தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

3.1 பாரதிதாசன்

3.1 பாரதிதாசன்
பாரதிதாசன்


     பாரதிதாசனின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம்,
புனைபெயர்கள்: புதுவை கே.சு. பாரதிதாசன், கே.சு.ஆர்.
கண்டெழுதுவான், கிண்டல்காரன், கிறுக்கன் ஆகியவையாகும்.
தந்தையார் பெயர் கனகசபை. தாயார் பெயர் இலக்குமி
அம்மையார்.      புதுச்சேரியில் 29.04.1891 அன்று
பிறந்தார். பிரெஞ்சு மொழிப்பள்ளி, தமிழ்ப்பள்ளி, கல்வே
கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றார். தமிழ், பிரெஞ்சு ஆகிய
மொழிகளை அறிந்திருந்தார். தமிழ்ப் புலவர் தேர்வில்
வெற்றி பெற்றார். 1909 முதல் 1946 வரை 37 ஆண்டுகள்
தமிழாசிரியராகப் பணியாற்றினார். தேசசேவகன், ஆத்மசக்தி,
தாய்நாடு, துய்ப்ளேக்சு, புதுவை முரசு, சுப்பிரமணிய பாரதி
கவிதா மண்டலம், முல்லை, குயில்
போன்ற இதழ்களின்
ஆசிரியராகவும் பணியாற்றினார். இசையோடு பாடுவதிலும்,
நாடகங்களில்     நடிப்பதிலும்     ஆற்றல் உடையவர்.
திரைப்படங்களுக்கு வசனமும் (உரையாடலும்), மற்றும்
ஏறத்தாழ 20 படங்களுக்குப் பாடல்களும் எழுதியுள்ளார்.
1946ஆம் ஆண்டு கவிஞரின் 55வது வயது பிறந்த நாள்
விழாக்கொண்டாட்டத்தில்     25000 ரூபாய் பொற்கிழி
வழங்கப்பட்டது. பாரதிதாசன் 21.04.1964 செவ்வாய்க்கிழமை
இயற்கை எய்தினார். அவரைப் புரட்சிக் கவிஞர், பாவேந்தர்
என்று அழைத்து மகிழந்தனர். 1965இல் புதுவையில்
கடற்கரையை ஒட்டி, “பாரதிதாசன் நினைவு மண்டபம்”
அமைக்கப்பட்டது. 1968இல் உலகத்தமிழ் மாநாட்டின்
சார்பில் சென்னைக் கடற்கரையில் பாரதிதாசன் முழு உருவச்
சிலை நிறுவப் பெற்றது . 1970இல் கவிஞரது
பிசிராந்தையார் நாடகத் தமிழ் நூலுக்குச் “சாகித்ய அகாதமி”
பரிசு வழங்கப்பட்டது. 1972இல் பாவேந்தரின் முழு உருவச்
சிலையை, புதுவை அரசு அரசினர் பூங்காவில் நிறுவியது.
1982இல்     திருச்சியில் புதியதாகத்     தொடங்கப்பட்ட
பல்கலைக்கழகத்திற்கு, பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைக்கழகம்
என்ற பெயரைத் தமிழக அரசு சூட்டியது. 1990ஆம் ஆண்டு
அவரது நூற்றாண்டு விழாவையொட்டித் தமிழக அரசு அவர்தம்
நூல்களை அரசுடைமையாக்கியது.

3.1.1 பாரதியாரும் பாரதிதாசனும்

     பாவேந்தர் என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட
பாரதிதாசன், பாரதியாரை முதன்முதலில் புதுவை வேணு
வீட்டுத் திருமணத்தில் சந்தித்தார். இந்தப் புதிய உறவு குரு-சீடர்
முறையில் ஏற்பட்டது. பாரதியாரின் கவிதைகளால் ஈர்க்கப்பட்ட
பாரதிதாசன்,

     நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா
     காடு கமழும் கற்பூரச் சொற்கோ!
     கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்
     திறம் பாட வந்த மறவன் புதிய
     அறம் பாட வந்த அறிஞன் நாட்டிற்
     படரும் சாதிப் படைக்கு மருந்து!
     மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்
     அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்
     என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்
     தமிழால், பாரதி தகுதி பெற்றதும்
     தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும்
     எவ்வாறென்பதை எடுத்துரைக் கின்றேன்.

                    (பாரதிதாசன் கவிதைகள்)


என்ற பாடல் வரிகள் மூலம் பாரதியைப் புகழ்ந்து பாடுகின்றார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 20:11:01(இந்திய நேரம்)