Primary tabs

பம்மல் சம்பந்த முதலியார் 1.2.1873ஆம் ஆண்டு பிறந்தார்.
இவரது பெற்றோர் பம்மல் விஜயரங்க முதலியார் - மாணிக்க
வேலு அம்மாள். பம்மல் என்பது இவரது ஊர்ப் பெயர் ஆகும்.
92 ஆண்டுக் காலம் நிறை வாழ்வு வாழ்ந்த சம்பந்த முதலியார்
24.9.1964ஆம் ஆண்டு மறைந்தார்.
இவர் ஆற்றிய பணிகளுக்காக 1916ஆம் ஆண்டு
இராவ்பகதூர் பட்டமும் 1959ஆம் ஆண்டு பத்மபூஷண்
பட்டமும் வழங்கப்பட்டன. 1944ஆம் ஆண்டில் நடைபெற்ற
கலைவிழாவில் இவருக்கு நாடகப் பேராசிரியர் பட்டம்
வழங்கப்பட்டது. நாடக உலகத்திற்கு இவர் ஆற்றியுள்ள பணிகளை
எண்ணித் தமிழ் நாடக உலகம் இவரைத் தமிழ் நாடகத்
தந்தை என்று குறிப்பிடுகிறது. அதே போல் சங்கரதாஸ்
சுவாமிகளை தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் என்று
குறிப்பிடுகிறது.
பம்மல் சம்பந்த முதலியாரின் வாழ்நாள் பணிகளை
இருபிரிவாகப் பிரிக்கலாம். அவை பின்வருமாறு
1) சமுதாயப் பணிகள்
2) கலை இலக்கியப் பணிகள்
சம்பந்த முதலியார் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியிலும்,
சட்டக் கல்லூரியிலும் முறையே பட்டப் படிப்பையும் சட்டப்
படிப்பையும் முடித்தார். தகுதி மிக்க கல்வி இவருக்கு நிரம்ப
இருந்ததால் அக்கல்வித் தகுதிக்குரிய பணிகளும் இவரைத் தேடி
வந்தன.
பல்கலைக்கழகத்திலும் தமிழ் வளர்ச்சிப் பேரவை
உறுப்பினராக இருந்தார்.
இவையெல்லாம் சம்பந்த முதலியாரின் சமூகப் பணிகளாகும்.
சம்பந்த முதலியாரின் கலை இலக்கியப் பணிகளில்
குறிப்பிடத்தக்கவை.
1) நாடகக் கலைப்பணி
2) திரைப்படக் கலைப்பணி
இவையன்றி, இவர் தமிழ் மொழி வரலாற்றுப் பணி, சமய
இலக்கிய வரலாற்றுப் பணி, இயற்கை மருத்துவ இலக்கியப்
பணிகளிலும் ஈடுபட்டார்.இங்கே அவரது நாடகக் கலைப்பணியை
மட்டும் அறியலாம்.
நாடகக் கலையைத் திட்டமிட்டு முறையாக வளர்க்க
எண்ணிய சம்பந்த முதலியார் அதற்காக ஓர் அமைப்பை
உருவாக்க விரும்பினார். அவ்வாறு உருவான அமைப்பே
சுகுணவிலாச சபை. இது, தொழில் முறை அல்லாத நாடக
சபையாகும். இதனை, ஆங்கிலத்தில் அமெச்சூர் சபா என்று
கூறுவர். 1891ஆம் ஆண்டு இச்சபை நிறுவப்பட்டது.
சுகுணவிலாச சபையின் தோற்றமும், சம்பந்த முதலியார்
அச்சபைக்காக எழுதிய பல்வேறு வகைப்பட்ட நாடகங்களும்
தமிழ் நாட்டில் பல அமெச்சூர் நாடக சபைகளைத்
தோற்றுவித்தன.
அமெச்சூர் நாடக சபையாகத் தன் சபையைச் சம்பந்த
முதலியார் அமைத்து நாடகத்தை உருவாக்கி நடித்தார். அதே
வேளையில் அவரது நாடகங்கள் தொழில் முறை நாடக
சபையினராலும் திறம்பட நடித்துக் காட்டப்பட்டன.
சுகுணவிலாச சபையில் ஆர்.கே. சண்முகம் செட்டியார்,
சத்தியமூர்த்தி அய்யர், சர்.சி.பி. இராமசாமி அய்யர் போன்ற
பெரியவர்களெல்லாம் நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க
செய்தியாகும்.