Primary tabs
1.3 தேசிய இயக்கத் தாக்கம்
தேசிய இயக்கத்தைச் சார்ந்த தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர், டி.கே.எஸ்.சகோதரர்கள் முதலானோர் தொடக்கத்தில் புராண நாடகங்களை நடத்தினார்கள். பிரகலாதா, அரிச்சந்திரா, ராஜா பர்த்ருஹரி, வள்ளி திருமணம் முதலான நாடகங்களைத் தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர் நடத்தியிருக்கிறார். டி.கே.எஸ். சகோதரர்கள் வள்ளி திருமணம், அபிமன்யு சுந்தரி, சதிஅநுசூயா, நந்தனார் முதலான நாடகங்களை நடத்தினார்கள். வெ. சாமிநாத சர்மா, லவகுசா நாடகத்தைப் படைத்தார்.
தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர்
பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக
புராணக் கதைகளில் வீரவுணர்வு ஊட்டக் கூடியவற்றை விடுதலை எழுச்சி ஊட்டுவதற்காகத் தேசிய இயக்கத்தினர் நாடகமாக்கி நடத்தினார்கள். இவ்வகையில் சாமிநாதசர்மா, அபிமன்யு நாடகத்தை எழுதினார். அடுத்த நிலையில், புராண நாடக வசனங்களிலும் பாடல்களிலும் தேசியக் கருத்துகள் புகுத்தப்பட்டன. மதுரகவி பாஸ்கரதாஸ், ராஜா சண்முகதாஸ், சுந்தரவாத்தியார், உடுமலை முத்துசாமிக் கவிராயர், கவிக்குஞ்சரவாத்தியார், குடந்தை வீராசாமி வாத்தியார், வீரநாதக் கோனார், பூமி பாலகதாஸ், எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸ் முதலானோர் நாடகங்களில் தேசியப் பாடல்களைப் புகுத்தினார்கள்.
தேசியக் கருத்துடைய பாடல்
வள்ளி திருமணம் நாடகத்தில், வள்ளி குருவி ஓட்டுகையில் ‘வெள்ளைக் கொக்குகளா !’ என்று வெள்ளையரைக் குறிப்பிட்டுப் பாடல் பாடுவது போல் காட்சியை அமைத்தார்கள்.
வெள்ளை
வெள்ளைக் கொக்குகளா வெகுநாளாய் இங்கிருந்து
கொள்ளை அடித்தீர்களா ஆலோலங்கிடிச்சோ -
இனி
கோபம்வரும் போய்வாருங்கள்
ஆலோலங்கிடிச்சோ - அந்தக்
காந்தி மகத்துவத்தால் கதிர்கள் விளைந்து
இங்கே
காய்ந்து கிடக்குதென்று ஆலோலங்கிடிச்சோ -
அதைத்
தட்டிப் பறிக்க வந்தீரோ ஆலாலங்கிடிச்சோ
என்ற பாடலில்
மதுரகவி பாஸ்கரதாஸ் வெள்ளைக்காரர்களுக்கு வெள்ளைக் கொக்கு என்று குறியீடமைத்துத்
தேசியக் கருத்தைப் பரப்பினார். திரௌபதி, அரிச்சந்திரன், கிருஷ்ணன், முருகன்,
நாரதர், பாண்டவர்கள் என எல்லாப் புராணப் பாத்திரங்களும் நாடக மேடையில் தேசியப்
பாடலைப் பாடினார்கள்.