தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


xL

என்போலவெனின், முப்பத்திரண்டு உறுப்பொடும் புணர்ந்தது மக்கட் சட்டகம் என்றால், முப்பத்திரண்டு உறுப்பினும் தீர்ந்து மக்கட் சட்டகம் இல்லை; அதுபோல வெனக் கொள்க’’ என உவமையால் விளக்குகின்றார்.

ஆய்தமும் ஒற்றும் தாமாக அலகுபெறா, பிற எழுத்துக்களொடு் கூடிநின்ற பொழுது அலகு பெறும் என்பதை, ‘‘ஆய்தமும் ஒற்றும் தாமாக  அலகு பெறா எனவே, வேறொரு எழுத்தோடு கூடிநின்ற பொழுது அலகு காரியம் பெறும் என்பதாயிற்று. என்னை? தேவதத்தன் தானாகப் போகலான என்றால் துணைபெற்றால் போவான் என்பதாம். அதுபோலக் கொள்கை’’ என உவமையால் நிறுவுகின்றார்.

வெண்பா முன்னாகவும் ஆசிரியம் பின்னாகவும் வருவது மருட்பா. அதனை விதப்பினால் அமைத்துக் கொண்டு, ‘‘கங்கை யமுனைகளது சங்கமம் போலவும், சங்கர நாராயணரது சட்டகக் கலவியே போலவும், வெண்பாவும் ஆசிரியமுமாய் விராய்ப் புறநிலை வாழ்த்து முதலாகிய பொருள்கண்மேல் யாப்புற்று மருட்சியுடையத்தாகப் பாவி நடத்தலின் மருட்பா என்று வழங்கப்படும்’’ என்பாரும் உளர் என்று விளக்குகின்றார்.

தூங்கிசை வண்ணம் முதலியவற்றை உவமையால் நயம்பட மொழிகின்றார்: ‘‘முதுபிடி நடந்தாற்போலவும், கோம்பி நடந்தாற் போலவும், நாரை நடந்தாற் போலவும் வரும். அவை ஒருபுடை ஒப்பினால் தூங்கிசை வண்ணம் எனக் கொள்க.

‘‘மதயானை நடந்தாற் போலவும், பாம்பு பணைத்தாற் போலவும், ஓங்கிப் பறக்கும் புட் போலவும் (ஏந்திசை வண்ணம்) வருமெனக் கொள்க.

‘‘ஒவ்வா நிலத்தற் பண்டி உருண்டாற் போலவும், நாரை இரைத்தாற் போலவும், தாராவும் தார்மணி ஓசையும் போலவும் (அடுக்கிசை வண்ணம்) வரும்.

‘பெருங் குதிரைப் பாய்த்தலும், ஒன்று கொட்டியும் இரண்டு கொட்டியும் முதலாக உடை அறுத்துக் கொட்டுப் போலவும் (பிரிந்திசை வண்ணம்) வரும்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-08-2017 20:00:04(இந்திய நேரம்)