Primary tabs
1.3 செய்தியின் இயல்புகள்
நிகழ்ச்சி ஒன்றை, அது செய்தியா இல்லையா என்பதை
முதலில் செய்தியாளர் தீர்மானித்து விட்டு, பிறகு
செய்திகளைச் சேகரிக்கிறார். அவர் சேகரிக்கிற எல்லாம்
செய்தியாக வருவதில்லை. ஆசிரியர் குழுவால்
தேர்ந்தெடுக்கப்படும் செய்திகள் செய்தித்தாளில்
வெளிடப்படுகின்றன.
செய்தித்தாளில் வெளிவரும் அனைத்தையும் மக்கள்
செய்திகளாக ஏற்பதில்லை. சிலவற்றைத் தேவையற்றவை,
குப்பை என்று கருதிப் படிக்காமல் ஒதுக்கி
வைத்து விடுகின்றனர். ஆனால் ஒன்றைச் செய்தியாகக்
கருத, பொதுவாக அதில் என்னென்ன இயல்புகள் அல்லது
அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட்டுக்
கூறலாம்.
• கால அண்மை (Timeliness)
காலம் (time) என்பது செய்திக்கு உயிர்மூச்சு.
செய்திகள் சுடச்சுட இருக்க வேண்டும். புத்தம் புதிய
மலர்களைப் பெண்கள் விரும்புவதுபோல் புதிய
செய்திகளையே மக்கள் பெரிதும் படிக்க விரும்புகின்றனர்.
காலம் கடந்து தாமதமாக வரும் செய்தி உயிர் இல்லாத
உடலுக்குச் சமம். ஆறின கஞ்சி பழங்கஞ்சி என்று
கூறும் பழமொழி போன்றதாகும். எனவே காலம் என்பது
செய்திகளுக்கு இருக்க வேண்டிய அடிப்படையான
அம்சமாகும்.
• இட அண்மை (Proximity)
மக்கள் தங்களுக்கு அருகில் நடைபெறும்
நிகழ்ச்சிகளை அறிந்து கொள்வதில்தான் அக்கறை
காட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் ஒருவர்
டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைவிடச் சென்னையில்
நடைபெற்ற ஒன்றைப் பற்றி அறிவதில் ஆர்வம் காட்டுவார்.
பக்கத்து மாநிலத்தில் நடைபெறும் தேர்தலைப் பற்றியும்
அதன் முடிவுகளைப் பற்றியும் சாதாரண மக்கள்
கவலைப் படுவதில்லை. ஆனால் தங்களது மாநிலத்தில்
நடைபெறும் தேர்தலைப் பற்றியும் யார் ஆட்சி
அமைப்பார்கள் என்பது பற்றியும் அறிந்துகொள்ள
ஆர்வம் காட்டுவார்கள். அதுவே எல்லா இடங்களிலும்
பொதுப் பேச்சாக அமையும். அதனால் செய்தியில் இடம்
முக்கிய அங்கம் வகிக்கின்றது.
• உடனடியானவை (Immediacy)
செய்திகளை உடனுக்குடன் கொடுக்க வேண்டும்.
முதலில் வரும் செய்திக்கு மதிப்பு அதிகம். அதனால்தான்
செய்தித்தாள்கள் செய்திகளை முதலில் தருவதில் ஆர்வம்
காட்டுகின்றன. செய்திகளை முந்தித் தரும் இதழ்கள்
மக்களிடம் செல்வாக்கினைப் பெறுகின்றன.
• முன்னிடம் பெறுபவை (Prominence)
நாட்டில் எவையெல்லாம் முதன்மையான
இடத்தினையும், புகழையும் பெறுகின்றனவோ
அவைகளெல்லாம் செய்திகளாகப் பேசப்படுகின்றன.
முதன்மை பெறும் மனிதர்கள், இடங்கள், நிகழ்ச்சிகள்
ஆகியவை செய்தித்தாள்களில் இடம் பெறுகின்றன.
