தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4.5 இருபதாம் நூற்றாண்டு உரைநடை

4.5 இருபதாம் நூற்றாண்டு உரைநடை

19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கில மொழிக்
கல்வி தமிழ்நாட்டில் பரவியது. அக்கல்வி முறையினால்
தமிழகத்தில் பல புதிய மாற்றங்கள் ஏற்பட்டன. ஐரோப்பிய
நாடுகளில் வளர்ந்த அறிவியல் கலைகளின் பாதிப்பு, இங்கும்
ஏற்படத் தொடங்கியது. மக்கள் அறிவியல் சம்பந்தமான
கருத்துக்களைத் தமிழ் மொழி வாயிலாக வெளியிடுவதற்கு
முற்பட்டனர். அதனால் தமிழ் உரைநடை புதுப்புதுச் சொற்கள்,
சொற்றொடர்களை உருவாக்கிப் புதுமலர்ச்சி கண்டது. சமயக்
கருத்துகளையும்,. செய்யுளுக்குப் பொருளையும் மட்டுமே
விளக்க என இருந்த உரைநடையின் போக்கு மாறியது.
இயற்கைக் காட்சிகள், வாழ்க்கைச் சம்பவங்கள், உணர்ச்சி
பேதங்கள், அறிவியல் ஆய்வுகள் எனப் பன்முகத் தன்மை
கொண்டதாக உரைநடை விளங்கியது.

மேலைநாட்டார் உரைநடை

மேலை நாட்டார் வரவால் தமிழ் உரைநடை புதிய எழுச்சி
பெற்றது. முற்காலத்தில் தமிழை எழுதும் போது சொற்களைப்
பிரித்து எழுத மாட்டார்கள். பல சொற்களையும் ஒன்றாகச்
சேர்த்து எழுதுவார்கள். ஆனால் மேலை நாட்டார்
சொற்களைப் பிரித்தே எழுதுவர். அம்முறையைப் பின்பற்றித்
தமிழ் மொழிச் சொற்களையும் பிரித்து எழுத ஆரம்பித்தனர்.
அகராதிகள் பலவற்றையும் தொகுத்து     வெளியிட்டனர்.
பொதுமக்கள் பேசும் சொற்களைப் பயன்படுத்தித் தமிழுக்கு
ஒரு புதிய நடையை ஏற்படுத்தினர்.

4.5.1 பேச்சும் எழுத்தும்

இருபதாம் நூற்றாண்டிலே உரைநடை மிகப் பெரிய
வளர்ச்சி பெற்றது. தற்கால உரைநடை இரண்டு பகுதிகளைக்
கொண்டதாக எல்லா மொழிகளிலும் அமைகின்றது. அவை

(1) பேச்சு மொழி

(2) எழுத்து மொழி

என்பனவாகும். மக்கள் சாதாரணமாக ஒருவர்
இன்னொருவரிடம் பேசுவது பேச்சு மொழி, ஒருவர் தன்
கருத்தை எழுத்தாக வடிப்பது எழுத்து மொழி, பேச்சுமொழி
இடத்திற்கு இடம், சமுதாயத்திற்குச் சமுதாயம் மிக வேறுபடும்.
எழுத்துத் தமிழில் அத்தகைய வேறுபாடுகள் மிகக் குறைவு.

தென்னிந்திய மொழிகளில் தற்காலத் தெலுங்கு இலக்கியம்
கையாளும் மொழிக்கும், பேசும் தெலுங்கிற்கும் அதிக
வேறுபாடு இல்லை. கன்னடத்தில் ஓரளவு வேறுபாடு
காணப்படுகின்றது. ஆனால் பேச்சும், எழுத்தும் மிக விலகி
நிற்பது தமிழ் மொழியில்தான். இன்றைய பேச்சுத் தமிழும்,
எழுத்துத் தமிழும் இருவேறு மொழிகளோ எனச் சந்தேகம்
கொள்ளும் அளவிற்கு வேறுபட்டு நிற்கின்றன. புத்தகத்தில்
தமிழ் படித்த வெளிநாட்டார் அல்லது அயல் மாநிலத்தார்
இங்கு வந்தால் தமிழ் மக்கள் பேசுவதைப் புரிந்து கொள்வது
சிரமமே.

வங்காள மொழியும் வெகு காலமாக எழுத்து மொழியான
சாது பாஷை, பேசும் மொழியான சலித் பாஷை என
இரண்டு பிரிவுகளாக வேறுபட்டு நின்றன. பின் மகாகவி
இரவீந்திரநாத் தாகூர் போன்றோரின் முயற்சியால் இரண்டும்
ஒன்றாகியது. இன்று பேசும் மொழியான சலித் பாஷை மட்டும்
உள்ளது.

தமிழகத்தில்     இன்று பேச்சுத் தமிழே பத்திரிகை,
தொலைக்காட்சிகளில் பயன்பட்டு வருகின்றது. உரைநடை
வடிவங்களான நாவல், சிறுகதை, ஓரளவு கவிதை ஆகியவற்றில்
இன்று பேச்சுத் தமிழே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது.

இலங்கை, யாழ்ப்பாணத் தமிழ் மட்டுமே எழுத்துத்
தமிழிலிருந்து பெரும்பாலும் மாறாத் தன்மை கொண்டுள்ளது.
இதன் காரணம் பழந்தமிழின் இயல்பு அதிக அளவில்
யாழ்ப்பாணத் தமிழில் அமைந்திருப்பதே ஆகும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:49:31(இந்திய நேரம்)