Primary tabs
xiii
3. பெயரியல் வினையியல் ஒழிபுகள்
பெயர்ச்சொல் எனக்கொண்டு பெயரியலிலோ வினைச்சொல் எனக் கொண்டு வினையியலிலோ கூற இயலாது ஒழிந்த தொகைச் சொற்கள் இவ்வியலிற் கூறப்பட்டன. எல்லாத் தொகைச் சொற்களும் ஒரு சொல் போல் நடக்கும் (24)
(1) தமன் நமன் நுமன் எமன் என்பனபோலும் கிளைப் பெயர்கள் தம் நம் நும் எம் எனும் பன்மைப் பெயர்களின் அடியாகப் பிறந்த ஒருமைப் பெயர்களாகக் காணப்படினும் அவற்றை அவ்வாறு பிரிக்க வேண்டின் அவை பிரியா, ஒட்டிய தொகைச் சொல்லேயாம் (14)
(2) இசைநிறை, அசைநிலை, பொருளொடு புணர்தல் என்ற வகையில் வரும் அடுக்குச் சொற்களும் ஒரு சொல் எனப்படும்; பிரிக்கப்படா (15)
ஒரு சொல் நிலையில் வரும் அடுக்குச் சொற்களுள் இசை நிறைப் பொருளில் வருவன இரண்டு மூன்று நான்கு முறை அடுக்கி வரும் (27) துணிவு விரைவு முதலிய பொருளில் வரும் அடுக்கு இரண்டு அல்லது மூன்று முறை அடுக்கி வரும் (28) அசைநிலைப் பொருளில்வரும் அடுக்கு இரண்டுமுறை அடுக்கி வரும். கண்டீர், கேட்டீர், சென்றது, போயிற்று என்பன அசை நிலைப் பொருளில் வரும்போது இறுதியில் வினா எழுத்துடன் கூடி கண்டீரே, கேட்டீரோ, சென்றதோ போயிற்றோ என்பன போல அமைந்து இரண்டுமுறை அடுக்கி வரும் (29) அவ்வாறே கேட்டை, நின்றை, காத்தை, கண்டை போலும் சொற்கள் முன்னிலையில் வாராதவழி அசை நிலையாகி இரண்டுமுறை அடுக்கி வரும் (30)
(3) ஒருசொல் போல்நடக்கும் தொகைநிலைத் தொடர்கள் பின் வருவனவாம். அவை வேற்றுமைத்தொகை, உவமத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை என்னும் ஆறாம் (16)
வேற்றுமைத் தொகையாவது வேற்றுமையுருபுகள் விரிந்திருந்தால் எப்பொருள் தருமோ அப்பொருளை அவ்வுருபுகள் மறைந்திருந்தபோதும் (தொக்கபோதும்) தருமாறு அமைவதாம் (17) கல்லால் எறிந்தான் என்பது கல்லெறிந்தான் என வருவது.