• அளவு (size)
செய்தி அதன் கருப்பொருளால் மட்டும்
செய்தியாவதில்லை. அதனோடு தொடர்புடைய
மக்களின் பரப்பளவை, எண்ணிக்கையை ஒட்டியும்
செய்தியாகின்றது. புகழ்பெற்ற எழுத்தாளரின் இறுதி
ஊர்வலத்தில் பத்துப்பேர் மட்டுமே கலந்துகொண்டால்
அது செய்தி. ஓர் அமைச்சரை வரவேற்க இருவர் மட்டுமே
வந்திருந்தால் அது செய்தியாகின்றது. முதலமைச்சர்
எம்.ஜி. இராமச்சந்திரன் இறுதி ஊர்வலத்தில் இதுவரை
சென்னையில் யாருடைய இறுதி ஊர்வலத்தி்லும் கூடாத
அளவிற்கு மக்கள் அதிகமாகக் கலந்து கொண்டது
குறிப்பிடத் தக்க செய்தியாகின்றது. செய்தியின் இயல்பை
அறிய அதனுடன் தொடர்புடைய மக்களின் அளவு
அளவுகோலாக இருக்கிறது.
• நிகழ்விடத்திலேயே கிடைப்பவை (spot news)
நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலிருந்து நேரடியாகப்
பங்கு பெற்றவர்கள் அல்லது பாதிக்கப் பட்டவர்கள் தரும்
செய்தி சிறப்பிடம் பெறுகிறது. விபத்து நடந்த இரயிலில்
பயணம் செய்து உயிர் தப்பிய ஒருவர் விபத்தினைக்
கண்ணால் கண்டபடி விவரிப்பது சிறப்புச் செய்தியாகும்.
அண்மையில் தமிழ்நாட்டில் திருச்சி திருவரங்கத்தில்
திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் பிழைத்த
ஒருவர் விபத்தினை விவரித்தது சிறந்த செய்தியாக இருந்தது
குறிப்பிடத் தக்கதாகும்.
• பின்விளைவுகளை உடையவை (Consequences)
பின்விளைவுகளை உண்டாக்கும் எந்த நிகழ்ச்சியும்
நடவடிக்கையும் மக்களின் ஆர்வத்தைத் தூண்டும்
செய்தியாக மாறுகின்றது. வங்கிகளை நாட்டுடைமை
ஆக்கினால் பல பொருளாதார விளைவுகளை
எதிர்பார்க்கலாம். அரசே மதுபானக் கடைகளைத் திறந்து
நடத்துவதால் அதன் விளைவாக அதிக வருமானத்தை
அரசு பெறலாம். ஒரு கட்சியில் புகழ்பெற்ற ஒருவரைத்
திடீரென்று கட்சியிலிருந்து நீக்கினால் அரசியல் விளைவுகள்
ஏற்படலாம். கறிக் கோழிகள் நோய் பற்றிய செய்தியின்
விளைவால் மனிதர்களின் வயிற்றில் புதைய வேண்டிய
கோழிகள் பூமியில் புதைந்தன. எனவே பின்விளைவுகளை
உடையவை செய்தியாக மலர்கின்றன.
• வியப்புக்குரியவை (oddity)
செய்தியில் புதுமையானதாக, வியப்புக்குரியதாக
ஏதாவது இருந்தால் அதனை அறிந்து கொள்வதில் மக்கள்
ஆர்வம் காட்டுவார்கள். நூறாவது நாள் என்ற தமிழ்த்
திரைப்படத்தைப் பார்த்த ஒருவன் தனது குடும்பத்தினர்
அனைவரையும் கொலை செய்த நிகழ்ச்சி, தமிழ்நாட்டில்
பெரிதும் பரபரப்பை ஏற்படுத்திய செய்தியாகும்.
கண்ணாடித் துண்டுகளைச் சாப்பிட்டு உயிர் வாழும்
மனிதன், இரும்புத் துண்டுகளையும், ஆணிகளையும்
சாப்பிட்டு உயிர்வாழும் மனிதன் பற்றிய செய்திகள்
வியப்பைத் தருகின்றன.
• மோதல் தொடர்பானவை (Conflict)
முரண்பாடுகளும், மோதல்களும் செய்திகளாக
வருகின்றன. மனமொத்து அன்புடன் வாழும் கணவன்
மனைவி பற்றிச் செய்தி வருவதில்லை. ஆனால் மோதல்
ஏற்பட்டு விவாகரத்து, தற்கொலை, கொலை என்ற
நிலைக்குப் போய்விட்டால் அது செய்தியாக மாறிவிடுகிறது.
