தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4-4.3 நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் - நிகழ்த்தப்படும் சூழல்

4.3 நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் - நிகழ்த்தப்படும் சூழல்


    நாட்டுப்புற நிகழ்த்து கலைகளுக்குச் சடங்குகளும், வழிபாடுகளும்,
வாழ்க்கை நிகழ்வுகளுமாகிய பண்பாட்டுச் சூழல்களே களம் அமைத்துக்
கொடுக்கின்றன. வழிபாடின்றிக் கலைகள் இல்லை; கலைகள் இன்றி
வழிபாடு இல்லை என்னுமளவிற்கு இரண்டும் இரண்டறக் கலந்துள்ளன.
எனவே கலைகளை, நிகழ்த்தப்படும் பண்பாட்டுச்     சூழலோடு
இணைத்துப் புரிந்து கொள்வது அவசியமானதாகும். கலைகள்
நிகழ்த்தப்படும் சூழலை அடிப்படையாகக் கொண்டு,

1) வழிபாட்டுக் கலைகள்
2) சடங்குக் கலைகள்
3) வாழ்க்கை வட்டச் சடங்குக் கலைகள்

என்றவாறு பிரித்து விளக்கலாம். மேற்கூறிய சூழல்களில் நிகழ்த்து
கலைகள் தவறாது இடம் பெறுவது கவனத்தில் கொள்ளத் தக்கதாகும்.

4.3.1 வழிபாட்டுக் கலைகள்


    கலைகள் தெய்வங்களால் தோற்றுவிக்கப் பட்டனவாகவும்
தெய்வங்களே அவற்றை நிகழ்த்திக் காட்டியதாகவும்     மக்கள்
நம்புகின்றனர். இதற்கான புராணக் கதைகள் (Myth) பலவும் வழக்கில்
உள்ளன.

தெய்வங்களால் நிகழ்த்தப்பட்ட கலைகள்

தெய்வங்கள்

கலைகள்

சிவபெருமான்

- கூத்து

திருமால்

- குடக்கூத்து,மரக்காலாடல்,

(மகாவிஷ்ணு)

சேவையாட்டம்

தேவர்கள்

- தேவராட்டம்

திரௌபதை

- கரகாட்டம்

காளியம்மன்

- காளியாட்டம்
 


    தெய்வங்களால் நிகழ்த்தப்பட்ட கலைகள் தெய்வங்களுக்காகத்
தெய்வ வழிபாட்டில் ஆடப்படுவதாகக் கூறப்படுகிறது.


    கிரேக்க நாட்டில் பாக்கஸ், டியோனைகஸ், அப்பல்லோ, டிமிட்டர்
ஆகிய தெய்வங்களின் வழிபாட்டிலிருந்து கலைகள் தோன்றியதாகக்
கூறப்படுகின்றது.


     இதைப்போன்றே குறிப்பிட்ட சில கலைகள் குறிப்பிட்ட சில தெய்வ
வழிபாடுகளில் மட்டுமே நிகழ்த்தப்பட்டு வருகின்றன என்பதும் இங்கு
அறியத் தக்கதாகும்.

குறிப்பிட்ட தெய்வ வழிபாட்டில் நிகழ்த்தப்படும் கலைகள்

தெய்வங்கள்

கலைகள்

சிவபெருமான்

- வில்லுப் பாட்டு

பெருமாள் சாமி

- சேவையாட்டம்

அழகர் சாமி

- பிருந்தாவனக் கும்மி,
ஒயிலாட்டம்

முருகப் பெருமான்

- காவடியாட்டம்

மன்மதன்

- இலாவணி

சுடலை மாடன்

- கணியான் கூத்து

திரௌபதை

- தெருக்கூத்து

மாரியம்மன்

- கரகாட்டம்

காளியம்மன்

- காளியாட்டம்

ஜக்கம்மாள்

- தேவராட்டம்

கெங்கையம்மன்

- கொக்கலிக் கட்டையாட்டம்

அண்ணன்மார் சாமி

- உடுக்கைப் பாட்டு
 


    இத்தெய்வ வழிபாடுகளில் குறிப்பிட்ட நிகழ்த்து கலைகள்
ஆடப்     பெறாமல்     வழிபாடு     முழுமை பெறுவதில்லை.
வழிபாட்டையொட்டி நடைபெறும் திருவிழாக்களில் பலவிதமான
வேடங்கள் பூண்டு நகைச்சுவையாக ஆடியும் பாடியும் கலைகள்
நிகழ்த்தப் படுவதுண்டு.

