தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

2.4 பள்ளு

  • 2.4 பள்ளு

    சிற்றிலக்கிய நாடக வகைகளுள் குறிப்பிடத்தக்க நிலையில்
    சிறப்பிடம் பெற்றது பள்ளு நாடகம் எனலாம். பள்ளத்தில்
    (வயலில்) வேலை செய்யும் மக்களை அடிப்படையாகக் கொண்ட
    நாடகம் இது. இலக்கிய வளம் நிறைந்து காணப்படுவதும்
    இதுவெனலாம்.

    முக்கூடற்பள்ளு,     குருகூர்ப்பள்ளு,     வடகரைப்பள்ளு,
    தில்லைப்பள்ளு போன்றன     குறிப்பிடத்தக்க பள்ளு
    நாடகங்களாகும்.

    2.4.1 தோற்றம்

    பதினாறாம் நூற்றாண்டில் தமிழகத்தில் தோற்றம் கண்ட
    சிற்றிலக்கிய நாடக     வடிவம்     பள்ளு நாடகமாகும்.
    சிலப்பதிகாரத்தில் இடம் பெறும் உழவர் வாழ்க்கைச்
    சித்திரிப்புப்பாடல்கள் போல, பல இலக்கியங்களிலும் உழவர்
    பாடல்கள் காணக் கிடைக்கின்றன.

    உழவுத் தொழிலுக்கும் அன்றாட வாழ்க்கை முறைமைக்கும்
    நெருக்கமான     தொடர்பு     இருப்பதால்     உருவாகும்
    இலக்கியங்களிலும் அது பிரதிபலிப்பது இயல்பானதுதானே.
    அவ்வகையிலேயே உழவர்களையும், உழவுத் தொழிலையும்
    முக்கியப்படுத்திய நாடக இலக்கியமாகப் ‘பள்ளு’ தோன்றியதில்
    வியப்பில்லையல்லவா?

    ஆனால் ‘பள்ளு’ குறிப்பிடத்தக்க சிறப்பினைப் பெறுகிறது.
    அக்காலக்கட்ட வாழ்க்கை முறைமையைப் படம் பிடித்துக்காட்ட
    முயற்சி செய்கிறது. இவ்வகையில் தோற்றம் பெற்ற முதற் பள்ளு
    கி.பி பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய
    திருவாரூர்ப்பள்ளு ஆகும். ஞானப்பள்ளு, ஆதிப்பள்ளு,
    தியாகேசர் பள்ளு என்பன இந்நாடகத்தின் வேறு பெயர்களாகும்.

    தமிழில் ஏராளமான பள்ளு நாடகங்கள் இருந்துள்ளன.
    ‘நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு வகையை எண்ண
    முடியாது’ என்பது பழமொழி.

    2.4.2 வடிவம்

    படித்தோராலும், மற்றோராலும் சுவைக்கத்தக்க நாடக
    இலக்கியம் பள்ளு. அதற்கேற்ப வடிவமைப்பைக் கொண்டு
    விளங்குதே இதற்குக் காரணமெனலாம்.

    சிந்து, கலிப்பா, கலித்துறை ஆகிய பாடல் வடிவங்களில்
    விருத்தப்பாவும் கலந்துவர     அமைக்கப் பெற்றிருக்கும்.
    இப்பாடலின் இசை அனைவரையும் கவரும் தன்மை
    கொண்டதாகும்.

    பள்ளு, நாடகமாக நடிக்கத்தக்க கூறுகளை அதிகம்
    கொண்டுள்ளது. ‘கட்டியங்காரன்’     எனப்படும் பாத்திரம்
    இந்நாடகத்தில் இடம் பெறுவது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

    ‘கட்டியங்காரன்’ என்பவன் நாடகக் கதையையும், நாடகக்
    கலைஞர்களையும், நாடக நிகழ்வுகளையும் அறிமுகம் செய்து
    ஒருங்கிணைப்பையும் மேற்கொள்ளும் ஒரு நாடகப்பாத்திரம்
    ஆகும்.

    உழைக்கும் மக்களின் (பள்ளர்) வாழ்க்கை முறையினை
    அவர்கள் பேசும் மொழியிலும்,     பாடும் நிலையிலும்
    வெளிப்படுத்தும்     நோக்கில்     பள்ளு     நாடகங்கள்
    ஆக்கப்பட்டுள்ளன.

