Primary tabs
4.7 இக்கால இந்திய மொழிகள்
இன்றைய இந்திய மொழிகளில் இந்தி,
குஜராத்தி,
வங்காளம் போன்ற வடஇந்திய மொழிகளிலிருந்தும் தெலுங்கு,
மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய திராவிட
மொழிகளிலிருந்தும் ஏராளமான நூல்கள் தமிழில்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
4.7.1 இந்தி
வட இந்தியாவில் பெரும்பாலான மக்களால் பேசப்படும்
இந்திமொழி மிகக் குறுகிய காலத்தில் பெரும் வளர்ச்சி
அடைந்துள்ளது. துளசிதாசரின் இராம சரித மானஸ் என்ற
பக்தி இலக்கியம் கிட்டதட்ட ஆறு பேரால் மொழிபெயர்த்துத்
தமிழில் தரப்பட்டுள்ளது. ஜெய சங்கர பிரசாத் படைத்துள்ள
காமாயனி என்ற காப்பியம் காமன்மகள் எனும் நூலாகத்
தமிழில் ஜமதக்னி என்பவரால் தரப்பட்டுள்ளது. பிரேம்சந்த்தின்
புகழ்மிகு சிறுகதைகள் பல தொகுப்புகளாகத் தமிழில்
வெளிவந்துள்ளன. இவையன்றி இந்திச் சிறுகதைகள் என்ற
தொகுப்பும் சாகித்ய அகாடெமி, நேஷனல் புக்
டிரஸ்ட்
போன்ற அமைப்புகளால் தமிழில் வெளியிடப்பட்டுள்ளன.
கர்மபூமி என்ற பிரேம்சந்த்தின் நாவல் அறக்கோட்டம்
என்ற பெயரில் தமிழில் வெளியாகியுள்ளது. சுதர்சன், தர்மவீர்
பாரதி, ஸ்ரீலால், கோவிந்த வல்லபன் போன்ற எழுத்தாளர்களின்
படைப்புகள் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன.
கமலாகாந்தவர்மனின் நாடகம், அடிவானத்திற்கு அப்பால்
என்ற பெயரிலும், மோகன் ராகேஷ்
என்பவரின் நாடகம்
அரையும் குறையும் என்ற பெயரிலும் தமிழில்
வெளியிடப்பட்டுள்ளன. சாகித்ய அகாடெமி,
நேஷசனல் புக்
டிரஸ்ட் போன்ற அமைப்புகள் இந்தி மொழி நாவல், சிறுகதை
போன்றவற்றைப் பெருமளவில் தமிழில் மொழிபெயர்த்து
வெளியிட்டுள்ளன.
ராகுல சாங்கிருதியாயன் படைத்துள்ள சிம்ஹசேனாபதி
என்ற நூலைக் கண. முத்தையா வால்காவில் இருந்து கங்கை
வரை என்ற பெயரிலும், மாஜினி சிந்து முதல் கங்கை வரை
என்ற பெயரிலும் மொழிபெயர்த்துள்ளனர்.
4.7.2 குஜராத்தி
குஜராத்தி மொழியில் உள்ள பக்திப் பாடல்கள் பல
தமிழில்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஸ்ரீமத் பாகவத
ரஹஸ்யம் என்ற ராமசந்திர டோங்க்ரேயின் நூலை
ஹரி ஹர
சர்மா என்பவர் மொழிபெயர்த்துள்ளார்.
குஜராத்தி சிறுகதைகள்
பல தொகுப்புகளாகத் தமிழில் வெளியிடப்பட்டுள்ளன.
குஜராத்தியில் சிறந்த புதினங்களாகப் போற்றப்படும், சரஸ்வதி
சந்திரன், இராஜ நர்த்தகி, ஜெயதேவன், ஜெய சோம நாத்
முதலிய புதினங்கள் தமிழாக்கம் பெற்றுள்ளன.
குஜராத்தி
ஓரங்க நாடகங்களைத் தொகுத்து, சாகித்ய அகாடமி
மொழிபெயர்த்துத் தமிழில் வெளியிட்டுள்ளது.
மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறான சத்திய
சோதனை ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
4.7.3 மராட்டிய மொழி
தமிழ்நாட்டில்
முஸ்லீம்களுக்குப் பிறகு சிறிதுகாலம்
மராட்டியர்கள் ஆட்சி செய்தனர். ஆனாலும் மராட்டிய மொழி
நூல்கள் மிகுதியாகத் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை.
பகவத் விஜயம் என்ற மராட்டிய மொழிப் புராணக் கதையே
தமிழில் பெருவழக்காக வழங்கப்படுகிறது.