4.3.2 சடங்குக் கலைகள்


    சடங்கும் அதன் பின்னர் வழிபாடும் தோன்றிய நிலையில் அவற்றின்
கூட்டு விளைவாகக் கலைகள் தோன்றியதாகக் கூறுவர். கலைகள்
சடங்கிலிருந்து தோன்றியவைதாம் என்பதை அறிஞர் பலரும்
ஏற்றுக் கொண்டுள்ளனர். வேட்டையைத் தொழிலாகக் கொண்ட மனிதன்
வேட்டையில் விலங்குகள் அகப்பட வேண்டும் என்பதற்காக வேட்டைச்
செயல்களைச் சடங்காக நிகழ்த்திக் காட்டினான். வேட்டைச் சடங்கு
தோன்றியது. சடங்கின்போது ஆடி மகிழ்ந்தான். வேட்டை நடனம்
உருவானது. இன்றும் கூடப் பழங்குடி மக்களால் வேட்டை நடனம்
ஆடப்படுவது இங்குக் குறிப்பிடத் தக்கதாகும்.


    தமிழக நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் பலவும் சடங்கிலிருந்து
தோன்றியவையே ஆகும்.


    தமிழகக் கலை மரபை உலகறியச் செய்த நிகழ்த்து கலை கரகாட்டம்
ஆகும். இது தமிழர்களின் அடையாளமாய் விளங்கும் பாரம்பரியக்
கலை. இக்கலையை நீங்களும் பார்த்து மகிழ்ந்திருப்பீர்கள்.
உங்களுக்குத் தெரியுமா? இது சடங்கிலிருந்து தோன்றிய கலை
வடிவமாகும். அது எவ்வாறு என்று பார்ப்போம்.

சக்திக் கரகம்


    மாரியம்மன், காளியம்மன், முத்தாலம்மன் ஆகிய அம்மன் கோயில்
வழிபாடுகளில் சக்திக் கரகமெடுத்தல் என்னும் சடங்கு தவறாமல்
நடைபெறும். (கரகம் என்பது வெண்கலத்தாலான சிறுகலசம் ஆகும்.
புனித நீர் வைக்கப் படும் குடம் அல்லது கலசத்தைக் கரகம் என்று
கூறுவதுண்டு) இது சக்திக் கரகம் என்றும் கூறப்படும். அம்மன்
வழிபாட்டின் முதல் நாளன்று இரவு கரகமெடுத்தல் சடங்கு நடைபெறும்.
ஊருக்கு அருகிலுள்ள நீர்நிலைக்குச் சென்று கரகத்தில் நீர்நிரப்பி
வாய்ப் பகுதியில் தேங்காய் வைத்துக் கட்டி அதன் மேல் கூம்பு
வடிவத்தில் பூக்களைச் சுற்றி அலங்காரம் செய்யப்படும்.அலங்காரம்
செய்த சக்திக் கரகத்தை அம்மன் கோயில் பூசாரி தலையில் வைத்து,
தெய்வ அருள் வந்து ஆவேசமாக ஆடுவார். அந்த நிலையில் தங்களை
மறந்து செயல்படுவர். பின்னர் சக்திக் கரகம் கோயிலில் வைக்கப்
பட்டுப் பூசை செய்யப்படும். வழிபாடு முடியும்வரை சக்திக் கரகமே
ஊர்மக்களால் அம்மனாக வணங்கப்படும். வழிபாடு முடியும் நாள் இரவு
சக்திக் கரகம் கோயிலிலிருந்து, பூசாரியால் அருள் வந்த நிலையில்
எடுத்துவரப் பட்டு, கரகத்திலுள்ள நீர் மீண்டும் நீர்நிலையில் கலந்து
விடப்படும். இத்துடன் அம்மன் வழிபாடு முடிந்துவிடும். இப்பொழுது
நாம் பார்த்தது சக்திக் கரகமெடுத்தல் என்னும் சடங்கு. இச்சடங்கே
பின்னாளில் கரகாட்டம் என்ற நிகழ்த்து கலையாக மாறியது.

