தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

P20221l3-1.3 பதினெண் கீழ்க்கணக்கும் திருமால் வழிபாடும்

1.3 பதினெண்கீழ்க்கணக்கும் திருமால் வழிபாடும்
இதுவரை, திருமால் வழிபாட்டின் தொன்மைக்கான சான்றுகள்
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலான சங்க நூல்களிலிருந்து
காட்டப்பட்டன.

இனி சங்கம் மருவிய காலத்துத்தோன்றிய பதினெண்
கீழ்க்கணக்கு நூல்கள் சிலவற்றுள் திருமால் வணக்கம் அல்லது
வாழ்த்து இடம் பெறுவதைக் காணலாம்.

திரிகடுகம், நான்மணிக்கடிகை ஆகியவற்றுள் திருமாலைப்
பற்றிய கடவுள் வாழ்த்துப் பாடல்கள் உள்ளன. இவற்றுள்
நான்மணிக்கடிகை மட்டுமே இரண்டு கடவுள் வாழ்த்துச்
செய்யுட்களைக் கொண்டுள்ளது. இப்பாடல்களில் ‘பூவைப்
புதுமலர் ஒக்கும்’ திருமாலின் நிறத்தைக் குறிப்பிட்டு, அவன்
‘சோ’ என்னும் அரணை அழித்த திறத்தைப் போற்றுகிறார்
புலவர். இவையிரண்டும் பூவைநிலை, கந்தழி ஆகிய பழைய
துறைகளின் அடியாகப் பிறந்த கடவுள் வாழ்த்துப் பாடல்கள்
எனலாம்.

இன்னாநாற்பது என்னும் நூலின் ஆசிரியர் தமது கடவுள்
வாழ்த்தில், ‘சிவபெருமான், பலராமன், திருமால், முருகன்
ஆகியோரைத் தொழாதவர் துன்புறுவர்’ எனப் பாடியுள்ளார்.
இனியவை நாற்பதின் - கடவுள் வாழ்த்தும் இத்தகையதே.
இங்குப் பூதஞ்சேந்தனார் முதலிற் சிவனையும் அடுத்து
திருமாலையும்
பின்னர் பிரமதேவனையும் குறிப்பிட்டுள்ளார்.


சிவபெருமான்


பலராமன்


திருமால்


முருகன்

கார்நாற்பது என்னும் நூலில் தனியே கடவுள் வாழ்த்து
இல்லை. எனினும் ‘தோழி தலைமகளுக்குப் பருவம் காட்டி
வற்புறுத்தியதாக’ உள்ள     முதற்பாட்டில், “திருமாலின்
மாலைபோல் வானவில் தோன்றி மழை பொழியும் போது
வருவோம்” என்றார் தலைவர். இப்போது கார்காலம்
தோன்றிவிட்டது. அவர் வருவார் என்று தலைவியை
ஆற்றுவிக்கிறாள் தோழி. இதனால் நூலின் தொடக்கத்தே
முல்லை நிலைக் கடவுளாகிய திருமால் நினைக்கப்பட்டமை
அறியலாம்.

ஐந்திணை ஐம்பது என்னும் நூலின் முதற்பாடலும்
இத்தகைய போக்கிலேயே அமைந்துள்ளது. “மல்லரைக்
கடந்தவனாகிய திருமாலின் நிறம் போன்று வானம் இருண்டது”
என்று தோழி கூறுவது நினைக்கத்தக்கது.

சமயக்கணக்கர் மதிவழிச் சென்று எந்தக்கடவுளையும்
சிறப்பித்துப் பேசாத ஒரு நூல் திருக்குறள் ஆகும். அந்நூலிலும்
திருமால் உலகளந்த செய்தி (குறள் எண்.610) இடம் பெற்றுள்ளது.

இவ்வெடுத்துக் காட்டுகளால் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
(கி.பி.300-600) தோன்றிய காலத்திலும் நிலவிய திருமால்
வழிபாட்டின் தொடர்ச்சியை நாம் அறிந்து கொள்ளலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:08:16(இந்திய நேரம்)