தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

2.1 தஞ்சைவாணன் கோவை

2.1 தஞ்சைவாணன் கோவை


    தஞ்சைவாணன் கோவை என்ற நூலின் ஆசிரியர் யார்? பாட்டுடைத் தலைவன் யார்? இந்நூலின் பாடுபொருள் என்ன? இது எத்தகைய இலக்கியம்? இவற்றை இப்பகுதியில்
பார்க்கலாம்.

2.1.1
நூல் ஆசிரியர்
    
    இந்த நூலை எழுதியவர் பொய்யாமொழிப் புலவர்.
இவர் பிறந்த ஊர் தொண்டை    மண்டலத்தைச் சேர்ந்த
துறையூர். தொண்டை    மண்டலம் என்பது தமிழகத்தின்
வடக்கே உள்ள சென்னை, செங்கல்பட்டு,    காஞ்சிபுரம்
ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதி    ஆகும். அங்குச்
செங்காட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது இந்தத்
துறையூர்.

    இவருடைய ஆசிரியர் பெயர் வயிரபுரம் ஆசான். இந்த
ஆசிரியரே இவருக்குப் பொய்யாமொழி என்று பெயரிட்டார்
என்று கூறப்படுகிறது.

  • கதைகள்
    பொய்யாமொழிப் புலவரைப் பற்றிப் பல கதைகள்
அபிதான சிந்தாமணி, தமிழ் நாவலர் சரிதம் முதலிய
நூல்களில் காணப்படுகின்றன.

  • பெற்ற பரிசுகள்
    பொய்யாமொழிப் புலவர் இந்த நூலைப் பாடியபோது
இதில் சிறப்பித்துப் பாடப்படும்    தஞ்சைவாணன் என்ற
அரசனின் மனைவி ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு பொன்னால்
செய்யப்பட்ட    தேங்காயைப்    பரிசாக அளித்தாள்.
தஞ்சைவாணன் அத்தேங்காய்களின் மூன்று கண்களிலும்
மூன்று விலை உயர்ந்த மணிகளை வைத்துப் பரிசளித்து
இவரைச் சிறப்புச் செய்தான் என்று கூறப்படுகிறது.
  • காலம்
     இவர் வாழ்ந்த காலம் கி.பி. 1268-1311 ஆகும். எனவே
இந்நூலின் காலம் 13ஆம் நூற்றாண்டு ஆகும்.
2.1.2
பாட்டுடைத் தலைவன்

    ஒரு நூலில் யார் சிறப்பித்துப் பாடப்படுகிறாரோ அவரே
பாட்டுடைத்தலைவன் என்று அழைக்கப்படுவார். இந்நூலில்
தஞ்சைவாணன் என்ற அரசன் சிறப்பித்துப் பாடப்படுகிறான்.
எனவே    தஞ்சைவாணன்    இக்கோவை    நூலின்
பாட்டுடைத்தலைவன்    ஆவான். பொய்யா மொழியாரை
ஆதரித்துப் போற்றிய வள்ளலாகிய தஞ்சை வாணனின்
பல்வேறு சிறப்பியல்புகளும் இந்நூலில் புகழ்ந்துரைக்கப்
பட்டுள்ளன.
  • இயற்பெயர்
    தஞ்சைவாணனின் இயற்பெயர் சந்திர வாணன். 13ஆம்
நூற்றாண்டில் பாணர்கள் என்ற குறுநில மன்னர்கள் பாண்டிய
நாட்டில் வாழ்ந்தனர். அவர்கள் சோழ நாட்டிலிருந்தும்
பல்லவ நாட்டிலிருந்தும் குடி பெயர்ந்து பாண்டிய நாட்டிற்கு
வந்தவர்கள். அந்தப் பாணர் மரபில் வந்தவனே இந்தச்
சந்திரவாணன் என்று தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் கூறுகிறார்.
(தெ.பொ.மீ. தமிழ் இலக்கிய    வரலாறு ccc தமிழாக்கம்
மு. இளமாறன். ப.176)
  • நாடு
    தஞ்சைவாணன் பாண்டிய நாட்டில் இருந்த மாறைநாடு
என்ற சிறு நாட்டை ஆண்டு வந்தான். அதன் தலைநகர்
தஞ்சாக்கூர். இவ்வூர் தென்காசிக்கு அருகில் உள்ளது. இந்த
நூலில் தஞ்சை என்று போற்றப்படுவது இவ்வூரே ஆகும்.
  • பாண்டியனின் படைத்தலைவன்
    மாறை நாட்டை ஆண்டு வந்த    தஞ்சைவாணன்,
பாண்டியன் கோமாற வர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி
குலசேகரனுக்குப் படைத்தலைவனாகவும் அமைச்சனாகவும்
இருந்தான். பாண்டியனின் கண்போல இருந்து சேரநாட்டை
வெற்றி பெறுவதற்கு இவன் உதவினான் என்று தஞ்சைவாணன்
கோவை கூறுகிறது.
மலைநாடு கொண்ட வழுதிகண் போல்பவன் வாணன் (18)
(மலைநாடு = சேரநாடு ; வழுதி = பாண்டியன் ;
போல்பவன் = போன்றவன்; வாணன் = தஞ்சைவாணன்)
2.1.3
உதாரண இலக்கியம்


    தஞ்சைவாணன் கோவை நாற்கவிராச நம்பி இயற்றிய
நம்பி அகப்பொருள் என்ற    இலக்கண    நூலை
அடிப்படையாகக் கொண்டு அதற்கு உதாரண இலக்கியமாக
எழுதப்பட்டுள்ளது.

    நம்பி அகப்பொருள் நூலில் களவியல், வரைவியல்,
கற்பியல் ஆகிய இயல்களில் தலைவன் தலைவியின்
அகவாழ்க்கை நிகழ்வுகளின் இலக்கணம் கூறப்படுகிறது. அந்த
அடிப்படையிலேயே இக்கோவை    நூலிலும் களவியல்,
வரைவியல், கற்பியல் என்று மூன்று இயல்கள் உள்ளன.

    நம்பி அகப்பொருளில் இம் மூன்று இயல்களி்லும் உள்ள தலைவன், தலைவி, தோழி, தாய் போன்றோர் பேசும்
பேச்சுகள் (கூற்றுகள்) தஞ்சைவாணன் கோவையில் அதே
வரிசையில்    உதாரணப்    பாடல்கள்    கொண்டு
விளக்கப்படுகின்றன.

    எனவே நம்பி அகப்பொருள் இலக்கணத்திற்கு உரிய
முழுமையான இலக்கியம் தஞ்சைவாணன் கோவை என்பதை
உணரலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 20:55:30(இந்திய நேரம்)