திரைப்பட நடிகர்களின் ரசிகர் சங்கத்தினர் மோதிக்
கொள்வது தமிழ்நாட்டில் அடிக்கடி நடைபெறுகிறது.
இவைகளும் செய்தியாக இதழ்களில் இடம் பெறுகின்றன.
டாக்டர் தம்பதியரிடையே அடிக்கடி ஏற்பட்ட
சண்டை காரணமாக, சென்னையில் பெண் டாக்டர் ஒருவர்
தனது மருத்துவ மனையில் விஷ ஊசி போட்டுத் தற்கொலை
செய்து கொண்டதாக, நாளேடுகளில் செய்தி வந்திருப்பதை
எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
• ஐயப்பாட்டிற்குரியவை
தாய் தனது பெண் குழந்தையைக் கொன்று வீட்டின்
பின்புறத்தில் புதைத்து விடுகிறாள். இச்செயல் அருகில்
இருப்பவர்களுக்கு ஐயத்தை ஏற்படுத்துகிறது. உண்மை
வெளியாகிக் காவல் துறைவரை சென்று, பத்திரிகையில்
செய்தியாக இடம் பெறுகின்றது. இவ்வாறு ஐயப்படும் படியான
செயல்களைச் செய்து, அதை மறைக்க முயன்று தோல்வி
அடைந்து, காவல்துறையிடம் சிக்கி்த் தண்டனை அடைந்த
நிகழ்வுகள் செய்தியாகின்றன.
• உணர்வு பூர்வமானவை (Emotional Appeal)
மக்களின் உணர்வுகளைத் தூண்டும் நிகழ்ச்சிகளை
செய்தித்தாள்கள் உடனடியாக வெளியிடுகின்றன.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் திருமதி. இந்திரா காந்தி
அம்மையார் சுடப்பட்ட நிகழ்ச்சியை இதற்கு உதாரணமாகக்
கூறலாம். மக்களின் உணர்வுகளைத் தூண்டும் செய்திகள் பல
வருவதை இப்பொழுது பார்க்கிறோம்.
இவ்வகைச்செய்திக்கு எடுத்துக்காட்டாக, சென்ற
2003-ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டு துயர நிகழ்ச்சிகளைக்
காட்டலாம்.
1) அமெரிக்காவின் கொலம்பியா விண்கலம் ஏழு
விண்வெளி அறிஞர்களை ஏற்றிக்கொண்டு 01-02-2003-
ஆம் நாள் விண்ணை நோக்கிச் சென்றது. ஆனால்
ஏதோ கோளாறு காரணமாக டெக்சாஸ் (Texas)
மாநிலத்தில் ஓர் இடத்தில் சிதறி விழுந்து விபத்துக்கு
உள்ளானது. அதில் சென்ற ஏழு பேரும் பலியானார்கள்.
அவர்களில் ஒருவர் இந்திய நாட்டைச் சேர்ந்த அமெரிக்கப்
பெண்மணி கல்பனா சாவ்லா (Kalpana Chawla)
என்பவராவார். இச்செய்தி கேட்டு இந்திய மக்கள் துடித்துப்
போனார்கள் என்று கூறினால் அது மிகையாகாது.
2) அடுத்தது, தலை ஒட்டிப் பிறந்து, பிரியாமல் ஒட்டியே
29 ஆண்டுகள் வாழ்ந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த
மகளிர் இரட்டையர் பற்றிய சோக நிகழ்ச்சி. லாடன் (Ladan)
பிஜானி (BIJANI) என்ற மகளிர் பிறக்கும் போதே தலை
ஒட்டிப் பிறந்தார்கள். சேர்ந்தே 29 வயது வரை
மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். மருத்துவச் சிகிச்சை மூலம்
பிரிந்து வாழலாம் என்று விரும்பி, சிகிச்சைக்குச் சிங்கப்பூர்
சென்றார்கள். அங்கு 11-06-2003 - ஆம் நாள்
செய்தியாளர்களுக்குச் சிரித்த முகத்தோடு பேட்டி
அளித்தார்கள். ஆனால் 08-07-2003-ஆம் நாள்
நடைபெற்ற அறுவை சிகிச்சை பலன் அளிக்காததால்
அன்று இருவரும் மாண்டு போனார்கள். இச்செய்தியும்
மக்கள் நெஞ்சைத் தொட்ட செய்தியாகும்.