Primary tabs
1.1 செய்தி
செய்தித்தாளின் மூலப் பொருள் செய்தி. செய்தி
இல்லையென்றால் செய்தித்தாள் இல்லை. செய்தி என்ற
சொல்லுக்குத் தரும் விளக்கம் செய்தியைப் புரிந்து கொள்ள
உதவுகிறது.
• சொல் - விளக்கம்
செய்தி என்ற தமிழ்ச்சொல்லை ஆங்கிலத்தில் நியூஸ்
(NEWS) என்று குறிக்கிறோம். நியூஸ் என்ற ஆங்கிலச்
சொல் நான்கு ஆங்கில எழுத்துகளால் ஆனது. நான்கு
எழுத்துகளும் நான்கு திசைகளைக் குறிக்கின்றன.
குறிக்கிறது (north). E என்ற எழுத்து கிழக்குத்
திசையைக் குறிக்கிறது (East). W என்ற எழுத்து
மேற்குத் திசையைக் குறிக்கிறது (West). S என்ற
எழுத்து தெற்குத் திசையைக் குறிக்கிறது (South). அதாவது
நான்கு திசைகளிலிருந்தும் பெறப்படுவது செய்தி என்ற
பொருளில் திசைகளைக் குறிக்கும் சொற்களின் முதல்
எழுத்துகளைக் கொண்டு நியூஸ் (NEWS) என்ற ஆங்கிலச்
சொல் உருவானதாகக் கூறுவார்கள்.
• பொருள்
நியூ (New) என்றால் புதியது என்று பொருள். இதனைப்
பன்மையில் கூறும் பொழுது ‘நியூஸ்' (News) அதாவது
புதியன என்று பொருள் படுகிறது.
புகழ்பெற்ற சேம்பர்ஸ் ஆங்கில அகராதி நியூஸ்
என்ற ஆங்கிலச் சொல்லுக்கு புதிதாகக் கேட்கப்படுகின்ற
ஒன்று: இப்பொழுதுதான் நடைபெற்ற, ஏதாவது ஒன்றைப்
பற்றிய முதல் தகவல் என்று விளக்கம் தருகின்றது.
செய்தி என்ற சொல்லுக்குப் பலர் இலக்கணம் வகுக்க
முயன்றனர். ஆனால் எந்த இலக்கணமும் முழுமையானதாக
அமையவில்லை. செய்திக்குத் தரும் விளக்கம் நாட்டிற்கு
நாடு வேறுபடுகிறது.
1.1.1 செய்தி பற்றிய விளக்கம்
செய்திக்குத் தரும் விளக்கத்தினைத் தொகுத்துக்
கூறலாம். (1) எதனையாவது வெளிக்காட்டுவது செய்தி.
(2) நடைமுறையிலிருந்து, சாதாரணமானவற்றிலிருந்து, மாறுபட்ட
எதுவும் செய்தியாகும். (3) ஒரு சமுதாயத்தில் பெரும்பாலான
மக்களைப் பாதிக்கின்ற, அவர்களால் புரிந்து கொள்ளக்
கூடிய எந்த ஒரு நிகழ்ச்சியும், கருத்தும் செய்தியாக உருவம்
பெறுகின்றன.
பெருந்தலைவர்களின் பேச்சுக்கள் செய்தியாக
மலர்கின்றன. வாசகர்களுக்குச் சுவையூட்டும் நடப்பு,
நிகழ்ச்சிகளின் உண்மைத் தொகுப்புகளே செய்திகள்.
வாழ்க்கைக்குச் சுவைதரும் எதுவும், அது வெளிப்படுத்தும்
முறைகளில் செய்தியாக மலர்ந்து மணம் பரப்புகின்றது.
மிகப்பெரிய, புகழ்பெற்ற பெயர்கள் செய்திகளாகின்றன.
மக்களைப் பற்றி மக்களுக்காக மக்களால் எழுதப்படுபவை
செய்திகள் ஆகும்.
இன்றைய செய்திகள் நாளைய வரலாறு என்று
கூறப்படுகிறது
• பழமையான விளக்கம்
பல ஆண்டுக் காலமாக, நாய் மனிதனைக் கடித்தால்,
அது செய்தி அல்ல, ஆனால் மனிதன் நாயைக்
கடித்தால் அது செய்தி என்று ஓர் ஆங்கில ஆசிரியர்
கூறியதையும் செய்திக்கு விளக்கமாகப் பலரும் எடுத்துக்
கூறுவதுண்டு.
இந்த எடுத்துக்காட்டு மூலம், நடைமுறைக்கும்,
இயற்கைக்கும் மாறுபட்ட புதுமையான நிகழ்ச்சிகள்
செய்தியாகின்றன என்று அழுத்தமாகக் கூறலாம்.
• பொது விளக்கம்
செய்தி பற்றிய எல்லா விளக்கங்களையும்
உள்ளடக்கித் தரும் முறையில், செய்தியினை, ஒரு
கருத்து, ஒரு நிகழ்ச்சி, சிக்கல் பற்றிய உண்மையான,
சரியான, நடுவுநிலையான குறிப்பு. உண்மையானதாக,
நிகழ்காலத்தோடு தொடர்புடையதாக, மக்களின்
ஆர்வத்தினைத் தூண்டும் வகையில், நடைமுறைக்கு
மாறுபட்டதாக இருக்கும் சிலவற்றைப் பற்றிய விளக்கம்
என்று இதழியல் ஆசிரியர் ஆர். இராமச்சந்திர ஐயர்
கூறுகிறார்.
1.1.2 செய்தியின் சிறப்பு
செய்தித்தாள் வலிமை மிக்கது. நினைத்ததை முடிக்கும்
வல்லமை வாய்ந்தது.
செய்தியைக் கூறும் செய்தித்தாளின் பேராற்றலை
மக்கள் எளிதில் உணரும் வகையில் புரட்சிக்கவிஞர்
பாவேந்தர் பாரதிதாசன் கீழ்க்காணும் கவிதை மூலம்
விளக்குகிறார்.
காரிருள் அகத்தில் நல்ல
கதிரொளி நீதான்! இந்தப்
பாரிடைத் துயில்வோர் கண்ணிற்
பாய்ந்திடும் எழுச்சி நீதான்
ஊரினை நாட்டை இந்த
உலகினை ஒன்று சேர்க்கப்
பேரறி வாளர் நெஞ்சில்
பிறந்தபத் திரிகைப் பெண்ணே
என்று போற்றிப் பாடுகிறார்
மேலும் அவர், இந்த உலகில் உள்ள இளைஞர் முதல்
முதியவர் வரை அனைவரும் காலையில் கையில்
செய்தித்தாேளாடு வலம் வரவேண்டும் என்று மற்றொரு
பாடல் மூலம் கூறுகிறார்.
குறுகிய எண்ணங்களை, செயல்களை நீக்கி இந்த
உலகத்தினைப் புகழ்பெறச் செய்வாய்! நறுமணம் மிக்க
இதழாகிய பெண்ணே! உனது சிறப்பைக் காணாதவர்கள்
இந்த உலகினைக் காண மாட்டார்கள் என்கிறார்.