவு முழுவதும் நாடகம் ஆடுவது நிறுத்தப்பட்டு
    நாடகத்துக்கென நேரம் வரையறை செய்யப்பட்டது.

  • சூத்திரதாரனும், விதூஷகனும் நாடகத்தின் தொடக்கத்தில்
    வரும் வழக்கம் நிறுத்தப்பட்டது.

  • இதே போல் மோகினி ராஜன், மோகினி ராணி வரும்
    வழக்கமும் நிறுத்தப் பட்டது.

  • நாடகக் கதையின் சுருக்கம் அச்சிடப்பட்டுச் சபையோருக்கு முன்னரே அளிக்கப்பட்டது.

  • நாடகத்தில் உரைநடை வசனம் பெருகியது.

  • மொழிச் செப்பம் கடைப்பிடிக்கப்பட்டது.

  • நாடகத்துக்கு முக்கியமானதாகக் கருதப்பட்ட பின்பாட்டு
    முழுவதுமாக நீக்கப்பட்டது.

  • பக்க வாத்தியக்காரர்கள் மேடையில் தனி ஆதிக்கம்
    செலுத்துவது நிறுத்தப்பட்டது.

  • நாடக மாந்தர்கள் ஒவ்வொருவரும் மேடைக்கு
    வரும்போதும் உள்ளே செல்லும் போதும் பாடவேண்டும்
    என்னும்முறை நிறுத்தப் பட்டது.

  • நாடக இசைக்குத் தாளம் போன்ற கருவிகளைத்
    தட்ட வேண்டும் என்பது கைவிடப்பட்டது.

  • ஆர்மோனியக்காரர் மேடையில் செல்வாக்குச் செலுத்திக்
    கொண்டிருந்த நிலையை மாற்றி நாடக மேடையின் கீழே
    அல்லது ஒதுக்குப் பக்கத்தில் அவருக்கு இடம்
    ஒதுக்கப்பட்டது.

  • நாடக மேடையில் திரைகள் அமைப்பது பற்றிய
    ஒழுங்குமுறை அமெச்சூர் சபைகளால் தான் ஏற்பட்டது.

  • புராண இதிகாசக் கதைகள் மட்டுமன்றி வரலாறு, சமூகம்
    தழுவிய நாடகங்களும் இச்சபைகளால் தான் உருவாயின.

  • துன்பியல் நாடகங்களையும் இச்சபைகள் தான்
    அறிமுகப்படுத்தின.

  • நாடகத்தில் அங்கம், களம், காட்சி என்னும் பிரிவுகளை
    ஏற்படுத்திப் புதுமையைப் புகுத்தினர்.

  • வடமொழி நாடகங்கள் மட்டுமன்றி ஆங்கிலம், பஞ்சாபி,
    மகாராஷ்டிரம் ஆகிய மொழிகளின் நாடகங்களும்
    தமிழாக்கப்பட்டு நடிக்கப்பட்டன.

  • இத்தகைய மாற்றங்களை எல்லாம் அமெச்சூர் நாடகச்
    சபைகளே செய்தன.
    2.4.3 நாடக ஆக்கத்தில் பெண்கள்

    காலப்போக்கில் ஆண்களே பெண்வேடமிட்டு நடித்துக்
    கொண்டிருந்த நிலைமாறி பெண்களும் மேடையேறி நடிக்க
    வந்தனர். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த நிலை
    உருவானது. பெண் நடிகைகளில் குறிப்பிடத் தகுந்தவர்கள்
    பாலாம்பாள், பாலாமணி, அரங்க நாயகி, கோரங்கி,
    மாணிக்கம், டி.டி.தாயம்மாள், வி.பி.ஜானகி
    ஆகியோர்
    ஆவர்.

    அந்தக் காலக்கட்டத்தில் புகழ்வாய்ந்து இருந்த மொத்த
    நாடக சபைகள் அறுபத்து ஒன்பது. அவற்றில் ஆறுசபைகளைப்
    பெண்களே ஏற்று நடத்தி வந்தனர்.

