தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Purapporul-Venbamalai

குறிப்பினதென்றும் பெருந்திணையின் புறனென்றும் உரைப்பர் தொல்காப்பியர்; புறத். சூ. 22.

(5) நொச்சித்திணையாவது: - தம்முடைய மதிலைக் காத்தல்; இதற்கு நொச்சிப் பூவைச் சூடுதல் உரித்து. இத்திணை மறனுடைப்பாசி முதலிய எட்டுத் துறைகளையுடையது; நொச்சியென ஒருதிணை கொள்ளாமல் இதனை உழிஞைத் திணையுள் அடக்குவர் தொல்காப்பியர்.

(6) உழிஞைத்திணையாவது:- பகைவருடைய மதிலை வளைத்துக் கொள்ளுதல்; இதற்கு உழிஞைப் பூவைச் சூடுதல் உரித்து; உழிஞையென்பது ஒருவகைக் கொடி. உழிஞையைக் கொற்றா னென்றும் அது குடநாட்டார் வழக்கென்றும் கூறுவர் புறநானூற்றுரையாசிரியர். இத்திணை குடைநாட்கோள் முதலிய இருபத்தெட்டுத் துறைகளையுடையது. இதுவும் நொச்சித்திணையும் மறுதலைத்திணை; "உழிஞையு நொச்சியுந் தம்முண் மாறே" (பன்னிரு.); இதனை மருதத்தின் புறனென்பர் தொல்காப்பியர்; புறத். சூ. 9.

(7) தும்பைத்திணையாவது: - பகைவரோடு போர் செய்தல்; இதற்குத் தும்பைப் பூவைச் சூடுதல் உரித்து; தும்பை ஒருவகைச் செடி. "பொருதல் தும்பை புணர்வ தென்ப" (பன்னிரு.); இது தும்பையரவ முதலிய இருபத்துமூன்று துறைகளையுடையது. தமது வலியினை உலகம் மீக்கூறுதலே தமக்குப் பொருளாகக் கருதிப் பொருவது தும்பை யென்றும் இதனை நெய்தற்றிணையின் புறனென்றும் சொல்வர் தொல்காப்பியர்; புறத். சூ. 14.

(8) வாகைத்திணையாவது: - பகைவரை வெல்லுதல்; இதற்கு வாகைப்பூவைச் சூடுதல் உரித்து; வாகையென்பது பாலை நிலத்துக்குரியதொரு மரம். இத்திணை வாகையரவம் முதலிய முப்பத்திரண்டு துறைகளையுடையது. அந்தணர் முதலிய நான்குவருணத்தோரும், அறிஞரும், தாபதர் முதலியோரும் தம்முடைய கூறுபாடுகளை மிகுத்தல் வாகைத்திணையென்றும், இதனைப் பாலைத்திணையின் புறனென்றும் கூறுவர் தொல்காப்பியர்; புறத். சூ. 18.

(9) பாடாண்டிணையாவது: - ஒருவனுடைய கீர்த்தி வலி கொடை தண்ணளி முதலியவற்றை ஆராய்ந்து சொல்லுதல்; இது வாயினிலை முதலிய நாற்பத்தேழு துறைகளையுடையது; இதனைக் கைக்கிளைத் திணையின் புறனென்பர் தொல்காப்பியர்; புறத். சூ. 25. பாடாணென்பது பாடப்படுகின்ற ஆண்மகனுடைய ஒழுகலாறென்னும் பொருளையுடையது; இதனை வினைத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித் தொகையென்பர் நச்சினார்க்கினியர்.

(10) பொதுவியலாவது: - மேற்கூறிய புறத்திணைகட்கெல்லாம் பொதுவாயுள்ளனவும் அவற்றிற் கூறாதொழிந்தனவுமாகிய இலக்கணங்களைக் கூறுவது; இது நான்கு பகுப்புக்களையும் போந்தை முதலிய முப்பத்தேழு துறைகளையுமுடையது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 03-09-2016 21:36:53(இந்திய நேரம்)