Primary tabs

தமிழில், பலரால் அறியப்பட்டதும், பின்பற்றப்படுவதும், சமுதாயவியல் அணுகுமுறை (Sociological approach) ஆகும். இது, இலக்கியத்தின் உள்ளடக்கம் பற்றியே அதிகம் அக்கறை கொள்கிறது; அதனையே தளமாகக் கொள்கிறது. ஒரு சமுதாயவியல் அறிஞன் செய்கிற வேலையை இந்த அணுகுமுறை மூலம், திறனாய்வாளன் செய்கிறான். சமுதாய வரலாறு எழுத இந்தத் திறனாய்வுமுறை, பல சமயங்களில் அறிஞர்களுக்கு உதவுகின்றது. தமிழ்ச் சமூக வரலாற்றுக்கு - முக்கியமாகப் பழந்தமிழ்ச் சமூகத்தை அறிய - இந்த அணுகுமுறை பெருமளவில் துணை செய்துள்ளது. வெ.கனகசபைப் பிள்ளை, கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார் முதலிய பல அறிஞர்கள் இவ்வாறு பல நூல்கள் செய்துள்ளனர்.
சமுதாயவியல் திறனாய்வு மிகவும் விசாலமானது ; மேலும்,
இது மிகவும் பழைமையானதும் அதே நேரத்தில் தொடர்ந்து
பரவலாகச் செய்யப்பட்டு வருவதும் ஆகும். எனவே, இது பல
கோணங்களில் (dimensions or angles) வெளிப்படுகிறது.
அவற்றுள், குறிப்பாகச் சமுதாயப் பின்புலம் (Social background)
காணுதல், மற்றும் குறிப்பிட்ட இலக்கியம் தோன்றுவதற்குக்
குறிப்பிட்ட பின்புலமே காரணம் என்ற முறையில் ஆராய்தல்
ஆகியவற்றை இங்குப் பார்க்கலாம். உதாரணமாக, தமிழ்ச்
சிறுகதைகளின் தொடக்க காலத்தில், விதவையர் சோகம்,
பால்ய விவாகத்தின் கொடுமைகள் முதலியவற்றை மிகுதியாகவே
காணலாம். காரணம், 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்ச்
சமூகத்தில், முக்கியமாகப் பிராமண இனத்தவரிடையே
பால்ய விவாகம், ஒரு சமூகக் கட்டாயமாக இருந்து வந்தது.
அந்தச் சோகமே, இத்தகைய கதைகள் தோன்றக் காரணம்; அதே நேரத்தில், அண்மைக் காலமாகத் தமிழ்ப் புனைகதைகளில்
அத்தகைய பாடுபொருளைக் காண்பதரிது. காரணம், அந்தச்
சூழ்நிலை இப்போது இல்லை. காலதாமதமாகத் திருமணமாகின்ற
முதிர்கன்னிகள் பிரச்சனை, இன்றையப் புனைகதைகளில்
இடம் பெற்று வருவதைப் பார்க்கலாம். மேலும், பெண்கள்
எழுச்சி மற்றும் பெண்ணியச் சிந்தனை பெருகி வருவதையும்
பார்க்கலாம்.
சமுதாய நிறுவனங்கள் (Social Institutions) பற்றிய சித்திரிப்பு:
திருமணம், தனிக்குடும்பம், கூட்டுக் குடும்பம், சமூக நியதிகள்
அல்லது எழுதப்படாத சட்டங்களும் மரபுகளும், சாதி
முதலியவை சமுதாய நிறுவனங்களாகும். இலக்கியத்தில் இவை
எவ்வெவ்வாறு இடம் பெற்றுள்ளன என்று கண்டறிவது
சமுதாயவியல் அணுகுமுறையில் மிகவும் முக்கியமானதாக உள்ளது.
அடுத்துச் சமுதாய மதிப்புகள் அல்லது விழுமியங்கள்
(Social Values) . இவை, பெரும்பான்மை மக்களால் அல்லது
செல்வாக்குப் பெற்ற சமூகக் குழுவினரால் இவையிவை நல்லன
அல்லது தீயன, கெட்டன அல்லது ஏற்புடையன என்று
நீண்டகாலமாக அங்கீகரிக்கப்பட்டு வருவனவாகும்.
ஒரே ஊர்
வாசுதேவ நல்லூர்
நீயும் நானும்
ஒரே மதம்
திருநெல்வேலிச் சைவப் பிள்ளைமார்
வகுப்புங் கூட
என்றன் தந்தையும்
சொந்தக்காரர்கள்
செம்புலப்பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே.