Primary tabs
‘தலித்’ என்ற மராத்திச்
சொல்லுக்கு ‘உடைந்து
போனவர்கள்’ என்று பொருள். எழுபதுகளில் மராட்டியத்தில்
வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களும், இந்திய வரலாற்றில் சாதி
முறையில் ஒடுக்கப்பட்ட இனங்களைச் சேர்ந்த மக்களில்
சிலரும், தங்களைத் தலித் என்று அழைத்துக்
கொள்ளத்
தொடங்கினர். பின்னர், இந்தப் பெயர்
ஒடுக்கப்பட்ட,
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலைத்துவிட்டது
என்று
பிரிட்டானிக்கா கலைக் களஞ்சியம் கூறுகிறது.
மராட்டியத்திலும், கர்நாடகத்திலும் தலித்
மக்களைப் பற்றிய
இலக்கியங்கள் தலித் இலக்கியம் என்ற பெயரில் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தின. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில்
தமிழ் இலக்கியத்திலும் தலித் இலக்கியம் பெரும்பரபரப்பை
ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாழ் மக்கள், உழைக்கும்
மக்கள், நிலமற்றவர்கள், அரசியல்
அடிப்படையிலும்
பொருளாதார அடிப்படையிலும் சுரண்டப்படும்
மக்கள்
ஆகியோரைப் பற்றிய நாவல், சிறுகதை, கவிதை போன்ற
இலக்கிய வகைகளே தலித்
இலக்கியங்கள் என்று
அழைக்கப்படுகின்றன. சமூகச்
சிந்தனையாளரும்
எழுத்தாளருமான ராஜ் கௌதமன் தலித் இலக்கியம் பற்றிக்
கீழ்க்கண்டவாறு கூறுகிறார்;
“இங்கே தலித் இலக்கியம்
என்பது தலித் இலக்கியத்தால்
மட்டுமே வரையறுக்கப் படவில்லை. சாதிப்போராட்டங்கள்,
சமூக நீதிக்கான இடஒதுக்கீட்டுக் கிளர்ச்சிகள், பொருளாதார
சமத்துவத்தைப் பற்றிய பேராட்டங்கள், அரசியல் கிளர்ச்சிகள்
ஆகியவற்றோடு ஒன்றாகவே தலித் இலக்கியம் எழுந்துள்ளது.
தலித் இலக்கியம் இன்றைய நவீன இலக்கியம் என்ற
பெயரில் புழக்கத்தில் இருக்கின்ற, உள்ளதை உள்ளபடி
கூறுவதாக, உரிமை பாராட்டுகிற
எதார்த்தவாத
இலக்கியத்தோடு என்ன முறையில் தொடர்பு கொள்கிறது என்ற
கேள்வி மிக முக்கியமானது. தலித் இலக்கியத்திற்கு என்று
வரையறுத்த வடிவங்கள் எதுவும் இல்லை. இருக்கின்ற யதார்த்த
வடிவங்களைக் கேலி செய்வதில் இருந்து தலித் இலக்கியம்
தனக்கென்று மாற்று வடிவங்களை உருவாக்குகிறது”.
தமிழ் நாவல்களில் தலித் மக்களின் வாழ்வியலைக் கூறும்
நாவல்கள் ஏராளமாக வெளிவந்து கொண்டுள்ளன. தலித்
நாவல் படைக்க யாருக்கு உரிமை இருக்கிறது என்ற
விவாதங்கள் தற்போது மிக அதிக அளவில் நடக்கின்றன.
தலித் சாதியில் பிறந்த படைப்பாளிகள், பிறப்பாலேயே
தகுதி பெற்றோர் ஆவர். அவர்களின் சொந்த அனுபவங்களே
தலித் இலக்கியங்களைப் படைக்கத் துணை நிற்கின்றன.
படைப்பாளர்கள் சிலர் தலித் சாதியில் பிறக்காவிட்டாலும்
தலித் இலக்கியம் படைக்க உரிமை உடையவர்கள். இவர்கள்,
‘தலித்’ களின் வாழ்க்கையை அருகில் இருந்து பார்த்து, அவர்
கட்கு ஏற்படும் சமூகப் பிரச்னைகளை அடிப்படையாகக்
கொண்டு இலக்கியம் படைப்போராவர்.
தமிழில் தலித்திய எழுத்துகளின் முன்னோடி என்று
கூறத்தக்கவர் ஈழ எழுத்தாளர் கே. டானியல் ஆவார்.
