தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

D03111-1.3 அறத்தொடு நிற்றல்

1.3 அறத்தொடு நிற்றல்

அகப்பொருள் இலக்கணத்தில் அறத்தொடு நிற்றல் என்பது
முதன்மையானதொரு மரபு ஆகும். தலைமக்களின்     வாழ்வை
அறவழியில் நிலைப்படுத்த விரும்பும் தோழி முதலானோர் தலைவனும்
தலைவியும் பிறர் அறியாமல் காதல் கொண்ட உண்மையை உரியவர்க்கு
உரியவாறு எடுத்துரைப்பது அறத்தொடு நிற்றல் ஆகும். இதனால்
தலைவன் தலைவியின் காதல் வெற்றி பெறும் ; திருமண நிகழ்ச்சி
நடைபெற முயற்சிகள் மேற்கொள்ளப்பெறும்.

தலைவன் தலைவியின் அன்பு கலந்த காதல் வாழ்க்கையை
நிலைபெறச் செய்து கற்பு வாழ்வை மலரச் செய்வதே அறத்தொடு
நிற்றலின் பயன் ஆகிறது. சுருங்கச் சொன்னால் களவைக் கற்பாக்கும்
அருஞ்செயலே -
அறச்செயலே - அறத்தொடு நிற்றல்.

அகப்பொருள் இலக்கணத்தில் இடம்பெறும் தலைவி, தோழி, செவிலி
முதலானோர் அவ்வாறு அறம் நிலைநிறுத்தச் செயல்படும் திறத்தை
இப்பகுதியில் ஆசிரியர் விளக்கியுள்ளார்.


1.3.1 அறத்தொடு நிற்றலின் வகை

தலைவியின் களவு வாழ்க்கையை அடுத்தவர்க்கு எடுத்துரைக்கும்
அறத்தொடு நிற்றல் இருவகைப்பட்டதாய் அமைகிறது. அவையாவன :

(அ) முன்னிலை மொழி

:
முன் நிற்பார்க்கு நேரே கூறுதல்.

(ஆ) முன்னிலைப் புறமொழி

:
முன்     நிற்பார்க்குக்     கூற
வேண்டிய செய்தியைப் பிறருக்குக்
கூறுவார் போலக் கூறுதல்.


1.3.2 தலைவி அறத்தொடு நிற்றல் - கிளவிகள்

தலைவி, தனக்கும் தலைவனுக்கும் இடையிலான மறைமுகக்
காதல் வாழ்வைத் தோழியிடம் வெளிப்படுத்தும்போது நிகழ்த்தும்
கூற்றுகளாக ஏழினைக் குறிப்பிட்டுள்ளார் நம்பியகப் பொருள் ஆசிரியர்.
அவையாவன :

(1) தோழி தன் கண்ணீரைத் துடைத்தபோது அதை ஒரு வாய்ப்பாகக்
கொண்டு, தான் கலங்கி நிற்பதற்கான காரணத்தைக் கூறுதல்.

(2) தலைவன் தெய்வத்தைச் சான்றாக வைத்துத் தன்னை
மணந்து கொள்ளும் உறுதி கூறியதை வெளிப்படுத்துதல்.

(3) அவ்வாறு கூறிய பிறகு தலைவன் தன்னை விட்டு நீங்கியதை,
தோழியிடம் கூறுதல்.

(4) தோழி, தலைவனின் பண்புகளைப் பழித்துக் கூறுதல் ; அது
கேட்ட தலைவி தலைவனது பண்புகளைப் புகழ்ந்து கூறுதல்.

(5) தெய்வத்தை வேண்டிக் கொள்ள இருவரும் செல்வோம் என்று
தலைவி கூறுதல்.

(6) தன் தாய் தன்னை வீட்டுக்காவலில் வைத்தாள் என்று
தோழியிடம் கூறுதல்.

(7) செவிலித் தாய் இரவு நேரத்தில் தலைவன் வந்ததைப் பார்த்து
விட்டாள் என்று தோழியிடம் கூறுதல்.


1.3.3 பாங்கி அறத்தொடு நிற்றல்

தலைவியின் காதல் வாழ்வு பற்றிய உண்மைச் செய்தியைத் தோழி
(பாங்கி) எடுத்துரைப்பது, பாங்கி அறத்தொடு நிற்றல் எனப்படும்.
அவ்வாறு     தோழி     அறத்தொடு நிற்றல், செவிலி (வளர்ப்புத்
தாய்) தலைவியைப் பற்றிய ஐயப்பாட்டை எழுப்பி வினவியபோதே
நிகழும். அது இரண்டு கூறுபாடுகளை உடையது.

