களவைப்பற்றிக் கூறப்புகுந்த ஆசிரியர் அது
கந்தருவ மணத் தோடொப்பதென்பர். இயற்கைப்
புணர்ச்சி, பாங்கற்கூட்டம், தோழியிற்
கூட்டத்துப் பகற்குறி, இரவுக்குறி, வரைவு
கடாதல், உடன்போக்கு வலித்தலென்னும்
*ஆறுபிரிவாகக் களவொழுக்கம் பகுக்கப்படுகின்றது.
அவற்றுள் இயற்கைப் புணர்ச்சி தன்னய முணர்த்தல்
முதல் ஆற்றினன் பெயர்தலீறாகிய ஏழு துறைகளையும்,
பாங்கற்கூட்டம் வினாதல் முதல் பழவரை
விடுத்தலீறாகிய பன்னிரண்டு துறைகளையும்,
பகற்குறி பாங்குணர்வு முதல் பாங்கி
கொண்டிகத்தலீறாகிய முப்பத்திரண்டு துறைகளையும்
இரவுக்குறி, காதன் மிகவின் வாய்விடுகிளவி முதல்
நோதலீறாகிய பதினைந்து துறைகளையும், வரைவுகடாதல்
வருநெறி நினைதன் முதல் அறிந்தே னென்றலீறாகிய
எட்டும் பிறவுமாகிய துறைகளையும் உடன் போக்கு
வலித்தல் அலர் பெரிதென்றல் முதல் விரும்பினன்
நேர்ந்த பாவக்கிளவி யீறாகிய ஏழு துறைகளையும்
உடையன.
கற்பொழுக்கம் அறத்தொடுநிலை, உடன் செலவு,,
சேயிடைப் பிரிவு, ஆயிடைப் பிரிவென்னும் நான்கு
பிரிவுகளை உடையது. அவற்றுள் அறத்தொடுநிலை தலைவி
தோழிக்கு அறத்தொடு நிற்றல் முதல் இளையோற்
கெதிர்தலீறாகிய பதினேழு துறைகளையும், உடன்செலவு
கையடை முதல் தலைமகன் மொழியீறாகிய பதினைந்தும்
பிறவுமாகிய துறைகளையும், சேயிடைப் பிரிவு
பிரிவகை யுணர்த்தல் முதல் வருவோன் கூற்றீறாகிய
பதினான்கு துறைகளையும், ஆயிடைப் பிரிவு
வாயின்மறுத்தல் முதல் செவிலி கூற்றீறாகிய
எட்டும் பிறவுமாகிய துறைகளையும் உடையன.
இத்துறைகளிற் சில உரையில் இரண்டு முதற்பல
துறைகளாக விரிக்கப்படுகின்றன ஒவ்வொரு
துறைக்கும் காட்டப்பட்டுள்ள உதாரணங்களுள்
குறுந்தொகை, ஐங்குறுநூறு, சிற்றட்டகம் என்னும்
நூல்களிலுள்ள செய்யுட்களும் வேறு பல
செய்யுட்களும் காணப்படுகின்றன.
இந்நூலையும் உரையையும் பார்க்கையில் இரண்டும்
ஓராசிரியராலேயே இயற்றப்பட்டனவென்று
தோற்றுகின்றது. களவியற் காரிகையுரையாசிரியர்.