தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4.2

4.2 உரை நூல்கள்

மருத்துவம், சோதிடம், கணிதம் என மனிதன் உருவாக்கிய
பல்வேறு துறைகளும் செய்யுள் வடிவிலேயே அமைந்திருந்தன.
காலப்போக்கில் மொழியில் ஏற்பட்ட மாற்றங்களினால், அவை
எளிதில் புரியாத நிலை ஏற்பட்டது. அப்போது அவைகளைப்
படிப்போர் விளங்கிக் கொள்வதற்காக உரை எழுதப்பட்டது.
உரைநடையின்     வளர்ச்சி     இவ்வாறு தொடங்கியது.
காலப்போக்கில் செய்யுள் நூல்களுக்குத் துணை நூல்களாகவும்,
சார்பு நூல்களாகவும் தமிழில் உரைநூல்கள் தோற்றம் பெற்றன.

4.2.1 உரை - ஒரு விளக்கம்

தமிழ்க் கலைக்களஞ்சியம் உரை என்ற சொல்லுக்கு
விளக்கம் தரும்போது, “உரைத்தான் என்பதற்குச் சொன்னான்
என்பது பொருள். ஆகையால் உரை என்பதற்குச் சொல்
என்றே பொருள்படும். இது ஆகுபெயராய்ச் சொல்லின்
பொருளைக் குறித்து வழங்குகின்றது. புலமை மிக்கவர்
இயற்றும் நூலைப் பொதுமக்களும் உணர்தல் வேண்டின்
அதற்கு விளக்கம் வேண்டியுள்ளது. அவ்விளக்கம் உரை
எனப்படும்.” எனக் கூறும்.

குன்றம் குமுறிய உரை என்னும் (பரிபாடல்) வரியில்
உரை என்பது முழக்கம் என்ற பொருளில் வருகிறது.

திருமணம் செல்வக்கேசவராய முதலியார் அவர்கள் தம்
நூலில் ‘கவியின் வேறாய சொன்னடை தமிழில் உரை
எனப்படும். உரை என்பது பேச்சு என்பதற்கும் வியாக்கியானம்
என்பதற்கும் வழங்கும் வார்த்தை’ என விளக்குவார்.

‘உரைக்கப் பெறுவதனால் உரையாயிற்று’ என்பார்
அ.மு.பரமசிவானந்தம்.

உரை - தமிழ் அகராதி விளக்கம்

உரைநடை என்பதற்கு வசனநடை எனத் தமிழ் லெக்சிகன்
விளக்கம் தரும். உரை, உரைநடை என்னும் சொற்கள்
தொல்காப்பியக் காலம் முதலே வழங்குகின்றன. எனினும்
உரைநடை என்னும் சொல்லமைப்பு, காலத்தால் மிகவும்
பிற்பட்ட     இருபதாம்     நூற்றாண்டுக்கு உரியதாகவே
தோன்றுகிறது. நா.கதிரைவேற் பிள்ளை 1922இல் தமிழ் மொழி
அகராதி
யைத் தொகுத்தார். க.பவானந்தம் பிள்ளை 1925இல்
தற்காலத் தமிழ்ச் சொல்லகராதியைத் தொகுத்தார்.
ஆனால் அவையிரண்டிலும் உரைநடை என்ற சொல்
காணப்படவில்லை. முதன் முதலில் தமிழ்ப் பேரகராதியே
(1924-36) உரைநடை எனக் குறிக்கின்றது.

உரை - ஆங்கில அகராதி விளக்கம்

ஆங்கிலத்தில் Prose என்ற சொல்லால் உரைநடையைக்
குறிப்பார்கள். ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி ‘உரைநடை
என்பது செய்யுளுக்குரிய சீர் இல்லாமல் பேசப் பெறும்
அல்லது எழுதப் பெறும் மொழியின் அமைப்பாகும். உள்ளதை
உள்ளவாறு கூறுந்தன்மையுடயது’ என்று கூறுகிறது. சேம்பர்ஸ்
இருபதாம் நூற்றாண்டு ஆங்கில அகராதியும், “செய்யுளுக்குரிய
சீர் முதலியவை இன்றிப் பொருளை நேராக விளக்கும்
சொற்களையுடைய அமைப்பே உரைநடை. இது சாதாரணமாகப்
பேசுவதும், எழுதுவதும் ஆகும்” என விளக்கம் அளிக்கிறது.
கார்டினர் என்பவர் ‘எளிமையாக விளங்கிக் கொள்ளுமாறு
உரைப்பதே உரை’ எனக் கூறுவார்.

பிறமொழிகளில் உரைநடை

கிரேக்க மொழியில் கி.மு.ஐந்தாம் நூற்றாண்டிலேயே
உரைநடை இலக்கியம் இருந்துள்ளது. இலத்தீன் மொழியில்
கி.மு.முதல் நூற்றாண்டிலும், இங்கிலாந்து, ஜெர்மனி நாடுகளில்
கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டிலும் உரைநடை தோன்றி வளர்ச்சி
பெற்றது.

தன்மதிப்பீடு : வினாக்கள் - I

1.

மனிதன் பெற்ற பெருஞ்செல்வங்களில் ஒன்று -
எது?

2.

காலத்தால்     முற்பட்டது     கவிதையா, உரைநடையா?

3.

பழைய இலக்கியங்கள் எந்த வடிவில் எழுதப்பட்டன?

4.

‘உரை’ என்பதற்கு கலைக்களஞ்சியம் கூறும் பொருள் யாது?

5.

இலத்தீன் மொழியில் உரைநடை எப்போது தோற்றம் பெற்றது?

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:49:25(இந்திய நேரம்)