தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

நூல்சிறப்பு


    இந்த நூலில் உள்ள சிறப்புகளைப் புறப்பொருள் சிறப்பு,
வரலாற்றுச் சிறப்பு, அரிய செய்திகள் ஆகிய தலைப்புகளில்
இங்குப் படிக்கலாம்.

1.3.1 புறப்பொருள் சிறப்பு

    இது, போர் பற்றிக் கூறும் புறப்பொருள் நூலாகும். இதில்
புறத்திணையில் உள்ள துறைகளாகிய தும்பை ஆடுதல் (624),
வஞ்சி ஆடுதல் (231), வாகை ஆடுதல் (800), உழபுலவஞ்சி (62),
பேராண்முல்லை (728), படைவழக்கு (629) ஆகியவை இடம்
பெறுகின்றன. அவற்றில் இரண்டை இங்குக் காணலாம்.
  • தும்பை ஆடுதல்

    போருக்குச் செல்லும் போது, வீரர்கள் வெற்றி உண்டாக
வேண்டும் என்று தும்பைப் பூ மாலையைச் சூடிப் போருக்குச்
செல்லுவர். இதைப்    புறப்பொருள் வெண்பாமாலை என்ற
புறப்பொருள் இலக்கண நூல்

    செங்களத்து மறங்கருதிப்
    பைந்தும்பை தலைமலைந்தன்று - (புறப். வெண்பா-127)


(செங்களம் = சிவப்பு நிறமான போர்க்களம்; மறம் = வீரம்;
பைந்தும்பை = பசுமையான தும்பைப் பூ;தலைமலைந்தன்று =
தலையில் சூடுவது)

என்று கூறுகிறது. அதுபோலவே வீரபத்திரக் கடவுள் தக்கனுடன்
போர் புரியச் செல்லும்போது போர்க்கோலம் கொள்ளும்
காட்சியைக் காளிக்குக் கூளி கூறுகிறது. அதில்

பொதியில் வாழ் முனிபுங்கவன் திருவாய் மலர்ந்த
புராணநூல்
விதியினால் வரும் தும்பைமாலை விசும்புதூர மிலைச்சியே(624)


(பொதிய மலையில் வாழும் முனிவராகிய அகத்தியர் எழுதிய
பழமையான நூல் கூறியுள்ளவாறு வானம் மறையும் அளவு
வீரபத்திரர் தும்பை மாலையைத் தலையில் சூடிக் கொண்டார்.)

என்று வீரபத்திரர் போருக்குப்    போகும் போது தும்பை
மாலையைச் சூடிச் சென்றார் என்று ஒட்டக்கூத்தர் கூறியுள்ளார்.

  • படைவழக்கு

    அரசர்கள் வீரர்களுக்குப் படைக்கலங்களை வழங்குவது
படைவழக்கு எனப்படும். (புறப்பொருள் வெண்பாமாலை - 64)
இந்நூலில் வீரபத்திரர் போர்க்கோலம் பூண்டு புறப்படும் போது
அவர் கையில் அம்பு    கொடுக்கப்படுகிறது. எனவே இது
படைவழக்கு என்ற புறத்துறையைச் சேர்ந்தது ஆகும்.

புரங்கொல் அம்புகொல், வந்து வந்து இடை
    போனபேர் புராணர் பொற்
    சிரம்கொல் அம்புகொல் என்கொல் ஒன்று
    வலத்திருக்கை திரிக்கவே


(புரம் = திரிபுரம்; புராணர் = பழையோர்; சிரம் = தலை)

    வீரபத்திரருக்குப் போர்க்கோலம் செய்யும் போது ஒர்
அம்பை அவரது வலக்கையில் கொடுத்தனர். அந்த அம்பு
சிவபெருமான் திரிபுரம் எரித்த போது தொடுத்த அம்போ என்று
கூறத்தக்க வகையில் இருந்தது. தக்கனின்    படையில் உள்ள
தேவர்கள் எல்லாம் இறந்து பின் பிழைத்து, தேவர்களாக
ஆகியவர்கள். அதனால்    அவர்கள் இறந்தாலும் பிழைத்து
விடுவர் என்பதால், மறுபடியும் பிழைக்க முடியாமல் தலையைக்
கொல்ல ஆராய்ந்து எடுத்துக் கொடுத்த அம்போ என்று
கூறத்தக்க வகையில் ஓர்    அம்பு வீரபத்திரர் கையில்
கொடுக்கப்பட்டது. இது படைவழக்கு என்ற துறை இந்நூலில்
இடம் பெறுவதைச் சுட்டுகிறது.

1.3.2 சிறப்புகள்

    இந்நூலில்    வரலாற்றுச்    சிறப்புகளும், பிற அரிய
செய்திகளும் இடம் பெற்றுள்ளன.
  • வரலாற்றுச் சிறப்புகள்

    இந்த நூல் வரலாற்று ஆசிரியர்களுக்கு ஒரு சிறந்த
வரலாற்றுக்    களஞ்சியமாக விளங்குகிறது. மூன்று சோழ
அரசர்களிடத்தும் அவைக்களப்    புலவராக    இருந்ததால்
சோழர்களைப் பற்றி ஏறக்குறைய 24க்கும் மேற்பட்ட வரலாற்றுச்
செய்திகளை ஆசிரியர் இந்நூலில் கூறுகிறார். சான்றாக ஒரு
சிலவற்றை இங்குக் காண்போம்.

    இரண்டாம் இராசராசனுக்கு ‘இராச கம்பீரன்’ (774),
இராசபுரந்தரன் (811), கண்டன்     (549), குலதீபம் (246),
வரராசராசன் (549,812) போன்ற சிறப்புப் பெயர்கள் உள்ளன.

    சோழர்களின் புகழ்பாடும்     ‘மெய்க்கீர்த்தி’    என்ற
செய்யுள்களில் காணப்படும் ‘இரட்டபாடி ஏழரை இலக்கம்’ என்ற
செய்தி இதில் இடம்பெறுகிறது. இரண்டாம் இராசராசன்,
பிரட்டன் என்ற அரசனை அழித்து ஏழரை இலக்கம் என்ற
ஊரைப் பாதுகாப்பதற்காக அவ்வூருக்கு இரட்டன் என்பவனை
அரசனாக்கினான்.

     பிரட்டனையே பட்டங்கட்டழித்துப்
    பேர் ஏழரை இலக்கம் புரக்க
    இரட்டனையே பட்டங்கட்டிவிட்ட
    இராச கம்பீரனை வாழ்த்தினவே. - (774)

  • அரிய செய்திகள்.

    இந்நூலில் பல அரிய செய்திகளும், அரிய புராணச்
செய்திகளும் இடம் பெறுகின்றன. சான்றாக, அகத்தியர் யாழ்
வாசிப்பதில் வல்லவர்; சிவபெருமானின்    கங்கணமாக உள்ள
பாம்பின் பெயர் திட்டிவிடம்; திருமாலுக்கு    ஐந்து வடிவங்கள்
உண்டு; ஒருவகைப் பாம்புகள் யானையை விழுங்கும்; புத்தர்
வாளெறிந்த இடத்தில் பால் சுரந்தது; இவை போன்ற அரிய
செய்திகள் இந்நூலில் இடம் பெறுகின்றன.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 20:54:24(இந்திய நேரம்)