Primary tabs
iii
பதிப்புரை
அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றியவர் பலர்; தமிழர்தம் நிலையுயர நெடிது பாடுபட்டவர் பலர்; நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர் பலர்! ஆனால் இம் மூன்று செயல்களையும் ஒருங்கே செய்தவர் மிகமிகச் சிலரே! அச்சிலருள்ளும் தலையாயவர் நாவலர் - கணக்காயர் - டாக்டர் ச. சோமசுந்தர பாரதியாரஎன்பதை அனைவரும் அறிவர்!
திருவள்ளுவரைப் பற்றியும் தொல்காப்பியரைப் பற்றியும் எழுந்த கட்டுக் கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்; கைகேயியைப் பலரும் பழிதூற்றிக் கொண்டிருந்த காலத்தில், ‘தசரதன் குறையும் கைகேயி நிறையும்’ கண்டு உண்மையை வெளிப்படுத்தியவர்; சேரர் தலைநகரமான வஞ்சி மூதூர், மலைநாட்டில் மேலைக் கடற்கரையில் பேராற்றின் கழிமுகத்திலமைந்த பழம்பட்டினமேயன்றிப் பிறிது உள்நாட்டு ஊர்எதுவுமாகா என ஆய்ந்து கூறியவர்; ‘மாரிவாயில், மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி’ முதலான படைப்பிலக்கியங்களையும் உருவாக்கியவர்; அனைத்திற்கு மேலாகத் தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்குப் புத்துரை கூறியவர்! தமிழில் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் நூல்களும் கட்டுரைகளும் எழுதித் தமிழின் பெருமையை உலகறியச் செய்தவர்! இங்ஙனம் தமிழுக்குப் பல்லாற்றானும் அருந்தொண்டாற்றிய சிறப்பினர் நாவலர் பாரதியார்!
அற்றைத் தமிழரின் ஏற்றமும் இற்றைத் தமிழரின் தாழ்வும் குறித்து மேடைதோறும் முழக்கமிட்டவர்; பேச்சிலும் எழுத்திலும் ‘தமிழர் மரபு இது, அயலவர் மரபு இது’ எனத் தெளிவுறுத்தியவர்; தமிழர் மாநாடுகளில் தலைமைத் தாங்கித் தமிழரிடையே விழிப்புணர்ச்சி ஊட்டியவர் இவர்!
தூத்துக்குடியில் ‘செக்கிழுத்த செம்மல்’ வ.உ.சிதம்பரனாரோடு பெருநட்புக் கொண்டு, நாட்டு விடுதலை