    இந்நாடகத்தின் இரு முக்கிய கதைமாந்தர்கள் மூத்த
    பள்ளியும், இளைய பள்ளியும் இவர்கள் இடையே நடைபெறும்
    போராட்டத்தை     விளக்கும்     ‘ஏசல்’     பாடல்கள்
    உணர்ச்சிமயமானவை. இன்றைய தர்க்கப் பாடல்களுக்கான
    முன்னோடி ‘ஏசல்’ பாடல்களேயாகும். மூத்த பள்ளியும் இளைய
    பள்ளியும் ஒரே பள்ளனின் இரு மனைவியர். இருவரும்

    வெவ்வேறு சமயச் சார்புடையவர்கள்.
    தமது சமயம் பற்றியும் கணவன் பற்றியும்
    இருவரும் நடத்தும் வாக்குவாதமே ‘ஏசல்’
    எனப்படுகிறது. இறுதியில், ஒற்றுமையாய்
    வாழ்வதாக இருவரும் உடன்படுகின்றனர்.

    பள்ளு நாடகமாடுவோர் பாடி ஆடும் வண்ணம்
    கதைப்போக்கு அமைக்கப் பெற்றுள்ளதால், பள்ளு காண்போரைக்
    கவரும் வடிவம் பெற்றமைகிறது. பள்ளியர் போராட்டமும்
    வாழ்க்கைச் சித்திரிப்பும் பள்ளு நாடகத்தின் இன்றியமையாத
    கூறுகளாக விளங்குகின்றன.

    2.4.3 கதை

    பள்ளு நாடகக் கதையை இப்போது அறிய வேண்டுமல்லவா?
    அது ஒரு சமுதாயத்தின் கதையாகவும் அமைவதால் சுவையாக
    இருக்குமென்பதில் எவ்வித ஐயமுமி்ல்லை.

    பள்ளு நாடகங்களின் கதையமைப்பு பொதுவாக ஒரே
    அமைப்பினதாகவே காணப்படும். இவற்றில் முக்கூடற்பள்ளு
    சிறந்த கதையமைப்புடன் விளங்குகிறது எனலாம்.

    பண்ணையாரிடம் வேலை பார்க்கும் பள்ளனுக்கு இரு
    மனைவியர். மூத்தபள்ளி முறையான மனைவி, இளைய பள்ளி
    பள்ளனின் காதலுக்கு ஆட்பட்டவள். எனவே பள்ளன் இளைய
    பள்ளியிடமே தங்கிக் கொள்கிறான். இது கண்டு கோபமுற்ற
    மூத்தபள்ளி தன் கணவன் வயல்வேலைகளைப் புறக்கணித்து
    விட்டு இளைய பள்ளியிடம் காலங்கழிப்பதாகப் பண்ணையாரிடம்
    முறையிடுகிறாள். பண்ணையார்     பள்ளனை முறைப்படி
    கண்டிக்கிறார். பண்ணையார்     சொற்படி     நடப்பதாக
    உறுதியளித்துவிட்டு மீண்டும் இளைய பள்ளியிடமே பள்ளன்
    பொழுதைக் கழிக்கிறான்.

    மீண்டும் பண்ணையாரிடம் மூத்த
    பள்ளியின் முறையீடு நடக்கிறது.
    பண்ணையார் பள்ளனைத் தொழுவில்
    மாட்டிக் கசையடி கொடுக்கிறார். இது
    கண்டு மனமிரங்கிய மூத்தபள்ளி
    கணவனை     விடுவிக்கும்படி

    வேண்டுகிறாள். அவ்வாறே பண்ணையார் பள்ளனை விடுதலை
    செய்கிறார்.

