தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Purapporul-Venbamalai

நிரையை மீட்டுக்கொள்ளும் ஆற்றலின்றிக் கரந்தையார் மீண்டு செல்லுதலும் உண்டு. அப்பொழுது ஒரு வீரன் தனியேநின்று ஆயுதங்களால் தன்மேற் புண் உண்டாதலை விரும்பிக் கூத்தாடிப் பகைவரை மாளச் செய்து அவர்களுடைய குடர் மாலையைச் சூடித் தன் வேலாயுதத்தைச் சுழற்றி ஆடுவான்.

நிரையை மீட்கும்பொழுது போரில் இறந்துபட்ட வீரர்களைப் பாணர் புகழ்ந்துஅவர்களுக்காக இரங்குவர். வெற்றிகொண்ட மறவர் தம்மேம்பாட்டைத் தம் அரசனிடத்தே எடுத்துக்கூறி மகிழ்வர்.தீயநிமித்தம் உண்டாதலையும் மதியாமல் பகைவற்பாற்சென்று பொருது வெற்றிபெற்ற வீரர்களுக்கு வயல் முதலியவரிசைகளை அரசன் வழங்குவான்.

மறவர்கள் தம் அரசனைப் புகழ்வர். இம் மறக்குடியினர் உலகம் உண்டான காலமுதற் கொண்டு வீரத்தோடு தோன்றி விளங்குபவர்களென்று புகழப்படுவர்.

3. வஞ்சிப்படலம்

பகைவருடைய நாட்டைக் கொள்ளக் கருதி வஞ்சி சூடி அரசர் படைகளுடன் மேற்செல்வர். அப்பொழுது நிகழ்வன வருமாறு :

வீரர்கள் பகைவர்மேற் செல்லக்கருதி முரசை முழக்குவர். யானை முதலியன முழங்கும். அரசன் தனது குடையை நல்ல நாளில் தனக்கு முன்னே செல்லவிட்டுத் தனது வாளையும் அதன் பின் நல்ல நாளில் செல்ல விடுப்பான். அக்காலத்தில் அரசனுக்கு வெற்றி உண்டாகும் பொருட்டு வீரர் துர்க்காதேவியை வழிபடுவர்; பிறகு 1படைவகுப்பில் தத்தமக்கு ஏற்ற நிலையை மேற்கொள்வர்.

வேந்தன் சிறப்பை வீரர் புகழ்ந்து பகைவரது நாடு அழிதலுக்காக இரங்குவர். போரில் பொருத வீரர்களுக்கு அரசன் பல பொருள்களை வழங்கிச் சிறப்புச் செய்வான். பகைவர் தனக்கு அஞ்சிப் பணிந்து திறையளப்ப அரசன் சினந்தணிந்து மீளுதலும் உண்டு.

பகைவரோடு பொருதுவென்ற வீரர்கள் அரசனாற் சிறப்புப் பெற்றதைச் சிலர் புகழ்வர். பகைவரோடு பொருதகாலத்திற் சில வீரர்தம்முடைய ஆண்மையை மிகுத்துக் கூறுவர். போரிற் பட்டவர்களுடைய புதல்வர்களுக்கு அரசன் விளைநிலம் முதலியவற்றை அளிப்பான்.

அரசர் சிலர் பகைவருடைய நாட்டில் எரியூட்டுவர்; அங்குள்ள பொருள்களைக் கொள்ளை கொண்டு வருவர்; அங்ஙனம் கொணர்ந்த பொருள்களைப் பாணர் முதலியவர்களுக்குக் கொடுத்து உவப்பர். சில அரசர் தம்மை எதிர்த்துப் போர் செய்பவரால் குடிகளுக்கு உண்டாகும் துன்பத்துக்கு அஞ்சிப் பகையரசருக்கு யானை, குதிரை முதலியவற்றைத் திறையாகக் கொடுத்து அத் துன்பம் உண்டாகாதபடி பாதுகாப்பர்.


1. முன்படை, பின்படை, பக்கப்படை முதலியன.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 03-09-2016 21:38:29(இந்திய நேரம்)