    பாலாமணி அம்மாள் பாலாமணி அம்மாள் நாடகக்
    கம்பெனி
    யை நடத்தி வந்தார். வி.பி.ஜானகி அம்மாள்
    காஞ்சிபுரம் ஸ்ரீ விஜய கந்தர்வகான சபையையும்,
    பி.இரத்தினம்பாள் ஸ்ரீ கணபதி கான சபையையும்
    நடத்தி வந்தனர். வேதவல்லி தாயார் சமரச கான
    சபை
    யையும், விஜயலட்சுமி கண்ணாமணி ஆகிய இருவரும்
    விஜய     கந்தர்வ     நாடக சபையையும் நடத்தி
    வந்தனர். பி.இராஜத்தம்மாள் ஸ்ரீ மீனாம்பிகை நாடக
    சபை
    யை நடத்தி வந்தார்.

    பெண்கள் நாடக சபை நடத்தி வந்தவர்களுள் மிகுந்த
    பேரும் புகழும் பெற்றவர் பாலாமணி அம்மையார் ஆவார்.
    இவர் காசி விசுவநாத முதலியாரின் டம்பாச்சாரி விலாசத்தை
    மீண்டும் மீண்டும் அரங்கேற்றிப் பேரும் புகழும் பெற்றதுடன்
    நல்ல வருமானத்தையும் ஈட்டினார். இருப்பினும் கோரமான
    வறுமைப் பிடியில் இவரது முதுமை வாழ்க்கை மதுரையில்
    முடிந்தது.

    2.4.4 நாடக இலக்கண நூல்கள்

    நாடகக் கலையை விளக்கமாகக் கூறும் பழந்தமிழ்
    நூல்கள் எவையும்     கிடைக்காத நிலையில் நமக்குக்
    கிடைத்திருப்பன இருபதாம் நூற்றாண்டு நாடக விளக்க
    நூல்களே ஆகும். பரிதிமாற் கலைஞர் என அறியப்படும்
    வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரியார், நாடக இயல்
    என்னும் சிறந்த நாடக நூலை எழுதியுள்ளார்.

    நாடகம் என்றால்     என்ன? அது எத்தனை
    வகைப்படும்? நாடகத்தை     எப்படி எழுத வேண்டும்;
    நடிப்புக்குரிய இலக்கணங்கள் எவை என்பன போன்ற
    செய்திகளைப் பரிதிமாற் கலைஞர் தம் நாடக இயல்
    என்னும் நூலில் விளக்குகிறார். சுவாமி விபுலானந்த
    அடிகள், மதங்க சூளாமணி
    என்னும் நாடக ஆராய்ச்சி
    நூலை வெளியிட்டுள்ளார். நாடக அமைப்புக் குறித்த பல
    செய்திகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

    சுவாமி     வேதாசலம்
        என்னும் மறைமலை
    அடிகளார்
    , காளிதாசரின் சகுந்தல நாடகத்தைத் தமிழில்
    மொழிபெயர்த்தார். அதில் நாடகத்தைப் பற்றிய பல
    ஆராய்ச்சிக் குறிப்புகளைத் தந்துள்ளார்.

    பத்தொன்பதாம்     நூற்றாண்டின்     பிற்பகுதியில்
    நூற்றுக்கணக்கான நாடகங்கள்     உருவான நிலையில்
    அவற்றை நெறிப்படுத்துவதற்கு ஏற்ற இலக்கண நூல்கள்
    தோன்றாவிட்டாலும் மேற்காட்டிய நூல்கள் ஓரளவு நாடக
    நெறிமுறைகளை உருவாக்கின.
     
    2.4.5 விடுதலை இயக்க நாடகங்கள்

    இந்தியாவில் விடுதலை வேட்கை உருவான கால
    கட்டத்தில்     விடுதலை     உணர்வூட்டும் நாடகங்கள்
    எழுதப்பட்டன. ஆங்கிலேயருக்கு வரி கொடுக்க மறுத்து
    தூக்குக் கயிற்றில் தொங்கிய வீரபாண்டிய கட்டபொம்மன்
    வரலாறு     நாடகமாகியது. கட்டபொம்மு கூத்து என்னும்
    நாட்டுப்புறப் பாடல் வடிவிலும் பின்னர் நாடக வடிவிலும்
    கட்டபொம்மன் கதை உருவானது. இதுதவிர பூலித்தேவன்,
    ஊமைத்துரை, பெரியமருது, சின்னமருது, ராஜா தேசிங்கு,
    திப்பு சுல்தான், கான் சாகிபு ஆகியோரின் வீரம் நிறைந்த
    வரலாறுகளும் நாடகங்களாக எழுதப்பட்டன.