    உழவு வேலை நடைபெறும்போது பள்ளனை மாடு
    முட்டுகிறது. மூத்தபள்ளி மருந்திட்டு அவனைக் காப்பாற்றுகிறாள்.
    அறுவடை முடிந்த பின் தனக்குரிய பங்கு கிடைக்காமையைச்
    சொல்லி, பள்ளன் மேல் குறைகூறி மூத்தவள் முறையிடுகிறாள்.
    இது கண்டு இளைய பள்ளி சண்டை செய்கிறாள். ஏசல்
    தொடர்கிறது. இருவரும் வழிபடும் சைவ, வைணவக்
    கடவுளர்களும் இந்தச் சண்டைக்குள் இழுக்கப்படுவதைக் காண
    முடிகிறது. (இக்காலக்கட்டத்தில் தமிழகத்தில் நிலவி வந்த சைவ
    வைணவப் பூசல்களே பள்ளு நாடகத்துக்குள்ளும் இடம் பிடித்துக்
    கொண்டது என்பது குறி்ப்பிடத்தக்கதாகும்.)

    பண்ணையார்     தலையீட்டினால்     இருவரும்
    அமைதியுறுகின்றனர். தலைவன் வாழ்த்தோடு கதை முடிகிறது.
    2.4.4 கருத்து வெளிப்பாடு

    பள்ளு நாடகம் ஒரு சமுதாய நோக்கத்தினை முன்வைக்கும்
    நாடக     வடிவமாகும்.     காதல்,     உழவுத்தொழில்,
    சமயக்காழ்ப்புணர்வுகள் யாவும் இதற்குள் இடம் பெறுகின்றன.

    இரு மனைவியரிடம் அகப்பட்டுக் கொண்ட பள்ளன் படும்
    துயரம் நாடகத்தில் முதன்மைப் படுத்தப்படுகிறது. முறையாகக்
    கைப்பிடித்த முதல் மனைவிக்கும், காதலித்து மனைவியாக்கிய
    இரண்டாமவளுக்கும் இடையே நடக்கும் உரிமைப் போராட்டம்,
    பல சமுதாய நிகழ்வுகளைக் குறிப்பால் உணர்த்துகின்றது.
    ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற     கருத்தின் மேன்மையை
    வலியுறுத்துவதோடு ஒரே சமயத்தைப் பின்பற்ற வேண்டும்
    என்னும் நிலையையும் குறிப்பிடுகிறது.

    கெட்டி கெட்டி பெண்டு ரெண்டு
    வைத்த குடும்பன் - செய்த
    கெருவமும் வஞ்சகம்
    கேளும் பள்ளீரே

    (முக். பள்ளு, 150)

    என மூத்த பள்ளி பள்ளனைப் பற்றிப் பண்ணையாரிடம்
    முறையிடும்     பகுதியில்     அவளின்     மனக்குமுறல்
    வெளிப்படுகிறதல்லவா ! இதனை, பெண்ணின் பொதுவான
    உள்ளக்குமுறல் என்றே கருதலாம்.

    2.4.5 நாடக வழங்கு முறை

    பள்ளு நாடகம் படைப்புத்தன்மையில் மேம்பட்ட நிலை
    காணப்படுகிறது.

    மரபினை ஒட்டிய     நாடகத்தொடக்கம் முறையாக
    அமைந்துள்ளது. பள்ளு மேடையேற்றத்தில் கட்டியங்காரனின்
    பங்களிப்பு இருந்து வந்துள்ளது.

    காப்புச் செய்யுள் பாடல் இசைக்கப் பெற்று பின் கடவுள்
    வாழ்த்துப் பாடலுடன் நாடகம் தொடங்குகிறது. தொடர்ந்து
    பாத்திரங்களின் வருகை அமைகிறது. முதலில் பள்ளன்
    கடவுளைப் போற்றியும்,     தன்னுடைய குணநலன்களைக்
    குறிப்பிட்டும் பாடிக் கொண்டே அறிமுகம் ஆவான்.

    மூத்தபள்ளியும் இளையபள்ளியும் மேடையில் அறிமுகம்
    ஆகும் நிகழ்வு அடுத்து அமையும். அவர்கள் தங்களுடைய
    பிறப்பு, வளர்ப்பு     குறித்த     செய்திகளோடு தங்களை
    அறிமுகப்படுத்திக் கொள்வார்கள்.