கரகாட்டம்


    கரகாட்டத்தில் முதன்மையான ஆட்டக் கருவியாக விளங்குவது
கரகம். இது ஆட்டக் கரகம் என்று வழங்கப்படும். ஆட்டக் கரகத்தின்
அமைப்பு மற்றும் அலங்காரத்தை வைத்துத் தோண்டிக் கரகம்,
செம்புக் கரகம், அடுக்குக் கரகம்
என்று குறிப்பிடுவதுண்டு.
கரகாட்டத்தில் செம்புக் கரகம் வைத்து ஆடும் முறையே பரவலாகக்
காணப்படுகிறது. ஆட்டக் கரகத்தில் தேவையான அளவு அரிசி
நிரப்பப் படுகிறது. அதன் வாய்ப் பகுதியில் கூம்பு வடிவிலான கட்டை
வைக்கப்பட்டுக் கரகத்தோடு இணைத்துக் கட்டப் படுகின்றது. இது
கரகக் கட்டை எனப்படும். அதன் மேல் செயற்கைப் பூ அலங்காரம்
செய்யப்பட்ட அலங்காரக் கூடை (டோப்) கவிழ்த்தப் படுகிறது. உச்சியில்
தக்கையால் செய்யப்பட்ட அழகான கிளி செருகப் படுகின்றது.
இப்பொழுது ஆட்டத்திற்கான கரகம் தயார். சக்திக் கரகத்திலிருந்து இது
மாறுபட்டிருக்கிறது அல்லவா !


கரகாட்டம்


கரகாட்டம்

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக


    ஒப்பனை செய்து கொண்ட ஆட்டக்காரர்கள் அலங்கரிக்கப்பட்ட
கரகத்தைத் தலையில் வைத்துக் கொண்டு, அது கீழே விழுந்து
விடாதபடி நையாண்டி மேளத்தின் தாள முறைக்கேற்ப மெதுவாக,
வேகமாக, மிகவேகமாக, சுழன்றும், குதித்தும், குத்த வைத்தும்,
புரண்டும் ஆடுகின்றனர். சபை வணக்கம், ஒன்னாங்காலம், தெம்மாங்கு,
நையாண்டி, பவளக்கொடி மெட்டு, கட்டபொம்மன் மெட்டு என்று
அமையும் நையாண்டி மேளத்தின் இசைப்பு முறைக்கேற்ப நீண்ட நேரம்
தொடர்ந்து ஆடுகின்றனர். ஆட்டத்தின் போது கண்ணைக் கட்டிக்
கொண்டு தேங்காய் உடைத்தல், கண்ணால் ஊசி எடுத்தல், ஏணியில்
ஏறுதல், தீப்பந்தம் சுற்றுதல் போன்ற வித்தைகளைச் செய்து காட்டிப்
பார்வையாளர்களைப் பரவசமடையச் செய்கின்றனர். காண்போரைக்
கவர்ந்திழுக்கும் திறமையான ஆட்டக் கலையாகக் கரகாட்டம்
திகழ்கின்றது.


    மேற்கூறிய விளக்கங்களின் அடிப்படையில் சக்திக் கரமெடுத்தல்
என்னும் சடங்கைப் போலச் செய்யும் கலையாகக் கரகாட்டம்
வளர்ச்சி பெற்றிருப்பதை அறியலாம். அம்மன் கோயில் வழிபாடுகளில்
சக்திக் கரகமெடுத்தலையும், தொழில் முறையான கரகாட்ட நிகழ்வையும்
ஒருசேரக் காணலாம். எனினும் கரகாட்டம் புனிதமானதாகக்
கருதப்படுவதில்லை என்பது அறியத் தக்கதாகும்.


    இலங்கையில் மாரியம்மன் மற்றும் கண்ணகி வழிபாட்டின்போது
கரகமெடுத்தல் சடங்கு நிகழ்த்தப் படுவதாகவும் கரகமெடுப்போர்
உடுக்கின் இசைக்கேற்ப ஆடுவதாகவும் கூறப்படுகிறது.


