தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P10244-4.3 பம்மல் சம்பந்தனாரின் நாடகங்கள்

4.3 பம்மல் சம்பந்தனாரின் நாடகங்கள்

ஆங்கில மயப்பட்ட நடுத்தர வர்க்கத்தின் குரலாகவும் எழுத்து வாசிப்பின் அடிப்படையிலும் நாடகங்கள் மாறின. தொழில் முறை மற்றும் பயில்முறை நிகழ்த்து கலையாக நாடகம் ஆகியது. தமிழகத்தில் அப்போதிருந்த பார்சி மராத்தி நாடகக் குழுக்கள் போலவே நாடக சபைகள் தோற்றுவிக்கப்பட்டன. பம்மல் சம்பந்த முதலியாரின் சுகுணவிலாச சபா அத்தகைய சபைகளில் ஒன்று.

4.3.1 சீர்திருத்த நாடகங்கள்

நாடக உரையாடல்களில் பாடல்கள் குறைக்கப்பட்டன. பேசும் மரபு சார்ந்த இயல்பான வழக்குமொழி பயன்படுத்தப்பட்டது. அரங்க அமைப்பிலும் நாடக அமைப்பிலும் நடிப்பு முறையிலும் சம்பந்தனார் மாற்றங்களை ஏற்படுத்தினார். ஒழுங்கு, நேரக் கட்டுப்பாடு முதலானவை வலியுறுத்தப்பட்டன. புராண நாடகம், வரலாற்று நாடகம் என்பவற்றோடு சமூக நாடகங்களையும் அவர் நடத்தினார்.

பொன் விலங்குகள் நாடகம் சிக்கல்களால் அலைக்கழிக்கப்பட்ட குடும்பம் திரும்பவும் சீரடைந்து சிறப்பதைக் காட்டியது. குடும்ப வாழ்வு சீரானால் சமூக வாழ்வு சீரடையும் என்பதை இந்நாடகம் உணர்த்தியது. விஜயரங்கம் நாடகம் குடும்பத்தில் உருவாகும் ஐய வுணர்ச்சியினால் ஏற்படும் பிரிவை உணர்த்துகிறது. உத்தம பத்தினி நாடகம் கணவனால் மிகவும் கொடுமைப் படுத்தப்படும் பத்தினிப் பெண் அடையும் சோதனைகளைக் காட்டுகிறது. குறமகள் நாடகம் தாழ்ந்த குலத்தில் தோன்றியோரும் உள்ளத்தில் ஊறும் உணர்வில் உயர்குலத்தினரை ஒத்தவர்கள் என்பதை விளக்குகிறது. பிராமணனும் சூத்திரனும் நாடகம் சாதி அடிப்படையில் ஏற்றத் தாழ்வு காண்பது அறிவியலுக்கு ஒத்தது இல்லை என்ற கருத்தை வலியுறுத்துகிறது.

சதிசக்தி, வைகுண்ட வைத்தியம், சபாபதி முதலான நகைச்சுவை நாடகங்களையும் சம்பந்தனார் எழுதியுள்ளார். ஆயினும் இவரது நாடகங்களில் நாட்டு விடுதலை உணர்வின் பாதிப்பு என்பது இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 19:57:55(இந்திய நேரம்)