தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

5.3

5.3 உரையாசிரியர்களின் உரைநடை

கி.பி.பத்தாம் நூற்றாண்டு முதல்     கி.பி.பதினேழாம்
நூற்றாண்டு வரை உள்ள காலப்பகுதி உரையாசிரியர்கள் காலம்
எனப்படுகின்றது. அதாவது இளம்பூரணர் காலந்தொடங்கி
நச்சினார்க்கினியர் வரை உள்ள காலப்பகுதி இவ்வாறு
சுட்டப்படுகின்றது. தமிழ் உரைநடை மிகச் சிறப்பாக
வளர்ச்சியுற்ற காலம் அதுவாகும். பெருமன்னர்கள் தமிழகத்தில்
தோன்றி ஆட்சி புரிந்ததும், வணிகம் செழித்ததும், அரசியல்
தத்துவ ஆராய்ச்சி, நூலாராய்ச்சி பெருகியதும் உரைநடை
இக்காலத்தில் சிறந்து வளரக் காரணங்கள் ஆயிற்று. மொழி
வளர்ச்சியால் பழைய நூல்களைப் புரிந்து கொள்வதில் கடினம்
ஏற்பட்டது. அதனால் உரையாசிரியர்கள் தோன்றி உரை எழுதும்
சூழலும் ஏற்பட்டது.

5.3.1 இளம்பூரணர் உரைநடை

உரையாசிரியர்களில் காலத்தால் முந்தியவர் இளம்பூரணர்.
இவரை உரையாசிரியர் என்ற பெயரிலும் அழைப்பர். மேலும்
இளம்பூரணரும் மணக்குடவரும் ஒருவரே என்று தி.வை.சதாசிவ
பண்டாரத்தார் கூறுவார். மு.அருணாசலம் இளம்பூரணர் காலம்
கி.பி.1070 முதல் கி.பி.1095 வரை இருக்கலாம் என்பார்.
இளம்பூரணர் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை
வரைந்துள்ளார். இளம்பூரணர், பொதுவான ஒரு நெறியை உரை
முழுவதும் மேற்கொண்டுள்ளார் என்று கூறலாம். அதிகார
விளக்கம், இயல் பற்றிய சுருக்கம், நூற்பா நுதலும் பொருள்,
தெளிவுரை, சொல்தொடர் விளக்கம், மேற்கோள் விளக்கம்
என்ற பொது அமைப்பு அவர் உரையில் காணப்படும்.

உரைச்சிறப்பு

“இச்சூத்திரத்துள் ஒழிய என்னும் வினையெச்சம் எவ்வாறு
முடிந்தது எனின், அது பாத்திய என்னும் பெயரெச்சத்தோடு
முடிந்தது. அப்பெயரெச்சம் பண்பு என்னும் பெயர் கொண்டு
ஐந்திணை என்னும் எழுவாய்க்குப் பயனிலையாகி நின்றது என
உரைப்ப” - இது இளம்பூரணரின் உரைநடை வரிகளாகும்.

பெயர் சுட்டாது உரை கூறுதல், அடக்கமாக உரை
சொல்லுதல், ஒன்றிற்கு ஒன்று தொடர்பு காணல், நினைவு
கூர்தல், பின்நோக்கிப் பார்த்து உரை கூறல், பொருத்திக்
காட்டுதல், தாமே வினா எழுப்பி விடை காணுதல் என்பன
அவரின்     உரைநடைத்     தன்மையில் காணப்படுவதாக
இளம்பூரணர் உரை
என்னும் நூலில் முனைவர்
சா.கிருட்டிணமூர்த்தி குறிப்பிடுகிறார்.

5.3.2 சேனாவரையர் உரைநடை

தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு மட்டுமே உரை
வகுத்தவர் சேனாவரையர். இவர் திருநெல்வேலியிலுள்ள
ஆற்றூரைச் சார்ந்தவர் என்பார். இவரின் காலம் பதின்மூன்றாம்
நூற்றாண்டு. சேனாவரையர் என்ற தொடர் படைத் தலைவர்
என்று     பொருள்படும்.     இவர்     உரையில் யானை,
போர்ப்பொருள்கள் பற்றிய சொற்கள் அதிகம் வருகின்றன. இவர்
வடமொழி, தமிழ்மொழி இரண்டிலும் வல்லுநராக விளங்கினார்.

உரைச்சிறப்பு

சேனாவரையர் உரைநடை, மாணாக்கருடன் நேரில் பேசுவது
போல் அமைந்து காணப்படும். வினாக்களை எழுப்பி விடை
கூறிச் செல்லும் முறையில் உரையை எழுதியுள்ளார். பொதுவாகத்
தருக்க நடையில் உரை காணப்படும்.

என்சொல்லியவாறோ     எனின்’, ‘அறியாதானை
உணர்த்துமாறு என்னை’, ‘கூறிய கருத்து என்னை எனின்’

என்பன சில எடுத்துக் காட்டுகளாம்.

