தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இருகளங்கள்

1.3 இரு களங்கள்

    பெறுமொழிக்குத் தேவையான கருத்துகளை எந்த
மொழியிலிருந்தும்     பெற்றுக்கொள்ளலாம்.     அப்போது
மொழிபெயர்ப்புத்     தேவைப்படுகிறது. அக்கருத்துகளின்
உள்ளடக்கத்தை அறிவியல், கலை என்ற இரு களங்களிலிருந்து
காணலாம். அறிவியல் கருத்துகளைச் சொல்லுக்குச் சொல்
அலங்கார மொழிநடையின்றி மொழிபெயர்க்க வேண்டும்.
கருத்துகளை மொழிபெயர்ப்பது அல்லது மொழியாக்குவது
கலைத்துறை மொழிபெயர்ப்பாகிறது. இனி முதலாவதாக
அறிவியல் மொழிபெயர்ப்பைப் பற்றிக் காணலாம்.

1.3.1 அறிவியல் மொழிபெயர்ப்பு

    அறிவியலில் சொல்லப்படும் கருத்துகளே முக்கியத்துவம்
பெறுகிறது. அறிவியல் செய்திகளை மொழிபெயர்க்கும் போது
அணிநயம் மிக்க (Figurative) மொழியைக் கையாளக்கூடாது.
பொருள் மயக்கம் தரக்கூடிய சொல்லோ தொடரோ
இடம்பெறக் கூடாது. இருபொருள் தரக்கூடிய சிலேடைகள்
முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும். குறியீடுகளை அப்படியே
பயன்படுத்தவேண்டும். அறிவியல் பெயர்ச் சொற்களை
அப்படியே ஒலிபெயர்ப்புச் செய்து பயன்படுத்த வேண்டும்.

அறிவியலில் ஒரு நிகழ்வு (Phenomenon), பொருள்,
    பொருளின் பண்பு போன்றவற்றின் வரையறைகளை
    (Definitions) மொழிபெயர்க்கும் போது சொற்சிக்கனமும்
    மூலத்தின் பொருளனைத்தும் உள்ளடக்கிய பொருட்
    செறிவும் வேண்டும்.

1.3.2 கலைச்சொல்லாக்கம்

    1930 ஆம் ஆண்டளவில் தமிழ்வழியில் அறிவியல்
நூல்கள் தோன்றின. அறிவியல் நூல் எழுதக் கலைச்சொற்கள்
வேண்டும். இக்கலைச்சொற்களை உருவாக்க முனைந்த அறிஞர்
பலர் தொடக்கத்தில் எளிதில் விளங்காத- வெளிப்படையாகப்
பொருள் புலப்படாத வடமொழிக் கலப்புச் சொற்களைக்
கையாண்டனர்.

    பழகு தமிழில் கலைச்சொற்களை உருவாக்க, சென்னை
மாகாணத் தமிழ்ச்சங்கம் முற்பட்டது. இதனால் 1936 இல் எளிய
கலைச்சொற்கள் உருவாயின. கோவையிலிருந்து வெளிவரும்
கலைக்கதிர்     என்ற     இதழ் நீண்ட காலமாகவே
கலைச்சொல்லாக்க முயற்சியில் மிக உதவி வந்தது. டாக்டர்
ஜி.ஆர். தாமோதரன் அவர்களின் தனிப்பெரு முயற்சியால்
அனைத்துத் துறைகளிலும் கலைச்சொல் ஆக்கம் சிறப்பாக
வளர்ந்தது.

கலைச்சொல் - விளக்கம்

(1) ஒரு துறையினர் மிகுதியாகப் பயன்படுத்திப் பிற துறையினர்
    வழங்காமல் இருப்பது.
    Antibiotic - எதிர்உயிரி
    Cathode - எதிர்முனை

(2) வழக்கமான அகராதியில் இடம் பெறாதது.
    Zygonema - சைகோனிமா
    Mesothorax - இடை மார்பு

(3) நடைமுறையில் ஒரு பொருளும், அறிவியல் உலகில்
    வேறுபொருளும் கொண்டது.
Charge - (பொது அகராதி)-குற்றச்சாட்டு, பொறுப்பு,
        கடமை, விலை, பாதுகாப்பு
        (இயற்பியல்) - மின்னூட்டம்

என்ற வகையில் கலைச்சொற்களுக்குக் கா. பட்டாபிராமன்
விளக்கம் தருகிறார்.

கலைச்சொல்லாக்க நெறிகள்

    இதுவரையான கலைச்சொல்லாக்கங்களிலிருந்து பின்வரும்
நெறிகள் பின்பற்றப்பட்டுள்ளன என்று அறியலாம். அவை

(1)
கலைச்சொல்லின் மூலம் யாது என அறிதல்.
(2)
அவை குறிக்கும் மையக்கருத்தை வரையறுத்தல்.
(3)
சுருக்கமான தமிழ்வடிவம் அமைத்தல்.
(4)
இயன்ற அளவு வழக்கில் உள்ள தமிழ்ச்சொற்களைப்
பயன்படுத்துதல்.
(5)
தனிச்சொற்களாகவோ தொகை வடிவிலோ அமைத்தல்.
(6)
குறிப்பிட்ட கலைச்சொல்லுடன் - இணையத் தக்க
முன்னொட்டு அல்லது பின்ஒட்டு வகையில்
கலைச்சொற்களை உருவாக்கல்.
(7)
சொல்லாக்கம்     இல்லாதபோது,     பிறமொழிச்
சொற்களுக்குத் தமிழ் வடிவம் தருதல்.
(8)
குறியீடுகள்,     சமன்பாடுகள்,     வாய்பாடுகள்,
கருத்துக்குறிப்புகள்     ஆகியன     தமிழ்வடிவம்
பெறுவதில்லை. அதனால் உள்ளவாறே இருக்க
வேண்டும்.

    மேற்கண்ட நெறிகள் இதுவரை தமிழாக்க முயற்சியில்
மேற்கொள்ளப்பட்டன. வருங்காலத்தில் இதில் மாற்றம் ஏற்படலாம். பின் வருவோர் புதுநெறி காட்டலாம்.

    இனி இலக்கிய மொழிபெயர்ப்பு அல்லது கலைத்துறை
மொழிபெயர்ப்பு பற்றிக் காணலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 21:42:19(இந்திய நேரம்)