Primary tabs
நியூ பொயட்ரி என்று, ஆங்கிலத்தில் கூறப்படுவதைத்
தமிழில் புதுக்கவிதை என்று அழைத்தனர்.
- விளக்கம்
சுவைபுதிது, பொருள்புதிது, வளம்புதிது
சொற்புதிது சோதிமிக்க
நவகவிதை. (பாரதியார் கவிதைகள்)
என்று பாடுவதைப் புதுக்கவிதைக்குரிய விளக்கமாகக்
கொள்ளலாம். வல்லிக்கண்ணன், “ யாப்புமுறைகளுக்குக்
கட்டுப்படாமல், கவிதை உணர்வுகளுக்குச் சுதந்திரமான
எழுத்து உருவம் கொடுக்கும் இப்படைப்பு முயற்சி ‘வசனகவிதை’
என்றே அழைக்கப்பட்டது. பின்னர், ‘யாப்பில்லாக் கவிதை’,
‘இலகு கவிதை’,‘கட்டிலடங்காக் கவிதை’ (free verse) போன்ற
பெயர்களை இது அவ்வப்போது தாங்க நேரிட்டது”
(வல்லிக்கண்ணன், புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் ப.1)
என்று குறிப்பிடுகின்றார்.
‘தீ இனிது’ என்று கூறுகிறார் பாரதியார். தீ சுடும் என்று
சொன்னால் அது வசனம். தீ இனிது என்று சொன்னால் அது
கவிதை. இது ஏன்? வார்த்தை வெறும் விஷயத்தை மட்டும்
சொல்லாமல், உவமையைப்போல், உணர்வினிடம் பேசுமானால்
கவிதை பிறந்ததுவிடும். ‘தீ சுடும்’ என்னும் பொழுது ‘சுடும்’ என்ற
பதம் தீயின் குணத்தை அறிவுக்குத் தெரியப்படுத்துகிறது. ‘தீ
இனிது’ என்று சொன்னால் அறிவு அதை மறுக்கும். தீயாவது
இனிமையாவது என்று கலவரப்படும். ஆனால் உணர்ச்சி
ஏற்றுக்கொள்ளும். தீ இல்லையானால் ஊண் ஏது? உலகு என்பது
ஏது? அதனால் தான் ‘தீ இனிது’ என்பதை உணர்ச்சி
ஒப்புக்கொள்கிறது.” இது வல்லிக்கண்ணனின் கருத்தாகும்.
1930களில்தான் பாரதிமூலம் ஏற்பட்ட வசனகவிதை வளரத்
தொடங்கியது.பாரதிக்குப் பிறகு புதுக்கவிதை எழுதும் முயற்சியில்
ந.பிச்சமூர்த்தி சிறப்பிடம் பெறுகிறார்.அவர்,அவ்வப்போது கவிதை
எழுதிக்கொண்டிருந்தார். 1940களில் கலாமோகினி (மாதம்
இருமுறை வெளிவந்த இதழ்) தோன்றிய பிறகு புதுக்கவிதை
வேகத்தோடு வளர இடம் கிடைத்தது.
- மேலை இலக்கியத் தாக்கம்
துறைகளில் மேற்கே எழுந்த மாற்றத்தால், 18ஆம் நூற்றாண்டில்
உரைவழியே இலக்கியம் அறிமுகமாகிறது. இது இந்தியாவில்
19ஆம் நூற்றாண்டில் ஏற்படுகிறது. தமிழகத்தில் 1876இல் புதின
இலக்கியம் தோன்றிய பின்னரே, பாரதியால் கவிதை இலக்கியம்
தோன்றுகிறது. இதனால் என்ன மாற்றம் நிகழ்ந்தது?
- செய்யுள் நடை உரைநடைக்கு மாறியது. உதாரணம் சிறுகதை,
நாவல். - கவிதைதான் இலக்கியம் என்ற நிலைமாறி கதையும்
இலக்கியமாயிற்று. - செய்யுள் வழியேதான் கவிதை என்ற நிலைமாறி உரை
வழியேயும் கவிதை வளர்ந்தது.