வடமொழிப் புலமை மிக்கக் காரணத்தால் தமிழில்
வடமொழி இலக்கணக் கொள்கையைத் திணிக்கும் போக்கு
இவரிடம் காணப்படுகின்றது.     வடமொழிச் சொற்களை
மிகுதியாகப் பயன்படுத்துவதையும் காணலாம்.

பிறர் உரைகளை மறுத்தெழுதும் போக்கு இவரிடமிருந்து
உரைநடை வரலாற்றில் தொடங்கக் காணலாம். இளம்பூரணரை
ஐம்பது இடங்களில் மறுத்து உரை எழுதியுள்ளார் சேனாவரையர்.

சேனாவரையர் நடை கடுமையானது. இரும்புக் கடலை
என்று அவர் உரையைக் கூறுவர். இவரது உரைநடை போன்றே
அண்மைக் காலத்தில் வாழ்ந்த மறைமலை அடிகளார் நடை
அமைந்திருந்தது என உரைநடை ஆய்வாளர் கூறுவர்.

5.3.3 பேராசிரியர் உரைநடை

பேராசிரியர் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை
எழுதியதாகக் கூறுவர். இன்று மெய்ப்பாட்டியல், உவம இயல்,
செய்யுளியல், மரபியல் ஆகியவற்றிற்கு மட்டுமே இவர் உரை
கிடைத்துள்ளது. இவர் குறுந்தொகை, திருக்கோவையார்
ஆகிய நூல்களுக்கும் உரை எழுதியதாகக் கூறுவர். “அவர்
காலத்தில் அவரைப் போன்ற பெருமை உடைய ஆசிரியர்
இல்லாததால் தான், அவருக்குப் பேராசிரியர் என்ற சிறப்புப்
பெயர் வழங்கியது” என்று தம் உரைநடை வரலாறு என்ற
நூலில் வி.செல்வநாயகம் கூறுவார்.

உரைச்சிறப்பு

பேராசிரியரின்     உரைநடை     இளம்பூரணரைப்
பின்பற்றியதாகத் தெரிகிறது. இவரது நடை சிறு சிறு
வாக்கியங்களைக் கொண்டது. ஆனால் விளக்கம் மிகுந்தது.

பேராசிரியர் தம் உரைநடையில் புதிய வழக்குகளையும்
பயன்படுத்தியுள்ளார். இவரது நடையில் இலக்கியத் திறனாய்வு
நெறிகளையும் காணலாம்.

5.3.4 பரிமேலழகர் உரைநடை

திருக்குறளுக்கு உரைவகுத்த ஆசிரியர்களுள் சிறந்தவர்
பரிமேலழகர். இவர் பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்
என ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். காஞ்சிபுரத்து அந்தணர்
மரபினர். வடமொழியும் தமிழும் கற்றவர். வைணவ
சமயத்தினைப்     பின்பற்றியவர்.     திருக்குறளுக்கும்,
பரிபாடலுக்கும் இவர் இயற்றிய உரை கிடைத்துள்ளது.
திருமுருகாற்றுப் படைக்கு இவர் உரை எழுதியதாகக் கூறுவர்.

உரைச்சிறப்பு

பரிமேலழகர் உரைநடை மிகுந்த சொல்செறிவும், சுருக்கமும்
கொண்டது. தேவையற்ற சொற்களை இவர் உரைநடையில்
பயன்படுத்துவதில்லை.

மேற்கோளாகக் காட்டும் செய்யுளையும் உரைநடையாகவே
பரிமேலழகர் எழுதுவது வழக்கம். வடமொழிக் கருத்துகளை
மேற்கோளாகக் காட்டுவார். இவரது உரைநடையில் இலக்கணக்
குறிப்புகள் காணப்படும்.

5.3.5 அடியார்க்கு நல்லார் உரைநடை

அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரத்திற்கு உரை
எழுதியுள்ளார். இவர் வடமொழியிலும் தமிழிலும் புலமைமிக்கவர்.
அக்காலத்திய இசைத் தமிழ், நாடகத் தமிழ் நூல்களைப் பற்றிய
செய்திகளை இவரது உரைநடை மூலமே நாம் அறிகிறோம்.

உரைச்சிறப்பு

அடியார்க்கு நல்லார் உரைநடை ஓசைப் பண்பைக்
கொண்டதாக அமைகின்றது. பல இடங்களில் உணர்ச்சிக் கலப்பு
உள்ளதாகவும் அமைகின்றது. உணர்ச்சியை வெளிப்படுத்தும்
உரைநடை அடியார்க்கு நல்லார் உரைநடையில் இருந்து
துவங்குகிறது எனலாம்.

