Primary tabs
முத்தமிழ்
உலகின் பழமையான
மொழிகளுள் ஒன்று தமிழ்மொழி.
இது இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று
கூறுகளை
உள்ளடக்கியது. இம்மூன்று கூறுகளும் இணைந்திருப்பது
தமிழ்மொழியின் தனித்தன்மை, ஆதலால்,
இம்மொழி
‘முத்தமிழ்’ என்று அழைக்கப்படுகிறது. இம்மூன்று தமிழில்
‘இசை’ நடுவணதாக விளங்குவது சிறப்பு.
பழந்தமிழரின் இசைப்புலமை
பழந்தமிழ் மக்கள் நுட்பமான
இசைப்புலமையும் இசை
இலக்கண அறிவும் பெற்றிருந்தனர்.
தொல்காப்பியம்,
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம் ஆகிய நூல்கள்
இது பற்றிக் கூறுகின்றன. இந்நூல்கள்
கி.பி. 3 ஆம்
நூற்றாண்டுக்கு முன் எழுந்த நூல்களாகும்.
பழந்தமிழ் மக்கள் இயற்கையில் எழும்
ஒலிக் கூறுகளை
நுண்மையாக ஆராய்ந்தனர். அதனை ஒட்டி இனிமையான ஓர்
இசை முறையை உருவாக்கினர். படிப்படியாகப் பண்படுத்திய
அந்த இசை முறையைப் "பண்" என்று அழைத்தனர். வாழும்
நிலத்திற்கேற்பப் பண்களை வகைப்படுத்தினர். நேரத்திற்குப்
(காலத்திற்குப்) பொருந்த பண்கள் பாடினர். சுவைக்குத்
தகுந்த பண்கள் பாடினர். பண்கள் 103 என்றும் வகுத்தனர்.
பல்வேறு கலைஞர்கள்
செயல்முறைத் தகைமைக்கு
ஏற்பக் கலைஞர்கள்
வெவ்வேறு வகுப்பினராகத் தொழில்பட்டனர். பாட்டுப்
பாடினோர் பாணர். கூத்து ஆடினோர் கூத்தர். கருவி
இசைத்தோர் யாழ்ப்பாணர், பறையர், துடியர், கிணைஞர்
என்றவாறு அவரவர் கருவிப் பெயர் கொண்ட வகுப்பினர்
ஆயினர்.
இசைக்கருவிகள்
நரம்புக்
கருவி, காற்றுக்
கருவி, தோற்கருவி
ஆகியவற்றை முறையே
யாழ், குழல், முழவு எனப்
பொதுப்படக் கூறினர்.
இவை ஒவ்வொன்றிற்கும்
உரிய
பல்வேறு வகைக் கருவிகளை உருவாக்கினர். இசையின்
பரிணாம வளர்ச்சிக்கு இவை உதவின.
இசையும் பரதமும்
இசையும் கூத்தும் பழந்தமிழ்
நாட்டில் உயர்நிலை
எய்தின. இக்கலைகளின் செவ்வியல்
தன்மையைச்
(classical status) சிலப்பதிகாரம் காட்டுகிறது.
பழந்தமிழர் பயன்படுத்திய பண் என்னும்
இசை முறை
வளர்ச்சி பெற்று, பிற்காலத்தில் ‘கருநாடக இசை’
என
அழைக்கப்படலாயிற்று. பண்ணிசையோடு இணைந்து வளம்
பெற்ற பழந்தமிழர் ஆடல்முறை
இக்காலத்தில்
"பரதநாட்டியம்" என்றாயிற்று.
மேற்குறிப்பிட்ட செய்திகளை அடிப்படையாகக் கொண்டு,
இப்பாடம் அமைக்கப்பட்டுள்ளது.