Primary tabs
2.6 உடன்போக்கு இடையீடு
தலைவனும் தலைவியும் ஒன்றுபட்டு
உடன்போக்காக ஊரை விட்டுச்
செல்லுவர். அவ்வாறு செல்லும் உடன்போக்கு, இடையில் சுற்றத்தவரால்
தடைப்படுதல் உடன்போக்கு இடையீடு எனப்படும்.
தலைவன்
தலைவியை உடன்போக்கிச்
சென்றான் என்பதை
அறிந்த தலைவியின் சுற்றத்தார் அவர்களைப்
பின்தொடர்ந்து செல்வர்.
அப்போது தலைவன் தலைவியைச் சுற்றத்தாரிடம்
விட்டு விட்டுச்
செல்லுதல் என்பதையும் உடன்போக்கு இடையீடாகக்
குறிப்பிடுவர்.
உடன்போக்கு இடையீடு, போக்கு
அறிவுறுத்தல், வரவு அறிவுறுத்தல்,
நீக்கம், இரக்கமொடு மீட்சி என்னும் நான்கு வகைகளை உடையது.
போக்கு அறிவுறுத்தல்
தலைவனுடன்
தன் ஊரைவிட்டு நீங்கும் தலைவி செல்லும் வழியில்
எதிரே வரும் அந்தணர்களிடம்
தன் செலவைத் தோழிக்கும்
நற்றாய்க்கும் உணர்த்துமாறு வேண்டுதல் ; அவ்வாறே
தலைவியின்
உடன்போக்கை அந்தணர்கள்
சென்று நற்றாய்க்கு உணர்த்துதல்.
இவ்விரண்டும்
போக்கு அறிவுறுத்தல் எனப்படும்.
வரவு அறிவுறுத்தல்
தன்னுடைய
சுற்றத்தினர் பின்தொடர்ந்து வருவதைத்
தலைமகள்
தலைவனுக்கு எடுத்துக் கூறுதல் வரவு அறிவுறுத்தல்
எனப்படும்.
நீக்கம்
தலைவியின்
சுற்றத்தினர் பின்தொடர்ந்து வருவதை
உணர்ந்த
தலைவன் தலைவியை விட்டுவிட்டுத்
தான் மட்டும் நீங்கிச் செல்லுதல்
நீக்கம் எனப்படும்.
இரக்கமொடு மீட்சி
தன் சுற்றத்தினரைக் கண்டதும்
தன்னைத் விட்டுத் தலைவன் நீங்கி
விட்டதற்காக மிகுந்த
வருத்தப்பட்ட தலைவி, முடிவில் சுற்றத்தினருடன்
மீண்டு தன் ஊருக்கே திரும்புதல் இரக்கமொடு மீட்சி
எனப்படும்.
தலைமக்களின் உடன்போக்கு சுற்றத்தவரால் தடுத்து நிறுத்தப்படுதலை
உடன்போக்கு
இடையீடு என்று கண்டோம். அதற்குரிய
விரிவுக்
கிளவிகளை இனிக் காண்போம்.
(1) தன் ஊரை விட்டு நீங்கும் தலைவி எதிரில் வரும்
அந்தணரிடம்
தான் தலைவனுடன் செல்லும் செய்தியைத் தோழியிடம் கூறுமாறு
சொல்லுதல்.
(2) தன் ஊரை விட்டு நீங்கும்
தலைவி அவர்களிடம், அச்செய்தியைத்
தன் தாயிடம் சொல்லுமாறு வேண்டுதல்.
(3) தலைவியின் உடன்போக்கை அந்தணர் நற்றாயிடம் கூறுதல்.
(4) தலைவியின்
உடன்போக்கை அறிந்த சுற்றத்தார் கோபப்பட்டுக்
கூட்டமாகப் பின் தொடர்ந்து செல்ல, அதைக் கண்ட
தலைவி
அச்செய்தியைத் தலைவனுக்குக் கூறுதல்.
(5) தலைவியின்
சுற்றத்தாரை எதிர்த்துத் தாக்க
விரும்பாத
தலைவன் தலைவியைச் சுற்றத்தினரிடமே விட்டுவிட்டுத் தனித்துச்
செல்லுதல்.
(6) சுற்றத்தினருடன்
திரும்பிச் செல்லும் தலைவி
புறங்காட்டிச்
செல்லும் தலைவனைத் திரும்பித்
திரும்பிப் பார்த்தவாறே
செல்லுதல்.
இவையாவும் உடன்போக்கு இடையீட்டின் விரிவுக் கிளவிகள் ஆகும்.
மணம் முற்றுப் பெறல்
வரைவியலின் நிறைவாக அமையும் இறுதி
நூற்பா, வரைதல் என்றால்
என்ன என்பதைப் பற்றி விளக்குவதாக அமைகிறது.
தன்னூரிலும்
தன் மனையிலும் வரைதல் நிகழாதபோது தலைவன்
தலைவியின்
இல்லத்திற்கு வர அவனைத் தலைவியின்
பெற்றோர்
எதிர்கொண்டு அழைப்பர். பின்னர் அந்தணர், சான்றோர்
முன்னிலையில்
உரிய கொடை கொடுத்து, தலைவன் தலைவியை
மணந்து கொள்ளுதல்
தகுதியான செயல்பாடாகும் என்பது வரைதல்
பற்றிய அகப்பொருள்
விளக்கமாகும்.