Primary tabs
கவிமணி தொடக்கப் பாடசாலையில் ஆசிரியப் பணி ஏற்றார்.
பிறகு போதனா முறைப் பாடசாலையில் பணியைத் தொடர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து மகாராசா பெண்கள் உயர்தரப்
பாடசாலையில் தமிழாசிரியரானார். அங்கிருந்தவாறே
திருவனந்தபுரத்திலிருந்து வெளிவந்த தமிழன், கேரளா
சொசைட்டி பேப்பர் முதலிய பத்திரிகைகளுக்குப் பாடல்களும்,
ஆராய்ச்சி உரைகளும் எழுதினார்.
கவிமணியின் கவிதையில் கனிவும், இனிமையும் மிகுந்திருக்கும்;
கடுமை இருக்காது. எளிய வார்த்தைகளால் எழுதப்பட்டுள்ள
கவிதைச் சந்தம் மனத்தில் எளிதில் பதியும். இதற்குச் சிறந்த
சான்று ‘மலரும் மாலையும்’ கவிதைத் தொகுதிப்பாடல்களாகும்.

வண்டி அற்புதப் பொருளாம் - வண்டி
மாடும் அற்புதப் பொருளாம்;
வண்டி பூட்டும் கயிறும் - என்றன்
மனத்துக் கற்புதப் பொருளாம்
(மலரும் மாலையும், 45)
என்று பாடியுள்ள கவிதை, கவிதைக்கு எந்தப் பொருளும்
கருப்பொருளே என்பதனை நினைவு படுத்துகிறது அல்லவா?
கவிதை என்பது பறக்கும் குருவியைப் போல என்றும்,கறக்கும்
பசுவும் அதன் கன்றும் துள்ளி வருவதைப் போலத் துள்ளி
வருவது என்றும் கூறுகிறார் கவிமணி. கவிதை வெளிவருவதற்கு
அழுத்தம் நிறைந்தவை மட்டுமே கருப்பொருளாக வேண்டும்
என்பதில்லை. ஒரு சாதாரண வண்டியும் கருப்பொருளாகலாம்.
அதை இழுத்துச் செல்லும் மாடும் கருப்பொருளாக அமையலாம்.
கவிதையில் ஈயும் தோழனாகலாம். எறும்பும் நமது
நேசத்திற்குரியதாகலாம். நாயும் நல்ல நண்பனாகலாம். நரியும்
கூட நட்புடன் பழகலாம்.கல் கதை கூறலாம். அதை இரு காதும்
கேட்டுக் குளிரலாம். புல்லின் பேச்சைக் கவிஞன் உற்றுக்
கேட்கலாம். பின் அதைப் புராணமாக விரித்துக் கூறலாம்.
ஈசனின் (சிவனின்) அருளால், உலகில் எந்தப் பொருளும்
கவிதைக்குரிய பொருளாகலாம். ஏனென்றால்,
உள்ளத்துள்ளது கவிதை - இன்பம்
உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
தெரிந்துரைப்பது கவிதை.
(மலரும் மாலையும், 45)
எனக் கவிதையின் பிறப்பைத் தெளிவாக வரையறுக்கிறார்.
அதுமட்டுமன்றிக் கவிதை எவ்வாறு பிறக்கிறது. கவிஞனுக்கு
எவையெல்லாம் கருவாகின்றன என்பனவற்றை இக்கவிதையில்
எளிமையாகவும், இனிமையாகவும் எடுத்துரைக்கின்றார். இதனால்
தான் இந்தக் கவிதை, கவிதைப் பிறப்பிற்கு உதாரணமாகப் பல
தலைமுறைகளாகக் காட்டப்படுகின்றது. இந்த விளக்கத்தால்தான்
கவிஞருக்குக் கவிமணி என்ற பட்டம் வழங்கப் பட்டது.
கதை கூறல் என்பது பழங்காலந் தொட்டே மனிதனிடம்
பழக்கத்தில் இருந்து வந்திருக்கின்றது. அதற்குச் சான்றாகப்
பெரியோர்கள் கூறும் அறிவு புகட்டும் / அறிவுரை கூறும்
கதைகளைக் கூறலாம்.
கதை சொல்லல் என்பது நம்மிடம் குழந்தைப் பருவம் முதலே
இருந்து வருகின்றது. குழந்தை அன்னையின் மடியில்
இருக்கும்போது அன்னை பல கதைகளையும், நிகழ்வுகளையும்
குழந்தையிடம் கூறித் தாலாட்டுப் பாடுகின்றாள். குழந்தை
மயங்குகிறது ;உறங்குகிறது. இந்த நிகழ்வு மனிதர்களிடம் மட்டும்
நிகழக்கூடிய நிகழ்வு அன்று.இத்தகைய உணர்வு விலங்குகளிலும்
நடைபெறும். கதை கூறல் என்பது ஓர் உத்தி. அது எங்கும்
எதிலும் நிறைந்திருக்கின்றது. அதை, கவிமணி தாய்ப்பசு
கன்றுக்குட்டி உறவில் நிகழும் பாசத்தில் அமைக்கின்றார்.

தோட்டத்தில் மேயுது
வெள்ளைப் பசு - அங்கே
துள்ளிக் குதிக்குது
கன்றுக் குட்டி
அம்மா என்குது
வெள்ளைப் பசு - உடனே
அண்டையில் ஓடுது
கன்றுக் குட்டி
நாவால் நக்குது
வெள்ளைப் பசு - பாலை
நன்றாய்க் குடிக்குது
கன்றுக் குட்டி
முத்தம் கொடுக்குது
வெள்ளைப் பசு - மடி
முட்டிக் குடிக்குது
கன்றுக் குட்டி
(மலரும் மாலையும், 265-268)
என்று பாடியுள்ளார். இந்தப் பாடலில் தோட்டத்தில் அல்லது
வயலில் தாய்ப்பசுவும், கன்றுக் குட்டியும் இருக்கின்றன.அங்கே
தாய்ப்பசு புல்லை மேய்ந்து கொண்டிருக்கின்றது. கன்றுக்குட்டி
தாய் அருகில் சுதந்திரமாக, கட்டவிழ்ந்த நிலையில் உள்ளது.
கன்றுக் குட்டி தனக்கு வேண்டிய பால் கிடைக்கும் என்று
மகிழ்ச்சியில் உள்ளது.மேய்ந்து கொண்டிருந்த பசு கன்றுக்குப்
பால் கொடுக்க நினைத்து அம்மா... என்று பாசத்துடன்
அழைக்கின்றது. கன்று தாயின் அழைப்பில் மகிழ்ச்சியாகத்
துள்ளிக் குதித்து ஓடி வருகின்றது. உடனே தாய்ப்பசு தன்
அன்பினை வெளிப்படுத்த, கன்றை நாவால் நக்குகிறது. கன்று
தனக்கு வேண்டிய அன்பும், ஆதரவும் கிடைப்பதால் பாலை
நன்றாகக் குடிக்கின்றது.பின்பு இன்னும் என்ன இருக்கிறது? ‘பால்
மட்டும் தானா?’என்று கன்று (கற்பிதமாக) கேட்டிருக்கவேண்டும்.
உடனே தாய்ப்பசு ‘என் அன்பு மொத்தமும் உனக்குத் தான்.அது
பாலாக மாறி வருகின்றது’என்று கூறி தன் அன்பின் உச்சக்கட்ட
வெளிப்பாடான முத்தத்தை அளிக்கிறது. இதில் கவிமணி
அவர்கள், ‘முத்தம் மனிதர்கள் தம் அன்பின் உச்சக் கட்டத்தை
வெளிப்படுத்துவது; இந்த அன்பின் வெளிப்பாட்டை
விலங்குகளிடம் கூடக் காணலாம்;அதைக் கொஞ்சம் நுட்பமாகக்
காண வேண்டும்’ என்று கூறுகின்றார்.
- காகம் கதை கூறல்
ஒரு காகம் நீர்குடித்த கதையைக் கவிதையாகத் தருகின்றார்.
இது கதைப்பாட்டு என அழைக்கப்படுகிறது.நாம் பிறந்தது முதல்
நம்மிடம் நிகழ்வுகளைக் கதையாகக் கூறும் மரபு இருந்து
வருகின்றது.நிகழ்வுகளைக் கதையாகக் கூறும் முறையே மிகுதியும்
காணப்பட்டது.அதன் அடிப்படையில் கதைகளைக் கவிதைகளில்
அமைத்துக் கூறும் மரபு கவிமணி முதலியவர்களால்
பின்பற்றப்பட்டது. அம்முறையில் ஒரு காகம் நீர் குடித்த
கதையைக்
கவிமணி அவர்கள் கவிதையில் சிறப்பாக
அமைக்கின்றார்.

காகம் உடன்எழுந்து - சிறுசிறு
கற்கள் பொறுக்கிவந்து
ஊகமாய்ச் சாடியினுள் - அவற்றை
ஒவ்வொன்றாய் இட்டதம்மா.
இ்ட்டிடவே நீரும் - மேலே
எழுந்து வந்ததம்மா!
சட்டமாகக் குடித்துக் - காகம்
தளர்ச்சி தீர்ந்ததம்மா!
ஊக்கமுடையவர்க்குத் - துன்பம்
உலகில் இல்லையம்மா!
ஆக்கம் பெருகும் அம்மா - இதை நீ
அறியவேண்டும் அம்மா.
(மலரும் மாலையும், 415)
இப்பாடலில் ஊக்கமுடைய காகம் எவ்வாறு தனக்கு
வேண்டிய நீரைப் பெற்றது என்பதைக் கூறுகின்றார். காகம்
ஒன்று
நீர் அருந்தச் சென்றது. அங்கே ஒரு மண்சாடியில்
நீர்
சிறிதளவே இருந்தது. அதைப் பார்த்த காகம் தனக்கு
நீர் கிடைக்காது என்று திரும்பி விடவில்லை. அதற்கு மாறாக,
கற்களையும், குச்சிகளையும் சாடியில் போட்டுத் தண்ணீரை
மேலே எடுக்க முயற்சி செய்தது. காகத்தின் முயற்சியில்
தண்ணீர் கிடைத்தது. தண்ணீரைக் காகம் சட்டமாக
(வசதியாக) அமர்ந்து
குடித்தது. இந்தக் காகத்தின் கதை மூலம்
கவிமணி ஊக்கம்
உடையவர்களுக்கு இந்த நிலவுலகில் துன்பம்
என்பது சிறிதும்
இல்லை என்கிறார்.