தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Neri Vilakkam 

தமிழ்நெறி விளக்கம்

 
 

மாயின் யாப்பருங்கல விருத்தியாசிரியர் காட்டும் மேற்கோளில் முக்கட்கூட்ட மென்பதே ஏற்ற பாடமாதல் வேண்டும். இந்த ஐயமும் வேறுபிறவும் நாளடைவில் தெளிவாகுமென்று எண்ணுகிறேன்.

இந் நூலுரையிலுள்ள உதாரணச் செய்யுட்களில் இடம் விளங்காத 173 செய்யுட்களுக்குத் தனியெண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல செய்யுட்கள் *களவியற் காரிகையுரையில் ‘பொருளியல்’ என்னும் பெயருடன் காட்டப்பட்டுள்ளன. அவ்வுரையாசிரியர் இந்நூற் சூத்திரத்தையும் உரையையும், மேற்கோளையும் பொருளிய லென்றே குறித்தலை நோக்கும்பொழுது இம் மூன்றையும் ஒருவரே இயற்றியிருத்தல் கூடுமென்ற கருத்து உண்டாகின்றது. உதாரணச் செய்யுளிற் சில தொல்காப்பிய உரை, நம்பியகப் பொருளுரை, யாப்பருங்கல விருத்தியுரை முதலியவற்றில் வந்துள்ளன. பல உரைகளில் மேற்கோளாகக் காட்டப்பெறும் “பூத்தவேங்கை” என்னும் செய்யுளும், “ஏவலிளையர் தாய்வயிறு கரிப்ப” என்பதும் இதில் உதாரணங்களாக வந்துள்ளன.

இவ்வுதாரணச் செய்யுட்கள் இலக்கண அமைதியைக் காட்டு தற்கெனவே இயற்றப்பட்டன போலச் சில அடிகளால் இயன்றுள்ளன. பல வடிகளால் இயன்ற அகநானூறு முதலிய நூற்செய்யுட்களை இவ்வுரையாசிரியர் உதாரணமாகக் காட்டவில்லை. அகப்பொருள் இலக்கண வமைதியைத் தெரிவிக்கச் சில அடிகளையுடைய செய்யுட்களே போதியனவென்பது இவர் கருத்துப் போலும். சங்கமருவிய நூல்களிலுள்ள சொல்லும் பொருளும் உதாரணச் செய்யுட்களிற் பலவிடங்களில் எடுத்தாளப்பட்டுள்ளன.

இச்செய்யுட்களில் வழுத்தூ ரென்பதோர் ஊரின் பெயரும், அதிலிருந்து மதிதர ரென்பவர் சிறப்பும் காணப்படுகின்றன.
 


 

“உடையை வாழி நெஞ்சே யிடைகொண்

டழுங்க லோம்புமதி தழங்கொலி மிகுநீர்

வழுத்தூர் காக்கும் புணையின்

விழுத்துணை சான்ற மிகுபெருங் கிளையே”    (6)

 

*களவியற் காரிகையுரையில், பொருளியலென்னும் பெயரோடு காணப்படும், “நிலவென”, “பேதை வாழிய” “நல்லோண் மெல்லடி” என்னும் முதற் குறிப்பையுடய செய்யுட்கள் இதிற் காணப்படவில்லை.       இந்நூன் மேற்கோட்செய்யுட்களில் 51, 53, 99, 112-ஆல் எண்ணுள்ளவைகளும் ஷெ நூலில் மேற்கோளாக வந்துள்ளன.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 04:05:56(இந்திய நேரம்)