பாங்கி அறத்தொடு நிற்றல் - I

செவிலித் தாய் தலைவியின் உடல் தோற்றத்திலும், செயல்பாடுகளிலும்
தற்போது நிகழ்ந்துள்ள வேற்றுமைகளுக்குக் காரணம் யாது? எனக்
கேட்ட போது தோழி அறத்தொடு நிற்பாள்.

பாங்கி அறத்தொடு நிற்றல் - II

தலைவியின் மாறுபாட்டிற்கான காரணத்தைக் கண்டறிவதற்காக
வேலனை அழைத்து வந்து வெறியாட்டு என்னும் நிகழ்ச்சியைச்
செவிலி மேற்கொள்வாள். அப்போது, அத்தகைய வெறியாட்டை எந்தப்
பயனையும் தராது என்று கூறி, வெறியாட்டைத் தடுத்து நிறுத்தும் தோழி
உண்மைக் காரணத்தைப் புலப்படுத்தி அறத்தொடு நிற்பாள்.

களவின் காரணம்

செவிலி வினவிய போது தலைவியின் களவு வாழ்க்கையை
அறத்தொடு நின்று வெளிப்படுத்தும் தோழி, தலைவனின் காதல்
உறவானது மலர்ந்ததற்கு மூன்று நிலைகளைக் காரணமாகக் காட்டுவாள்.
அவை யாவன :

(1) பூத்தரு புணர்ச்சி : தலைமகன் தலைவியின் கூந்தலில் மலர்க்
கொத்தைச் சூட, அவனையே தலைவனாகத் தலைவி மனத்தளவில் முடிவு
செய்தல்.

(2) புனல் தரு புணர்ச்சி : தலைவி ஆற்று வெள்ளத்தில் மகிழ்ந்து நீராட,
அப்போது நிகழ்ந்த இடையூற்றில் இருந்து மீட்ட ஆடவனையே
தனக்குரிய காதல் தலைவனாகக் கொள்ளுதல்.

(3) களிறு தரு புணர்ச்சி : தலைவி தினைப் புனம் காவல் புரிந்த
காலத்தில் களிறு (யானை) ஒன்றின் தாக்குதலில் இருந்து தன்னைக்
காத்த தலைவனையே தனக்குரியவனாக உள்ளத்தளவில் முடிவு செய்தல்.

மேற்காணும் மூவகைப்பட்ட இயல்பான சூழல்களில் ஏதேனும் ஒன்று
நிகழ, அதன் தொடர்ச்சியாய்த் தலைவிக்குக் காதலும், களவு
வாழ்க்கையும் மலர்ந்து வளர்ந்ததாகத் தோழி குறிப்பிடுவாள். இவை,
அவள் அறத்தொடு நிற்கும்போது எடுத்துரைக்கும் காரணங்களாக
அமைகின்றன.


1.3.4 செவிலி அறத்தொடு நிற்றல்

தலைவியின் வளர்ப்புத் தாயான செவிலி தோழியிடம் சில
வினாக்களை எழுப்பி அவற்றின் மூலமாகத் தலைவியின் களவு
ஒழுக்கத்தை உணர்ந்து கொள்வாள். அவ்வாறே தலைவியின் தாய்
(நற்றாய்) தன் மகளின் வேறுபாடு கண்டு அதற்கான காரணத்தைச்
செவிலித் தாயிடம் வினவுவாள். அப்போது களவு வாழ்க்கை பற்றிய
உண்மையைச் செவிலித் தாய் புலப்படுத்தி நிற்பாள்.

செவிலி அறத்தோடு நிற்கும் முறை

முன்னிலை மொழி, முன்னிலைப் புறமொழி என அறத்தொடு நிற்கும்
முறைகள் இரண்டை முன்னர்க் குறிப்பிட்டோம். அவற்றுள் ஒன்றான
முன்னிலை மொழி என்னும் முறையில், செவிலி நேரடியாகவே
நற்றாயிடம் உண்மையை உணர்த்தி நிற்பாள்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 21:12:35(இந்திய நேரம்)