ஈழத்துத் தீண்டாமைக் கொடுமைகளைத் தனது எதார்த்த
எழுத்துகள் அனைத்திற்கும் கருப்பொருளாய்
எடுத்துக்கொண்டவர். தலித்தியத்திற்கு இன்றுள்ள
அங்கீகாரமெல்லாம் இல்லாத ஒரு காலகட்டத்தில் தலித்
நாவல்களைப் படைத்தவர். டானியல் எழுதிய பஞ்சமர் உயர்
சாதியினரை எதிர்த்து, அவர்களின் உயர்சாதி
மனப்பான்மையை எதிர்த்துப் போராடும் மக்களைப் பற்றிய
நாவலாகும்.
தமிழகத்தில் அறுபதுகளில் பிறந்து இன்று ஆசிரியப்
பணியாற்றும் பாமா தலித்திய நாவலாசிரியர்களில்
குறிப்பிடத்தக்கவர். இவரின் கருக்கு, சங்கதி இரண்டு ஆகிய
இரு நாவல்களும் மிகச் சிறந்த தலித்திய நாவல்களாகும்.
இவரின் முதல் நாவலான கருக்கு தமிழின் முதல் தலித்
இலக்கியத் தன்வரலாற்று நாவல் என அனைத்துத்
தரப்பினராலும் பாராட்டப்பட்ட ஒன்று. ஒரு பெண்ணாக,
கிருத்துவப் பெண் துறவியாகத் தென்மாவட்ட கிராமம்
ஒன்றில் தான் பட்ட அனுபவங்களே இவர் எழுதும்
தன்வரலாற்று நாவல் ஆன கருக்கு ஆகும். கருக்கு நாவலின்
முன்னுரையிலேயே பாமா கூறுகிறார்;
என்னை அறுத்துரணமாக்கிய நிகழ்வுகள், என்னை
அறியாமையில் ஆழ்த்தி முடக்கிப் போட்டு மூச்சு திணற
வைத்த அதீத சமுதாய அமைப்புகள், இவற்றை
உடைத்தெறிந்து அறுத்தொழித்து விடுதலை
பெறவேண்டும் என்று எனக்குள் எழுந்த சுதந்திரப்
பிரளயங்கள். இவை சிதறடிக்கப்பட்டு, சின்னா பின்ன
மாக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் எனக்குள் கொப்பளித்துச்
சிதறிய குருதி வெள்ளங்கள் எல்லாம் சேர்ந்தது தான்
இப்புத்தகத்தின் கரு.”
தலித் இலக்கிய எழுத்தாளர்களில் இன்னொரு பெண்
எழுத்தாளர் சிவகாமி. தொண்ணூறுகளில் தமிழ்ச் சூழலில்
அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். இவரது பழையன
கழிதலும், ஆனந்தாயி ஆகிய நாவல்கள் தமிழில் பெரும்
வாசிப்புக்கு உள்ளானவை. பழையன கழிதலும் தலித்மக்களின்
பிரச்சனையை முன் வைத்து எழுதப்பட்ட நாவலாகும்.
தலித் இலக்கியம் என்று இலக்கியத்தைப் பிரிப்பதில்
எனக்கு உடன்பாடு இல்லை என்று கூறும் பூமணி ஒரு
தலித்திய நாவலாசிரியரே. பூமணியின் பிறகு என்ற நாவல்
சிறந்த தலித் நாவல்களில் ஒன்றாகப் பலரால் பேசப்படுகிறது.
கு. சின்னப்ப பாரதி எழுதிய சங்கம்
என்ற நாவலை
இன்னொரு தலித்திய நாவல் என்றே கொள்ளலாம். மலைவாழ்
தலித் மக்கள் சமவெளிவாழ் தலித்திய மக்களைவிடக் கல்வி
அறிவிலும், சமூகப்பிரச்சனையிலும் மிகவும் பிற்பட்டவர்கள்.
அவர்கள் தமக்குள் இணைந்து ஒரு சங்கம் அமைக்கப் படும்
துன்பத்தை இந்நாவல் காட்டுகிறது. அவர்கள் உற்பத்தி செய்த
காய், கனி ஆகியவற்றை உரிய விலைக்கு விற்பதற்குப் படும்
துன்பத்தை இந்நாவல் எடுத்துரைக்கிறது.
தமிழ் நாவல்களில் தலித் நாவல்கள் தலித் மக்களின்
வாழ்க்கையை அவர்களின் மொழி நடையிலேயே கூறுகின்றன.
தலித் மக்கள் பிற மக்களால் எவ்வாறு
கொடுமைப்படுத்தப்பட்டனர் என்பதை விளக்குகின்றன.
தலித் மக்களின் போராட்டங்கள் எவ்வாறு தொடங்கின
என்பதையும், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்ட சூழலையும்
கூறுகின்றன.