    இதைப் போலவே காவடியாட்டம், முருக வழிபாட்டில்
இடம்பெறும் காவடியெடுத்தல்
என்ற சடங்கிலிருந்தும், காளியாட்டம்
காளியம்மன் சடங்கிலிருந்தும்
தோற்றம் பெற்றுள்ளன.

4.3.3 வாழ்க்கை வட்டச் சடங்குக் கலைகள்


    சமுதாய வாழ்வில் சடங்குகள் பெரும்பங்கு ஆற்றுகின்றன.
வாழ்க்கையை மனிதப் பருவத்திற்கு ஏற்ற வகையில் பிறப்பு, பூப்பு,
திருமணம், இறப்பு
என்று பகுத்து ஒவ்வொரு நிலையிலும் பல்வேறு
சடங்குகள் மேற்கொள்ளப் படுகின்றன. இவற்றைத் தகுதிப் பெயர்ச்சிச்
சடங்குகள்
(Rites of Passage) என்பர். இத்தகைய சடங்குச்
சூழல்களிலும் நிகழ்த்து கலைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.


    கம்பளத்து நாயக்கர் திருமணச் சடங்குகளில் தேவராட்டம் தவறாமல்
இடம்பெறுகின்றது. மணமக்களைத் தேவராட்டம் ஆடி அழைத்து
வருவது; தேவராட்டம் ஆடி, பூப்படைந்த பெண்ணை அழைத்து
வருவது; இறப்பு தொடர்பாகப் பதினாறாம் நாள் செய்யப்படும்
சடங்கின்போது இறந்தோருக்கு மரியாதை செய்யும் வகையில்
தேவராட்டம் ஆடுவது போன்ற வழக்கம் இம்மக்களிடம் இருந்து
வருகிறது. இறந்தோருக்காகத் தெய்வக் கதைகளை உடுக்கைப் பாட்டாகப்
பாடுவது; கன்னிப் பெண்கள் இறந்துவிட்டாலோ, இளவயதில் எவரும்
மரணமடைந்து விட்டாலோ அவர்களுக்காகக் கைச்சிலம்பாட்டம்
நிகழ்த்தப்படுவது; பூப்படைந்த பெண்ணை அமர வைத்துப் பெண்கள்
வட்டமாகச் சுற்றி வந்து பாடுவது போன்ற செயல்பாடுகள், நிகழ்த்து
கலைகள் வாழ்க்கை வட்டச் சடங்குகளில் முக்கியத்துவம் பெறுவதைக்
காட்டுகின்றன.


    மேற்கூறியவாறு நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் சடங்கிற்கு
உரியவையாகவும் வழிபாட்டிற்கு உரியவையாகவும் வாழ்க்கை வட்டச்
சடங்குகளில் நிகழ்த்தப்படும் முக்கியத்துவத்தைப் பெற்றவையாகவும்
விளங்குகின்றன. கலைகள்     இச்சூழலில் புனிதமானவையாகக்
கருதப்படுகின்றன. மேலும் அரசியல் நிகழ்வுகள், பொதுக்கூட்டங்கள்,
ஊர்வலங்கள், இன விழாக்கள் போன்றவற்றிலும் நாட்டுப்புற நிகழ்த்து
கலைகள் தொழிற் கலைகளாக நிகழ்த்திக் காட்டப்படுகின்றன.



தன்மதிப்பீடு : வினாக்கள் - I

1.

கலைகளைக்     குறிக்கப் பயன்படுத்தப்பட்ட
பழமையான சொல் எது?

2.

நாட்டுப்புற நிகழ்த்து கலைகளை வகைப்படுத்தும் இருபெரும் பிரிவுகள் எவை?

3.

தெருக்கூத்து     எந்த     வகைப்பாட்டினுள் இடம் பெற்றுள்ளது?

4.

சேவையாட்டம் என்ற நிகழ்த்து கலை எந்தத்
தெய்வத்தால் ஆடப்பட்டதாகக் கூறப்படுகின்றது?

5

சக்திக் கரகமெடுத்தல் என்ற சடங்கிலிருந்து தோன்றிய நிகழ்த்து கலை எது?

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 18:20:47(இந்திய நேரம்)