தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4.1 மொழித் தோற்றும்

4.1 மொழித் தோற்றம்

நமது நினைவிற்கு எட்டாத காலம் முதல் சமுதாயத்தில்
மனிதன் ‘மொழியைப்’ பேசி வருகிறான். சில ஆயிரம்
ஆண்டுகளாக மொழியை எழுதி வருகிறான். மனிதன் பெற்ற
பெருஞ்செல்வங்களுள் மொழியும் ஒன்றாகும். மொழி மனித
வாழ்வோடு நெருங்கிய தொடர்புடையது. அதனால் அறிஞர்கள்
மொழியின் தன்மை பற்றிப் பண்டைக் காலத்திலேயே
சிந்திக்கத் தொடங்கினார்கள். மொழியைப் பிறருக்குச் சொல்லித்
தரவும், தாம் படிப்பதற்குப் பயன்படுத்தவும் ஆரம்பித்தார்கள்
பிறகு மொழி வளர்ச்சி பெறத் தொடங்கியது. மனிதன்
தனது உணர்வுகளை மொழிவழி வெளிப்படுத்திய போது, அது
கவிதை வடிவமாகவும், உரைநடை வடிவமாகவும் வெளிப்பட்டது.

4.1.1 உரைநடையின் தோற்றம்

சமுதாயம், தேவைகளுக்கேற்ப இலக்கியங்களைப் படைத்துக்
கொள்ளும்     இயல்புடையது. கவிதையும் உரைநடையும்
அவ்வக்காலச் சூழலுக்கு     ஏற்ப,     கருத்துக்களுக்குரிய
வடிவங்களாக வளர்ச்சி பெற்றன. கவிதையும் உரைநடையும்
காலத்தின் தேவையைக் கருதி உருவாகியவையாகும். கவிதை
அமைத்துத் தர இயலாத எளிமையையும், சிந்தனையையும்
உரைநடை தந்தது. கல்வியறிவு குறைவான, இல்லாத எளிய
மனிதர்களை உரைநடை எட்டியது. பண்டிதர்கள் கைக்குக்
கவிதை சென்றது.

உரைநடையின் நிலை

உலக     இலக்கிய வரலாறுகளைப் பார்க்கும்போது,
உரைநடையே காலத்தால் பிற்பட்டது என்பதை அறிகிறோம்.
ஏறத்தாழ எல்லா     உலக     மொழிகளிலும் பண்டை
இலக்கியங்கள் செய்யுள் வடிவிலேயே அமைந்திருந்தன.
‘இலக்கிய வரலாற்றில் செய்யுளே உரைநடையினும் பழைமை
வாய்ந்தது’ என்பார் எமர்சன் என்ற அறிஞர். கிரேக்கம்,
இலத்தீன், சீனம், வடமொழி, தமிழ் போன்ற மொழிகளில்
பழைய இலக்கியங்கள் யாவும் செய்யுள் வடிவிலேயே
அமைந்துள்ளன. செய்யுளைத்     தொடர்ந்தே தமிழிலும்
உரைநடை தோற்றம் பெற்றது. ஆனால் அது எந்தக்
காலத்தில்     தோன்றியது,     அதன் ஆரம்ப வடிவம்
எத்தகையது என்பதை இன்று கூற முடியாத நிலை உள்ளது.

4.1.2 உரைநடையும் செய்யுளும்

தற்காலத்தில் செய்யுளைவிட உரைநடை செல்வாக்குப்
பெற்றுள்ளது. ஆனாலும் கடுமையான செய்யுள் பகுதிகளுக்கும்
அருமையான விளக்கம் தரும் மாணவர்கள், எளிய உரைநடை
பற்றி எதுவும் கூற இயலாது தவிக்கின்றனர். நாம் பேசுவது
உரைநடை; எழுதுவது உரைநடை; நம் அடிமனம் சிந்திப்பது
உரைநடையில்தான். மாணவர்கள் செய்யுள் நூல்களைவிட
உரைநடை நூல்களையே விரும்பிப் படிக்கின்றனர்.

உரைநடை வடிவம் பற்றிய வினாக்கள் வந்தால் திகைத்து
நிற்கின்றனர். இதன் காரணம் கவிதையை எவ்வாறு
அணுகுவது, ஆராய்வது என்று ஆசிரியர்கள் சொல்லித்
தந்திருப்பதோடு, அது குறித்து நூல்களும் எழுதியுள்ளனர்.
ஆனால் உரைநடையை அவ்வாறு அணுகப் பயிற்சி ஏதும்
மாணவர்கள் பெற்றதில்லை. அதுவே திகைத்து நிற்கக்
காரணமாகும்.

உரைநடை - செய்யுள் வேறுபாடுகள்

உரைநடையும் செய்யுளும் எதிர்எதிர் முனைகளாகும்.
அவற்றிற்கு இடையே பல வேறுபாடுகள் உள்ளன. அவற்றில்
சில,

உணர்ச்சியில் எழுவது கவிதை; சிந்தனையில் எழுவது
உரைநடை.

கவிதை தருவது கற்பனை இன்பம்; உரைநடை தருவது
அறிவின்பம்.

எதுகை, மோனை என ஓசை அமைப்புடையது கவிதை;
அவையில்லாத தன்மையுடையது உரைநடை.

கவிதையை மடக்கி மடக்கி எழுதுகிறோம்; உரைநடையை
நீண்டதாக எழுதுகிறோம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:49:21(இந்திய நேரம்)