    விடுதலை     இயக்கத்தின்     முதல்     நாடகமாகக்
    கருதத்தக்கது ஸ்ரீ ஆரிய சபா என்னும் நாடகம் ஆகும்
    என்று நாடக ஆய்வாளர்     டாக்டர்     குமாரவேலன்
    குறிப்பிடுகிறார். இந்த     நாடகம் 1894 ஆம் ஆண்டு
    எழுதப்பட்டது. இந்நாடகம் அன்றைய காங்கிரசின் கொள்கை
    விளக்கமாக அமைந்தது.

    இந்திய     விடுதலையைப் பற்றிய சித்தாந்தமும்
    செயல்திட்டமும் தெளிவாக உருவான போது அவற்றை
    விளக்கும் நாடகங்களும் தமிழில் தோன்றின. இசை வளம்
    பெற்ற நாடகப் பாடல்களும் உருவாயின.
     
  • நாடக மேடையில் இசை

  •  
    மதுரகவி பாஸ்கர தாஸ், பூமி பாலக தாஸ்,
    ராஜா சண்முக தாஸ், லெட்சுமண தாஸ், இசக்கி முத்து
    வாத்தியார்,     ரெங்கராஜ்     வாத்தியார்,     கோவை
    ஐயாமுத்து
    போன்ற பலர் விடுதலை உணர்வை ஊட்டும்
    பாடல்களை நாடக மேடைக்கு ஏற்றவாறு எழுதினர். மேலும்
    பாரதியார், பாரதிதாசன், கவியோகி சுத்தானந்த பாரதியார்,
    நாமக்கல்     கவிஞர்,     எஸ்.டி.சுந்தரம்     ஆகியோரின்
    பாடல்களும் மேடைகளில் பாடப்பட்டன.

    நடிக மணி விஸ்வநாததாஸ், எம்.எம்.சிதம்பரநாதன்,
    எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள், பி.யு.சின்னப்பா,
    எம்.பி. அப்துல் காதர், பி.எம்.கமலம், டி.ஆர்.கோமளம்,
    தி.க.சண்முகம்
    போன்ற பலரும் விடுதலை இயக்கப்
    பாடல்களை நாடக மேடையில் பாடி மக்களை எழுச்சி கொள்ளச்
    செய்தனர்.

    தொழில்முறை நாடக மேடைகளில் விடுதலை வேட்கையை
    ஊட்டுவதற்காக எழுந்த நாடகங்களில் தெ.பொ.கிருஷ்ணசாமிப்
    பாவலரின்
    நாடகங்கள் குறிப்பிடத்தகுந்தவை. இவையன்றி
    வெ.சாமிநாத சர்மாவின் பாணபுரத்து வீரன், எஸ்.டி.சுந்தரத்தின்
    கவியின் கனவு, கோவை ஐயாமுத்துவின் இன்பசாகரன் ஆகிய
    நாடகங்கள் பலமுறை மேடை ஏறின. இந்தியா விடுதலை
    அடைந்த பின்னரும் கூட விடுதலையின் சிறப்பினைக் கூறும்
    பல நாடகங்கள் எழுதப்பட்டன.
     

    2.4.6 திராவிட இயக்க நாடகங்கள்


    1944 ஆம் ஆண்டு தமிழ் மாகாண நாடகக் கலை
    அபிவிருத்தி மாநாடு ஈரோட்டில் நடந்தது. இந்த மாநாடு
    தந்த எழுச்சி திராவிட இயக்க நாடகங்கள் உருவாவதற்கு
    ஊக்கம் தந்தது.