    நாட்டுவளம் விரிவாகப் பேசப்படும். குயில்களின் பாடல்கள்,
    மழைவேண்டல், மழைக்கான அறிகுறிகள், மழை பெய்தல்,
    ஆற்றில் நீர் வருதல், ஐவகை நிலங்கள் குறித்த செய்திகள் மிகச்
    சிறப்பாக வெளிப்படுத்தப்படும். விவசாயத்துக்கான பின்னணிச்
    சூழல் உருவாகியுள்ள இந்த நிலையில் பண்ணையார்
    அறிமுகமாகிறார்.

    பண்ணையாரிடம் தங்களது குறைகளை இரண்டு பள்ளியரும்
    முறையிடும் நிகழ்வுகள் இடம் பெறும். இளைய பள்ளியின்பால்
    மோகம் கொண்டு தனது கடமையை மறக்கும் பள்ளனைப்
    பண்ணையார் தண்டிக்கும் நிகழ்வு அடுத்ததாக அமையும்.

    பண்ணையாரின் கோபத்தைக் குறைக்கும் முயற்சியாகப்
    பள்ளன் வித்துவகை, மாட்டுவகை, ஏர்வகை எனக் குழைந்து
    பேசுகிறான்.

    அந்தக் காட்சியில் பள்ளன் மேல் மூத்தபள்ளி தொடுக்கும்
    குற்றச்சாட்டும், தொடர்ந்து பண்ணையார் பள்ளனுக்குக் கசையடி
    கொடுக்கும் காட்சியும் இடம்பெறும். மூத்தபள்ளி பள்ளன் மேல்
    இரக்கம் கொண்டு பள்ளனை விடுவிக்க வேண்டுதல் திருப்பு
    முனையாக நிகழ்கிறது.

    மீண்டும் அறுவடைக்கான கூலியைப் பங்கிடுவதில் இரண்டு
    பள்ளிகளுக்கிடையே சண்டை. பின்பு நல்ல அறுவடையைக்
    கொடுத்த ஆண்டவனுக்கு இருவருமே நன்றி கூறிச் சமாதானம்
    ஆதல் எனக் காட்சி முடிகிறது.

    பள்ளு நாடகத்தில் முக்கிய மாந்தர்களாக மூத்த பள்ளி,
    இளைய பள்ளி, பள்ளன், பண்ணையார் (ஆண்டை) ஆகிய
    நால்வரைக் குறிப்பிடலாம்.

    கதை நிகழுமிடமாக மூத்தபள்ளியின் ஊரும், பண்ணையார்
    வாழும் மருத நிலமும் அமைகின்றன.

    2.4.6 நாடகப் பங்களிப்பு

    பிற சிற்றிலக்கிய நாடக வடிவம் போலவே பள்ளு நாடகமும்
    ஒரு சமுதாயக் குறிக்கோளுடன் உருவாக்கம் பெற்ற நாடகம்
    எனலாம்.

    இலக்கியச் செறிவுமிக்க சிற்றிலக்கிய நாடகமாகப் பள்ளு
    நாடகம் பங்களிப்புச் செய்கிறது.

    இந்நாடகம் மேடைகளில் படைக்கப்பட்ட தன்மை இதன்
    நாடகக் கூறுகளின் மேம்பாட்டை வெளிப்படுத்துகின்றது.
    திருவாரூர்க் கோயிலில் திருவிழாவின்போது திருவாரூர்ப்பள்ளு,
    மேடை நாடகமாக நடிக்கப்பெற்றது என்றும், நாடகம் முடிந்த
    பின்னர் நாடகக் கலைஞர்கள் நூலாசிரியரின் பரம்பரையினர்
    வாழும் இல்லத்திற்கு வந்து ஆசி பெற்றதாகவும் கிடைக்கும்
    செய்தி, இதனை நிறுவுகிறது.

    குடியானவர் மொழியிலேயே பள்ளு நாடகத்தை மக்களுக்குக்
    கொடுத்துள்ள நிலையும், அந்நாடகத்தில் சமூக நிலையையும்,
    பண்பாட்டுக் கூறுகளையும் நகைச்சுவை உணர்வு வெளிப்படப்
    படம்பிடித்துக் காட்டியுள்ள நிலையும், தமிழ் நாடக வரலாற்றில்
    நாடக உரைநடை வளர்ச்சியின் மேம்பட்ட நிலையாகக்
    கொள்ளலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 16:05:55(இந்திய நேரம்)