Primary tabs
5.2 பிற்கால
உரைநடை
பிற்காலத்தில்,
சமண முனிவர்கள் உரைநடை, களவியல்
உரைநடை, பாரத வெண்பா உரைநடை என்று அடையாளம்
காணும் வகையில் மூன்று பிரிவு உரைநடைகள் இருந்தன.
சமணர் தோற்றுவித்த உரைநடை
பல்லவர் காலத்தில்
வாழ்ந்த சமண முனிவர்கள் சிலர்,
தமிழையும் வடமொழியினையும் கலந்து எழுத முற்பட்டனர்.
இத்தகைய புதிய உத்தியை ‘மணிப்பிரவாள நடை’ என்று
கூறலாம். வைணவ உரையாசிரியர்கள் பிற்காலத்தில் பெரிதும்
பின்பற்றிய மணிப்பிரவாள நடைக்கு சமணர்கள் அன்றே
வழிவகுத்தனர் என்று கொள்ளலாம். சமணர்கள் மணிப்பிரவாள
நடையில் ஸ்ரீபுராணம், கத்திய சிந்தாமணி போன்ற வசன
நூல்களை எழுதினர். ஆனால் சமணர்கள் முயற்சி முழுமையாக
வெற்றி பெறவில்லை. ஆயினும் தமிழில் ஜ, ஸ, ஷ, க்ஷ, ஹ
எனும் 5 கிரந்த எழுத்துகளின் ஓசை புகுந்து கலந்தன.
அத்துடன் மிகுதியான அளவில் வடசொற்களும் கலந்து
விட்டன என்று கூறலாம்.
களவியல் உரைநடை
இறையனார் அகப்பொருளுக்கு
எழுந்த நக்கீரர் உரையே
இன்று நமக்குக் கிடைத்துள்ள உரைநூல்களில் காலத்தால்
முந்தியது. இது களவியல் உரை என்றும் அழைக்கப்படும்.
இதனுடைய காலம் கி.பி.எட்டாம் நூற்றாண்டாக இருக்கலாம்.
தமிழ் உரைநடை வரலாற்றில் இது சிறப்பிடம் பெற்று
விளங்குகின்றது. சங்க காலத்தில் எழுந்த இறையனார்
அகப்பொருளுக்குச் சங்கப் புலவராகிய
நக்கீரரே
முதன்முதலாக உரை கூறினார். பல ஆண்டுகளாகச் செவி
வழிக் கேட்டுப் பின் ஏட்டுச் சுவடியில் எழுதப்பட்டது என்பன
போன்ற செய்திகள் அந்நூலின் உரைப்பகுதியில் உள்ளன.
நக்கீரர், நூற்பாவுக்கு
உரை கூறுமுன்னர்க் கருத்துரை,
பதவுரை, பொழிப்புரை, அகலவுரை என்னும் உரைக்
கூறுபாடுகளை விளக்கி, அதன் பின்னர் அந்நூற்பாவுக்கு
முறையே நான்கு வகை உரைகளையும் வகுத்துக் கூறியுள்ளார்.
களவியல் நூற்பாக்கள் அறுபதுக்கும் அவர் இம்முறையைக்
கடைப்பிடித்துள்ளார்.
இறையனார் அகப்பொருள்
உரையில், உரைநடை
கீழ்க்காணும் தன்மைகளில் அமைகின்றது.
கவிதைப் பண்பு கொண்ட உரைநடை
எளிமையான உரைநடை
வினாவிடை முறையில் அமைந்த உரைநடை
இறையனார்
களவியல் உரையில் அமைந்த
உரைநடைக்குச் சான்றாக அந்நூலிலிருந்து ஒரு பகுதியைக்
காணலாம். “இனிப் பயன் என்பது ‘இது கற்க இன்னது பயக்கும்’
என்பது. ‘இது கற்க இன்னது பயக்கு மென்பதறியேன் ; யான்
நூற்பொருள் அறிவல்’ என்னுமேயெனின், ‘சில்லெழுத்தினால்
இயன்ற பயனறியாதாய், பல்லெழுத்தினான் இயன்ற நூற்பொருள்
எங்ஙனம் அறிதியோ பேதாய்’ எனப்படுமாகலின் இன்னது
பயக்குமென்பது அறியல் வேண்டும்”.
“தமிழ் உரைநடையின்
ஆரம்ப காலத்தை - கவிதை
நிலையிலிருந்து உரைநிலைக்குத் தமிழ் மாறுகிற ஒரு
காலப்பகுதியைக் களவியல் உரை காட்டுகிறது” என்பார்
மு.வரதராசன். இவ்உரைநடை பற்றி அ.மு.பரமசிவானந்தம்
கூறும்போது, “இக்களவியல் உரை தமிழ் உரைநடை
வளர்ச்சியில் ஒரு மைல் கல்.... அடுத்து வரப்போகின்ற பெரிய
உரையாசிரியர்க்கெல்லாம் வழிகாட்டியாகவும், மணிப்பிரவாள
நடைக்கு வித்திட்டதோ என்னுமாறும் இவ்வுரை செல்கிறது”
என்பார்.
தமிழின் உரைநடையை
இறையனார் களவியலே தெளிவாகக்
காட்டுகிறது. கவிதையும்,
எளிமையும் கலந்த நடை,
வினா-விடையில் அமைந்த நடை என இறையனார் களவியல்
உரையின் தன்மைகள் அமைகின்றன.
பாரத வெண்பா உரைநடை
பெருந்தேவனார்
என்பவரால் எழுதப்பட்ட பாரத
வெண்பா கி.பி.9ஆம் நூற்றாண்டில் எழுந்தது என்பர்.
இப்பாரதம் குறைப்பிரதியாகக் கிடைத்துள்ளது என
எஸ்.வையாபுரிப் பிள்ளை கூறுவார். பாரத வெண்பாவின் உரை,
இறையனார் அகப்பொருள் உரையைக் காட்டிலும் தெளிவும்
சொல்சுருக்கமும் உடையனவாக விளங்குகின்றன. வடமொழிச்
சொற்கள் அதிகம் கலந்து வருகின்றன. “இவ்வகை காவலர்
சொல்லக் கேட்டு மிகவும் பிரியப்பட்டுக் கதுமெனக் கோவிலுட்
புகுந்து வில்லென வளைந்து விரிகுடையுங் கோலும்
ஊன்றிமெல்லெனச் சென்ற பிராமணனைக் கண்டு கன்னன் எதிர்
சென்று அர்க்கிய பாத்தியங் கொடுத்து...” என்னும் உரைநடைப்
பகுதி பாரத வெண்பாவின் எளிய நடையைக் காட்டுகிறது.
எளிமை, சொல்சுருக்கம்,
வடமொழிக் கலப்பு என்னும்
தன்மைகள் அமைந்த உரைநடையே பாரத வெண்பா
உரைநடையாகும்.