    பாவேந்தர் பாரதிதாசன்
        
    பாவேந்தர் பாரதிதாசன் இந்த மாநாடு நடப்பதற்கு
    ஐந்து ஆண்டுகட்கு முன்னரே அதாவது 1939 இல்
    வீரத்தாய் என்னும் கவிதை நாடகத்தையும் , இரணியன்
    அல்லது இணையற்ற வீரன்
    என்னும் நாடகத்தையும்
    எழுதினார். பாவேந்தர் மொத்தம் 50 நாடகங்களை
    எழுதியுள்ளார்.     அத்தனை     நாடகங்களும்     தமிழரின்
    நாகரிகம்,     பண்பாடு,     பகுத்தறிவு     ஆகியவற்றின்
    சிறப்புகளையும் தனித்தன்மையையும் எடுத்துக் கூறுவன.

    பேரறிஞர் அண்ணா
             
    பாவேந்தருக்கு அடுத்த     நிலையில் பேரறிஞர்
    அண்ணா
    முழுநீள நாடகங்களையும் ஓரங்க நாடகங்களையும்
    எழுதியுள்ளார். சந்திரோதயம், வேலைக்காரி, ஓர் இரவு,
    நீதிதேவன் மயக்கம், சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்,
    காதல் ஜோதி
    ஆகியவவை அண்ணாவின் நாடகங்களில்
    குறிப்பிடத்தக்கவை.

    அண்ணாவை அடுத்து கலைஞர் கருணாநிதி எழுதிய
    தூக்குமேடை, ஒரே முத்தம், மணிமகுடம், உதய சூரியன்,
    காகிதப் பூ
    ஆகிய நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை.
    சலகண்டபுரம் ப.கண்ணன் எழுதிய சீர்திருத்த நாடகங்களுள்
    குறிப்பிடத்தக்கன மின்னொளி, கன்னியின்     சபதம்,
    நந்திவர்மன், மானமறவன், வீரவாலி
    ஆகிய நாடகங்களாகும்.

    திராவிட இயக்க எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்க
    மற்றொருவர் ஏ.கே.வேலன் ஆவார். இவர் இராவணன்,
    எரிமலை, கங்கைக்கு அப்பால், கம்சன், கும்பகர்ணன்,
    கைதி, சிலம்பு, சூறாவளி, சாம்பாஜி
    எனப் பல நாடகங்கள்
    எழுதியுள்ளார். போர்வாள், இரக்கத் தடாகம்,
    விஷக்கோப்பை, சாய்ந்த கோபுரம்
    எனப் பல நாடகங்களை
    சி.பி.சிற்றரசு எழுதினார்.

    முதல் விசாரணை, பேசும் ஓவியம், தந்தையும்
    மகனும், பாவம்
    ஆகிய நாடகங்களைத் தில்லை வில்லாளன்
    எழுதினார்.மேலும் எஸ்.எஸ்.தென்னரசு,கே.ஜி.இராதாமணாளன்,
    திருவாரூர் கே.தங்கராசு,     ஏ.வி.பி. ஆசைத்தம்பி,
    இராம.அரங்கண்ணல், இரா.செழியன்
    எனப்     பலரும்
    திராவிட இயக்க நாடகங்களை எழுதியுள்ளனர்.
     

    2.4.7 பிற நாடகங்கள்

    விடுதலை இயக்கம், திராவிட இயக்கம் ஆகிய
    கொள்கை உணர்வுகளைக் கடந்து படைப்பாக்க அடிப்படையில்
    பலர் நாடகங்களை எழுதி நடித்து வந்தனர்.

    அமெச்சூர் நாடக சபாக்கள் என்னும் பெயரில் இயங்கும்
    பல சபைகள் மேடை நாடகங்களை நடத்தி வருகின்றன.
    திரையுலகில் பல திரைப்படங்களை     இயக்கி வரும்
    கே.பாலச்சந்தரின் பல திரைப்படங்கள் அவரது மேடை
    நாடகங்களேயாகும்.கோமல் சுவாமிநாதனின் தண்ணீர் தண்ணீர்,
    செக்கு மாடுகள், பெருமாளே சாட்சி,கருப்பு வியாழக்கிழமை
    ஆகிய நாடகங்கள் இரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவை.