5.3.6 நச்சினார்க்கினியர் உரைநடை

‘உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர்’ எனக் கற்று
அறிந்த சான்றோர்களால் பாராட்டப்படுபவர் நச்சினார்க்கினியர்.
இவர் மதுரையைச் சார்ந்தவர் என்பர். பண்டைத் தமிழ் நூல்கள்
பலவற்றுக்கு     உரை     வரைந்தவர் நச்சினார்க்கினியர்.
தொல்காப்பியம், பத்துப்பாட்டு,     கலித்தொகை,
குறந்தொகை
யில் இருபது பாக்கள், சீவக சிந்தாமணி
ஆகியவற்றுக்கு உரை எழுதியுள்ளார். இதனால் இவரை உரை
வேந்தர்
என அழைப்பர்.

உரைச்சிறப்பு

இலக்கணத்திற்கும், இலக்கியத்திற்கும் சிறந்த உரையைப்
படைத்த நச்சினார்க்கினியர், பிற உரையாசிரியர்கள்
எடுத்துக்காட்டாத சான்றுகளை எடுத்துக் கூறியுள்ளார். இவரது
உரைநடை உதாரணங்கள் நிறைந்த உரைநடையாக அமைய
இதுவே காரணம்.

நச்சினார்க்கினியர் உரைநடையில், கல்வி காரணமாக
அவருக்கு உண்டான பெருமிதத்தைக் காணலாம். கம்பீரமான
உரைநடை அவருடையது. “நச்சினார்க்கினியரிடமிருந்தே சிறந்த
உரைநடை தொடங்கிற்று” என்று உ.வே.சாமிநாதய்யர் கூறுவார்.

5.3.7 தெய்வச் சிலையார் உரைநடை

தொல்காப்பியத்தில்     சொல்லதிகாரத்திற்கு     உரை
எழுதியவர் தெய்வச் சிலையார். வடமொழி இலக்கண அறிவு
மிகுந்தவர்.

உரைச்சிறப்பு

உரைநடையில் புதிய சிந்தனைகளையும், விளக்கங்களையும்
தந்தவர் தெய்வச்சிலையார்.

விளங்காத பகுதிகளை விளங்கவில்லை என்று குறிப்பிடுவது
ஒரு புதுமையாகும். இவர் உரை விருத்தியுரை எனப் பெயர்
பெற்றிருந்தது.

5.3.8 பிற உரையாசிரியர்கள் உரைநடை

பிற உரையாசிரியர்களில் சங்கர நமச்சிவாயர் சிறப்பு
மிகுந்தவர். திருக்குறளுக்கு உரை எழுதிய காலிங்கரும்,
பரிதியாரும், மயிலை நாதரும் குறிப்பிடத் தக்கவர்கள்.

சங்கர நமச்சிவாயர் உரைநடை

சங்கர நமச்சிவாயர் திருநெல்வேலியில் பிறந்தவர். சைவ
வளோள மரபினர். பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
நன்னூலுக்கு இவர் எழுதிய உரையே தலை சிறந்தது என்று
அ.தாமோதரன்     அவர்கள்     தம்முடைய     நூலில்
குறிப்பிடுகிறார்.

உரைச்சிறப்பு

சங்கர     நமச்சிவாயர்     நன்னூலுக்கு இயற்றியது
விருத்தியுரையாகும். மேலும் எல்லா நூற்பாக்களுக்கும் இவரே
கருத்துரை எழுதி உரைநடைக்கு வளம் சேர்த்துள்ளார்.

ஐம்பதுக்கு மேற்பட்ட நூல்களிலிருந்து மேற்கோள்களை
எடுத்துத் தன் உரைநடையை வளப்படுத்தியுள்ளார். அகராதி
போல் சொற்களுக்கு விளக்கம் தருவது இவர் உரைச்சிறப்பு.
அதேபோல் நன்னூல் உரையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட
உவமைகளைக் கூறுகிறார். இவரது உரைநடை உவமை
உரைநடை
என்னும் அளவிற்கு அமைந்துள்ளது.

பிறர்

திருக்குறளுக்கு உரை எழுதியவர் காலிங்கர். பாட
பேதங்களைச் சுட்டுதல், பெரும்பான்மை களோய் நெஞ்சே
என அழைத்து உரை அமைத்தல் ஆகியவை இவருடைய
உரைநடைத் தன்மைகளாகும்.

பரிதியார் திருக்குறளுக்கு உரை எழுதியவர். வடசொற்கள்
மிகுதியாகப் பயன்படுத்தப்பட்ட உரைநடை இவருடையது.
சொல்லாட்சி மிகுந்த உரைநடையே இவர் சிறப்பு.

மயிலைநாதர் நன்னூலுக்கு உரை வகுத்தவர். எதுகை,
மோனை நயம்பட இவருடைய உரைநடை விளங்கும்.
ஐம்பெருங்காப்பியம் என்ற சொல்லாட்சியை முதன்முதலில்
வழங்கியவர் இவரே.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:50:38(இந்திய நேரம்)