காண்டேகரின் பல சிறுகதைகள் தமிழில் நூல்களாக
வெளிவந்துள்ளன. அரும்பு, ஆஸ்திகன், ஓடும் இரயிலிலே,
கண்ணாடி அரண்மனை, கவியும் கனியும், கருப்பு ரோஜா,
கோடை மழை, தாழை முள், மிஸ் லீலா,
ஜமீன்தார்
மாப்பிள்ளை முதலிய சிறுகதைத் தொகுப்புகள் தமிழ்
வாசகர்களின் உள்ளங்களைக் கவர்ந்தவையாகும்.
இரு துருவங்கள், எரி நட்சத்திரம், கிரௌஞ்ச வதம்,
புயலும் படகும், யயாதி, சுகம் எங்கே, வெறும் கோயில்,
வெண்முகில் முதலிய காண்டேகரின்
புதினங்கள்
கா.ஸ்ரீ.ஸ்ரீ. யால் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.
வினோபாவின் குட்டிக்கதைகள் தமிழாக்கம் செய்யப்பட்டு
உள்ளன. இவற்றுடன் மராத்திய சிறுகதைகள் என்ற தொகுப்பு
தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. மராட்டியப் புதினங்களும்
ஏறக்குறைய காண்டேகரின் புதினங்கள் அனைத்துமே தமிழில்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தேவதாசி, நான், பண்டர்வாடி,
புதுமைப்பெண் போன்ற
மராட்டிய நூல்கள் தமிழில்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. விநாயக் சாவர்க்கர் என்பவரின்
முதல் இந்திய சுதந்திரப் போர் மராட்டிய மொழியிலிருந்து
தமிழாக்கம் செய்யப்பட்ட சிறந்த வரலற்று நூலாகும்.
தற்காலத்தில் வீரசிவாஜி, வீர சாவர்க்கர் போன்றோரது
வாழ்க்கை வரலாற்று நூல்களும் தமிழில் கிடைக்கின்றன.
4.7.4 வங்காள மொழி
வட இந்திய மொழிகளில் வங்காள மொழி இலக்கிய வளம்
மிக்க மொழியாகும். கவியரசர் இரவீந்திர நாத் தாகூரின்
கீதாஞ்சலி என்ற தத்துவ நூலை வி.ஆர்.எம். செட்டியார்,
அ.சீனிவாச ராகவன், பா.வரதரஜசன் ஆகியோர்
மொழிபெயர்த்துள்ளனர். கவியரசர் கண்ட கவிதை,
இரவீந்திரர் கதைத் திரட்டு என்ற இரு தொகுப்புகள்
தமிழில் வெளியாகியுள்ளன. காதல் பரிசு, பட்டிப் பறவைகள்,
கனி கொய்தல், வளர்பிறை போன்ற தாகூரின் பாடல்கள்
தமிழில் வெளியிடப்பட்டுள்ளன. சைதன்யரின் பக்திப்
பாடல்களும் பல தொகுப்புகளாகத் தமிழில் வெளிவந்துள்ளன.
சரத் சந்திரருடைய பல்வேறு புதினங்களும் சிறுகதைகளும்
த.நா.குமாரசாமி, த.நா.சேனாபதி ஆகியோரால்
மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. அரசியல் கைதி முதலிய
வங்கச் சிறுகதைகள், இரு சகோதரிகள் போன்றவை
குறிப்பிடத்தக்கனவாகும். இத்துடன்
இராமகிருஷ்ண
பரமஹம்சரின் பரமஹம்சர் சொன்ன
கதைகள் சில
நூல்களாகத் தமிழில் வெளிவந்துள்ளன.
சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ள இரவீந்திர கதைத்
திரட்டு சிறந்த நூலாகும். பங்கிம் சந்திரரின் ஆனந்த மடம்
என்ற புதினம் தமிழில் ஐந்து அறிஞர்களால்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள வந்தே
மாதரம் என்ற நாட்டு வாழ்த்துப் பாடலைப் பாரதியார்
இருவகையாக மொழிபெயர்த்துள்ளார்.
பங்கிம் சந்திரருடைய புதினங்களும், சரத் சந்திரருடைய
புதினங்களும் மிகுதியாகத் தமிழில்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. வங்க மொழியின் சிறப்பு மிக்க
ஏழு குறு நாவல்கள் நேஷனல் புக் டிரஸ்ட் சார்பில்
தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன.
தாகூரின் நகைச்சுவை நாடகங்கள், இரவீந்திர நாடகத்
திரட்டு போன்ற நூல்களுக்குத் தமிழாக்கம் வெளிவந்துள்ளன.
வங்காள மொழியில் இராஜாராம் மோகன் ராய் எழுதிய
கட்டுரைகள் பலவும், ஆராய்ச்சி நூல்களும் தமிழில்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.