    நகைச்சுவை நாடகங்கள் எழுதுவதில் திறமை பெற்றிருந்தவர்
    கோமதி சுவாமிநாதன். இவர் கல்யாணச் சாப்பாடு, எல்லாம்
    நன்மைக்கே
    போன்ற நகைச்சுவை நாடகங்களையும், கலாட்டா
    கல்யாணம், புயலும் தென்றலும், எதிரொலி, ஆசைக்கு
    அளவில்லை
    போன்ற மேடைக்குரிய பெரிய நாடகங்களையும்
    எழுதினார்.

    தனிக் குடித்தனம், ஊர்வம்பு, கால்கட்டு, அடாவடி
    அம்மாக்கண்ணு
    , எனப் பல நகைச்சுவை நாடகங்களை மெரீனா
    எழுதினார். பல வானொலி நாடகங்களையும் இவர்
    படைத்துள்ளார்.

    சோ
                       
    அரசியல் எள்ளல்     நாடகங்கள் பலவற்றைச் சோ
    எழுதியுள்ளார். முகம்மது பின் துக்ளக், யாருக்கும்
    வெட்கமில்லை, உண்மையே உன் விலை என்ன?,மனம் ஒரு
    குரங்கு
    எனப் பல நாடகங்களை இவர் எழுதியுள்ளார்.

    மௌலி பல நாடகங்களை எழுதி இயக்கி
    நடித்துள்ளார். ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது, அம்மி
    மிதிக்கப் போலிஸ் வந்தது, மற்றவை நேரில், மத்தாப்பு
    வாங்க காசு வந்தாச்சு
    உட்படப் பல நாடகங்களை இவர்
    எழுதியுள்ளார்.

    எஸ்.வி.சேகர்
    கிரேசி மோகன்
    காத்தாடி
    ராமமூர்த்தி

    இக்காலக் கட்டத்தில் தமிழ் நாடக மேடைகளில்
    முழுமையாகச் செல்வாக்குச் செலுத்தி வருபவர்களுள் குறிப்பிடத்
    தக்கவர்கள் எஸ்.வி.சேகர், கிரேசி மோகன், காத்தாடி
    ராமமூர்த்தி
    போன்றோர். முழுக்க முழுக்க இவர்கள்
    நகைச்சுவை நாடகங்களிலேயே கூடுதலாகக் கவனம் செலுத்தி
    வருகின்றனர்.

    விசு

    விசுவின் நாடகப் பணி குறிப்பிடத் தக்கதாகும்.
    மணல்கயிறு உட்பட இவரது பல மேடை நாடகங்கள்
    திரையுலகிலும் மிகுந்த வெற்றியை ஏற்படுத்தி உள்ளன. நாடகப்
    பணியாற்றியவர்களுள்     குறிப்பிடத்தக்க     இன்னொருவர்
    வி.கோபாலகிருஷ்ணன் ஆவார். நாடகங்களின் செல்வாக்கு
    குறைந்து வரும் இக்காலத்தில் இவர் தொடர் நாடகங்களை
    நடத்தியும் தானே நடித்தும் நாடகக் கலைக்கு ஒரு வளர்ச்சியை
    ஏற்படுத்தினார்.

    வீதி நாடக அமைப்பு
             
    நாடகங்களைப் பரிசோதனை முறையில் சிலர் நடத்தி
    வருகின்றனர். அவ்வாறு சோதனை முறை நாடகங்களில் வெற்றி
    பெற்றவர் ந.முத்துசாமி ஆவார். நாற்காலிக்காரர், கடவுள்,
    அப்பாவும் பிள்ளையும், காலம் காலமாக
    ஆகிய நாடகங்கள்
    இவரின் சோதனை முறை நாடகங்களுக்குச் சான்று பகர்வனாகும்.
    மேலும், வீதி நாடக அமைப்பு, நிஜ நாடகக் குழு, பரீக்ஷா
    ஆகிய அமைப்புகளும் சோதனை முறை நாடகங்களை நடத்தி
    வருகின்றன.

        தமிழ்நாடு அரசின் முயற்சியால் உருவான இயலிசை நாடக
    மன்றம்
    நாடகக் கலைஞர்களை ஊக்குவித்து நாடகக் கலை
    அழியாமல் பாதுகாத்து வருகிறது.

    Tags   :

    புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 19:38:21(இந்திய நேரம்)