Primary tabs
சமுதாய முன்னேற்றத்திற்குப் பெண் முன்னேற்றம்
இன்றியமையாதது என்பது புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின்
கருத்து. குடும்ப விளக்கில் ஒரு பெண் எப்படி இருக்க
வேண்டும் என்பதையும், இருண்ட வீட்டில் ஒருபெண் எப்படி
இருக்கக் கூடாது என்பதையும் மிகவும் அழகாகச் சித்திரித்துக்
காட்டுகின்றார்.
பெண் கல்வி, மறுமண உரிமை, குழந்தை மண ஒழிப்பு, காதல்
மணம் ஆகிய கருத்துகளைத் தம் பாடல்களில் வலியுறுத்துகிறார்.
படியாத பெண்ணினால் தீமை - என்ன
பயன் விளைப் பாளந்த ஊமை
(இசையமுது)
என்று கேட்ட கவிஞர் கல்வியில்லாப் பெண்கள் களர்நிலம்
என்றும், கல்வி கற்ற பெண்கள் திருந்திய கழனி என்றும்
கூறுகின்றார்.
நன்மக்கட் பேறு பற்றி நானுரைப்பதொன்றுண்டாம்
ஈண்டுக் குழந்தைகள் தாம் எண் மிகுத்துப் போகாமல்
வேண்டும் அளவே விளைத்து மேல் வேண்டாக்கால்
சேர்க்கை ஒழித்துக் கருத்தடையேனும் செய்க
என்றுரைக்கும் கவிஞர்
காதலுக்கு வழி வைத்துக் கருப்பாதை சாத்தக்
கதவொன்று கண்டறிவோம் இதிலென்ன குற்றம்
என்று கேட்கின்றார்.
பெற்றோர் தம் பெண்ணை உணர்ச்சியுள்ளவளாக விருப்பு,
வெறுப்பு உடையவளாக மதிப்பதே இல்லை. கல்லென அவளை
மதிப்பர். கண்ணில் கல்யாண மாப்பிள்ளை தன்னையும் காட்டார்.
ஆதலால் ‘கற்றவளே! பெற்றோரிடம் உன் விருப்பத்தைச் சொல்
அவர் நியாயம் தாராவிட்டால் விடுதலை மேற்கொள்’ எனக்
கூறுகின்றார்.
பெண் கல்வி என்பது பெண் விடுதலைக்கு வேர் என்பது
பாவேந்தரின் அசைக்க முடியாத நம்பிக்கை. பருவம் அடையாத
இளஞ்சிறுமியை முதியவனுக்கு மணம் செய்து கொடுக்கும் கொடிய
திருமணத்தை மூடத்திருமணம் என்றுரைக்கின்றார். அதேபோல்
சின்னஞ்சிறு குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைக்கின்ற
அவல நிலையைக் கண்டு நொந்தவர், குழந்தை மணம் செய்யக்
கூடாது எனப் பல பாடல்களை அமைக்கின்றார்.
குடும்ப வாழ்வில் ஆணும் பெண்ணும் சமபங்கு எடுக்க
வேண்டும் என்பதைக் குடும்ப விளக்கும், குண்டுக்கல்லும்
என்னும் நாடகத்தில் விளக்குகின்றார்.
பாரதிதாசனின் பாடல்கள் விதவை மறுமணத்தை
ஆதரிக்கின்றன. மனைவி இறந்துவிட்டால் புதுமாப்பிள்ளை.
ஆணொருவன் மறுமணம் செய்து கொள்வதை ஏற்றுக் கொள்ளும்
சமுதாயம் பெண்ணிற்கு அந்த உரிமையை அளிக்காததைக்
கண்டிக்கின்றார்.

வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்
மணவாளன் இறந்தால் பின் மணத்தல் தீதோ
பாடாத தேனீக்கள் உலவாத் தென்றல்
பசியாத நல்வயிறு பார்த்ததுண்டோ!