Primary tabs
3.2 நாடக முன்னோடிகள்
தொடக்கக் காலத்தில், பல நாடகங்களை எழுதி, நாடகக் கலை வளர்த்தவர்களுள் சங்கரதாஸ் சுவாமிகள், கந்தசாமி முதலியார், பம்மல் சம்பந்த முதலியார் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.
வீரபாண்டிய கட்டபொம்மன், தேசிங்கு ராஜா, பூதத்தம்பி, மதுரை வீரன் முதலானோரின் வீர வரலாறுகளை இவர் நாடகமாக ஆக்கியுள்ளார். இசுலாமிய வரலாற்று நாடகங்களாக புரோஸ்ஷா, நூர்ஜஹான், அலிபாதுஷா, அலாவுதீன், லைலா மஜ்னு முதலான நாடகங்களையும் படைத்திருக்கிறார். ரோமியோ ஜூலியட், ஜூலியஸ் சீசர் முதலான ஷேக்ஸ்பியர் நாடகக் கதைகளையும் நாடகமாக்கியுள்ளார்.
கண்டிராஜா வரலாற்றைப் பலரும் நாடகமாக ஆக்கியிருக்கின்றார்கள். கந்தசாமி முதலியார் அக்கதையை ஆற்றல் மிக்க காட்சிகளுடன் நாடகமாக்கம் செய்தார். பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் மேடையில் காட்சிகளை அமைத்தார். குறிப்பாக ஒரு காட்சியை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். குழந்தையின் தலையை உரலில் போட்டு இடிக்கும் நிகழ்ச்சி ஒன்று நாடகக் கதையில் உண்டு. இக்காட்சியில் இளநீரைக் குழந்தை தலைபோலச் செய்து அதற்குள் சிவப்பு நீரை நிரப்பி உரலில் போட்டு இடிக்கையில், இடிக்கும் பெண்ணின் புடவையில் சிவப்பு நீர் தெறிப்பது போலக் காட்சி அமைத்திருந்தார். பார்ப்பவர்களுக்கு ரத்தம் தெறிப்பது போன்ற அதிர்ச்சியை இக்காட்சி ஏற்படுத்தியது. கந்தசாமி முதலியார் ராஜபக்தி, போஜன், ராமதாஸ் முதலான வரலாற்று நாடகங்களையும் படைத்து இயக்கியுள்ளார்.
கந்தசாமி முதலியார்
பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக
இவரது கற்பனை வரலாற்று நாடகமான மனோகரா புகழ்பெற்றது. பல நாடகக் குழுக்கள் இந்நாடகத்தை நடத்தியிருக்கின்றன. இது திரைப்படமாகவும் ஆக்கப்பட்டது. புத்த அவதாரம் என்னும் நாடகத்தையும் இவர் எழுதியிருக்கிறார். சித்தார்த்தரின் வாழ்க்கையில் நிகழ்ந்த போட்டி பூசல், ஆடல், பாடல், காதல், பிரிவு, தவிப்பு, துறவு, ஞானம், போதனை, சீடர் கூட்டத்தைப் பெறுதல், சமாதியடைதல் என எல்லாவற்றையும் இந்நாடகத்தில் சித்திரித்திருந்தார். இவரது ரஜபுத்திர வீரன் நாடகமும் குறிப்பிடத் தக்கது. ஷேக்ஸ்பியர் படைத்த வரலாற்று நாடகங்களைத் தழுவி அமலாதித்தன் (Hamlet), விரும்பிய விதமே (As You Like It), சிம்ஹளநாதன் (Cymbeline) எனப் படைத்துள்ளார். வாணிபுரத்து வணிகன் (Merchant of Venice), மகபதி (Macbeth) முதலான நாடகங்களையும் இவ்வாறே படைத்திருக்கிறார். இந்நாடகங்களில் தமிழ் மக்களின் சுவையுணர்ச்சிக்கு ஏற்றவாறு பெயர்களை மாற்றி அமைத்துள்ளார்.