தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

2.4- தத்துவ வளர்ச்சி

2.4 தத்துவ வளர்ச்சி


    கி.பி.12ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு சைவ சமயப் பக்தி
இயக்கம் தத்துவங்களின் வளர்ச்சி இயக்கமாக வளர்ந்தது.
இக்காலக் கட்டத்திற்குப் பிறகுதான் சாத்திரங்கள் சைவத்தில்
தோன்றின. பன்னிரு திருமுறைகளில் 10ஆம் திருமுறையான
திருமந்திரம் சாத்திரக் கருத்துகளைக் குறிப்பிடுவதாக
அமைந்தாலும், அவற்றை முறையாக வகைப்படுத்தித்
தரவில்லை. திருமந்திரத்தின் அடிப்படையில் திருமுறைகளில்
சைவ     சித்தாந்தக்     கருத்துகள்     இடம்     பெற்றன.
இவற்றையெல்லாம்     தொகுத்துச் சாத்திர நூல்களாகத்
தரவேண்டிய கட்டாயம் பிறசமய நோக்கில் சைவ சமயத்திற்கு
உண்டாயிற்று.

    ஞானாமிர்தம் என்ற நூல் கி.பி.13ஆம் நூற்றாண்டில்
வாகீச முனிவரால் தத்துவ நூலாக இயற்றப்பட்டது. இந்நூல்
முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை. எனினும் இப்பொழுது
70 பாடல்கள் கிடைத்திருக்கின்றன. இந்நூல் சைவ
சித்தாந்தத்தின் முப்பொருளான பதி, பசு, பாசம் என்பவற்றைப்
பற்றிய செய்திகளைச் சுருக்கமாகத் தருகிறது. பின்னர்
மெய்கண்டார் தனது இளவயதிலேயே சிவஞானபோதம் என்ற
நூலைத் தந்து அதிலுள்ள 12 சூத்திரங்கள் மூலமாகச் சைவ
சித்தாந்தத்தை விளக்கி அருளினார். அவரைத் தொடர்ந்து
அருணந்தி சிவாச்சாரியார், மறைஞான சம்பந்தர்,
உமாபதி சிவாச்சாரியார், திருக்கடவூர் உய்யவந்த
தேவனார்
உள்ளிட்ட சமய ஆசிரியர்கள் சைவ சித்தாந்தத்
தத்துவக் கருத்துகளை நூல்கள் வாயிலாகத் தந்தனர். இவை
14 சாத்திரங்கள் என்ற அமைப்பில் தொகுக்கப் பெற்றுள்ளன.
எனவே கி.பி.12ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு சாத்திர நூல்கள்
தோன்றிப் பக்தி இயக்கம் வளர்ந்தது எனலாம்.


2.4.1 சிறுதெய்வ வழிபாடு

    பக்தி இயக்கத்தின் ஒரு கூறாகத் தமிழகத்தில்
பிற்காலத்தில் சிறுதெய்வ வழிபாடுகள் தோன்றின. அந்த
அடிப்படையில் சிவபெருமானின் மூத்த பிள்ளை எனக்
கூறப்பெறும் பிள்ளையார் வழிபாடு காணாபத்தியம் என
வழங்கப் பெற்றது. சக்தியாகிய பெண் தெய்வத்தை வழிபடும்
இயக்கம் சாக்தம் எனப்பட்டது. முருகனை வழிபடும் இயக்கம்
கௌமாரம் எனப்பட்டது. சூரியனை வழிபடும் இயக்கம்
சௌரம் எனப்பட்டது. இந்த நால்வகை இயக்கங்களும் சைவ,
வைணவ சமயங்களோடு சேர்ந்து அறுவகைச் சமய
இயக்கங்களாகக்     கூறப்பட்டன. இந்த அடிப்படையில்
சிவபெருமானுக்குத் திருக்கோயில்     எழுந்தது போலத்
தமிழகத்தில் பல இடங்களில் விநாயகர், சக்தி, முருகன்,
சூரியன் போன்ற சிறு தெய்வங்களுக்குத் தனித்தனிக்
கோயில்கள் தோன்றின. வழிபடும் அடியார்களும் பெருகினர்.
அடியார்கள் தோன்றிப் பாடல்களைப் பாடினர். முழுமுதற்
கடவுள் சிவனோடு இவை வேறுபடவில்லை என்றாலும் இச்சிறு
தெய்வ வழிபாட்டின் அடிப்படையில் உயிர்ப்பலி கொடுத்தல்
நோன்பிருத்தல், விரதம் இருத்தல் ஆகியவை தொடங்கின.
எனவே பக்தி இயக்கம், இச்சிறு தெய்வ வழிபாட்டால்
முழுமுதற் தெய்வ வழிபாட்டில் இருந்து சிறிது விலகி,
விழாக்கள் என்ற ஆரவார வழிபாட்டு முறையாக மாறிற்று
எனலாம்.

2.4.2 அமைதி இயக்கம்

    சிறு தெய்வ வழிபாட்டால் எழுந்த ஆரவாரமான
வழிபாட்டு முறைகளால் சமுதாயத்தின் நிலைமையில் பெருத்த
மாறுதல்கள் நிகழ்ந்தன. சாதி ஏற்றத் தாழ்வுகள் வழிபாட்டில்
இடம் பெற்றன. திருக்கோயில் வழிபாடுகளில் சடங்குகள்
அதிகரிக்கப் பெற்றுத் தாழ்ந்த சாதியினர் எனப்படுவர்
திருக்கோயிலுள் வழிபாடு செய்யக் கூடாது என்ற தடையும்
ஏற்பட்டுப் பக்தி இயக்கம் நிலை தடுமாறிற்று. இந்த
நிலைமையில்தான் கி.பி.18,19ஆம் நூற்றாண்டுகளில் அமைதி
வழிபாடு தோன்றிற்று. அப்பொழுது பல அருளாளர்கள்
தோன்றிச் சடங்குமுறை இல்லாத வழிபாட்டு முறையை
வற்புறுத்தினர். குமரகுருபரர், தாயுமானவர், இராமலிங்க
வள்ளலார்,
உள்ளிட்ட சைவ சமய அருளாளர்கள் சாதி
முறைமைகளைக் கண்டித்தும், சடங்குகளைக் கண்டித்தும்
சமய நெறியைப் பரப்பினர். அமைதியான தியானமுறையும்
வற்புறுத்தப் பெற்றது. இறை உண்மையை உணர்ந்து
இறையருளைப் பெறுவதற்கு அமைதி வழிபாடே சிறந்தது என
வற்புறுத்தப் பெற்றது. தாழ்த்தப்பட்ட சாதியினர் ஆலயத்திற்குள்
நுழைவதற்குப் போராட்டங்கள் எழுந்தன. இதில் மொழிப்
போராட்டமும் சேர்ந்து கொண்டது. இத்தகைய நிலையில்
அருளாளர்களின் முயற்சியினால் உயிர்ப்பலி இடுதல்
தடுக்கப்பட்டது. பக்தி இயக்கம் ஒரு அமைதியான முறையில்
திருப்பிவிடப்பட்டது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:02:40(இந்திய நேரம்)