தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பாலை பாடிய பெருங்கடுங்கோ


பாலை பாடிய பெருங்கடுங்கோ

9. பாலை
அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள்
வழிபடு தெய்வம் கண் கண்டாஅங்கு,
அலமரல் வருத்தம் தீர, யாழ நின்
நல மென் பணைத் தோள் எய்தினம்; ஆகலின்,
5
பொரிப் பூம் புன்கின் அழற் தகை ஒண் முறி
சுணங்கு அணி வன முலை அணங்கு கொளத் திமிரி,
நிழல் காண்தோறும் நெடிய வைகி,
மணல் காண்தோறும் வண்டல் தைஇ,
வருந்தாது ஏகுமதி-வால் எயிற்றோயே!
10
மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும்
நறுந் தண் பொழில, கானம்;
குறும் பல் ஊர, யாம் செல்லும் ஆறே.
உடன்போகாநின்ற தலைமகன் தலைமகட்கு உரைத்தது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ

48. பாலை
அன்றை அனைய ஆகி, இன்றும், எம்
கண் உளபோலச் சுழலும்மாதோ-
புல் இதழ்க் கோங்கின் மெல் இதழ்க் குடைப் பூ
வைகுறு மீனின் நினையத் தோன்றி,
5
புறவு அணி கொண்ட பூ நாறு கடத்திடை,
கிடின்என இடிக்கும் கோல் தொடி மறவர்
வடி நவில் அம்பின் வினையர் அஞ்சாது
அமரிடை உறுதர, நீக்கி, நீர்
எமரிடை உறுதர ஒளித்த காடே.
பிரிவு உணர்த்திய தலைவற்குத் தோழி சொல்லியது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ

118. பாலை
அடைகரை மாஅத்து அலங்கு சினை பொலியத்
தளிர் கவின் எய்திய தண் நறும் பொதும்பில்,
சேவலொடு கெழீஇய செங் கண் இருங் குயில்
புகன்று எதிர் ஆலும் பூ மலி காலையும்,
5
'அகன்றோர்மன்ற நம் மறந்திசினோர்' என,
இணர் உறுபு, உடைவதன்தலையும் புணர்வினை
ஓவ மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய
துகிலிகை அன்ன, துய்த் தலைப் பாதிரி
வால் இதழ் அலரி வண்டு பட ஏந்தி,
10
புது மலர் தெருவுதொறு நுவலும்
நொதுமலாட்டிக்கு நோம், என் நெஞ்சே!
பருவம் கண்டு ஆற்றாளாய தலைவி சொல்லியது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ

202. பாலை
புலி பொரச் சிவந்த புலால் அம் செங் கோட்டு
ஒலி பல் முத்தம் ஆர்ப்ப, வலி சிறந்து,
வன் சுவல் பராரை முருக்கி, கன்றொடு
மடப் பிடி தழீஇய தடக் கை வேழம்,
5
தேன் செய் பெருங் கிளை இரிய, வேங்கைப்
பொன் புரை கவளம் புறந்தருபு ஊட்டும்
மா மலை விடரகம் கவைஇ, காண்வர,
கண்டிசின்-வாழியோ, குறுமகள்!-நுந்தை,
அறுமீன் பயந்த அறம் செய் திங்கள்
10
செல் சுடர் நெடுங் கொடி போல,
பல் பூங் கோங்கம் அணிந்த காடே.
உடன் போகாநின்ற தலைமகன் தலைமகட்குச் சொல்லியது.-பாலை பாடிய பெருங் கடுங்கோ

224. பாலை
அன்பினர், மன்னும் பெரியர்; அதன்தலை,
'பின்பனி அமையம் வரும்' என, முன்பனிக்
கொழுந்து முந்துறீஇக் குரவு அரும்பினவே;
'புணர்ந்தீர் புணர்மினோ' என்ன, இணர்மிசைச்
5
செங் கண் இருங் குயில் எதிர் குரல் பயிற்றும்
இன்ப வேனிலும் வந்தன்று; நம்வயின்
'பிரியலம்' என்று, தெளித்தோர் தேஎத்து,
இனி எவன் மொழிகோ, யானே-கயன் அறக்
கண் அழிந்து உலறிய பல் மர நெடு நெறி
10
வில் மூசு கவலை விலங்கிய
வெம் முனை அருஞ் சுரம் முன்னியோர்க்கே?
தோழியால் பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகள் பெயர்த்தும் சொல் கடாவப்பட்டு,'அறிவிலாதேம் என்னை சொல்லியும், பிரியார் ஆகாரோ?' என்று சொல்லியது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ

256. பாலை
நீயே, பாடல் சான்ற பழி தபு சீறடி,
அல்கு பெரு நலத்து, அமர்த்த கண்ணை;
காடே, நிழல் கவின் இழந்த அழல் கவர் மரத்த,
புலம்பு வீற்றிருந்து நலம் சிதைந்தனவே;
5
இந் நிலை தவிர்ந்தனம் செலவே: வைந் நுதிக்
களவுடன் கமழ, பிடவுத் தளை அவிழ,
கார் பெயல் செய்த காமர் காலை,
மடப் பிணை தழீஇய மா எருத்து இரலை
காழ் கொள் வேலத்து ஆழ் சினை பயந்த
10
கண் கவர் வரி நிழல் வதியும்
தண் படு கானமும் தவிர்ந்தனம் செலவே.
'பொருள்வயிற் பிரிந்தான்' என்று ஆற்றாளாகிய தலைமகளைத் தலைமகன் ஆற்றியது. -பாலை பாடிய பெருங்கடுங்கோ

318. பாலை
நினைத்தலும் நினைதிரோ-ஐய! அன்று நாம்
பணைத் தாள் ஓமைப் படு சினை பயந்த
பொருந்தாப் புகர் நிழல் இருந்தனெமாக,
நடுக்கம் செய்யாது, நண்ணுவழித் தோன்றி,
5
ஒடித்து மிசைக் கொண்ட ஓங்கு மருப்பு யானை
பொறி படு தடக்கை சுருக்கி, பிறிது ஓர்
ஆறு இடையிட்ட அளவைக்கு, வேறு உணர்ந்து,
என்றூழ் விடர் அகம் சிலம்ப,
புன் தலை மடப் பிடி புலம்பிய குரலே?
பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகனைத் தோழி சொல்லியது.- பாலை பாடிய பெருங் கடுங்கோ

337. பாலை
உலகம் படைத்த காலை-தலைவ!-
மறந்தனர்கொல்லோ சிறந்திசினோரே-
முதிரா வேனில் எதிரிய அதிரல்,
பராரைப் பாதிரிக் குறு மயிர் மா மலர்,
5
நறு மோரோடமொடு, உடன் எறிந்து அடைச்சிய
செப்பு இடந்தன்ன நாற்றம் தொக்கு உடன்,
அணி நிறம் கொண்ட மணி மருள் ஐம் பால்
தாழ் நறுங் கதுப்பில் பையென முள்கும்
அரும் பெறல் பெரும் பயம் கொள்ளாது,
10
பிரிந்து உறை மரபின பொருள் படைத்தோரே.
தோழி, தலைமகன் பொருள்வயிற் பிரிதலுற்றானது குறிப்பறிந்து விலக்கியது; தோழி உலகியல் கூறிப் பிரிவு உணர்த்தியதூஉம் ஆம்.-பாலை பாடிய பெருங்கடுங்கோ

384. பாலை
பைம் புறப் புறவின் செங் காற் சேவல்
களரி ஓங்கிய கவை முடக் கள்ளி
முளரி அம் குடம்பை ஈன்று, இளைப்பட்ட
உயவு நடைப் பேடை உணீஇய, மன்னர்
5
முனை கவர் முது பாழ் உகு நெற் பெறூஉம்
அரண் இல் சேய் நாட்டு அதர் இடை, மலர்ந்த
நல் நாள் வேங்கைப் பொன் மருள் புதுப் பூப்
பரந்தன நடக்க, யாம் கண்டனம் மாதோ:
காண் இனி வாழி-என் நெஞ்சே!-நாண் விட்டு
10
அருந் துயர் உழந்த காலை
மருந்து எனப்படூஉம் மடவோளையே.
உடன் போகாநின்றான் மலிந்து தன் நெஞ்சிற்குச் சொல்லியது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ

391. பாலை
ஆழல், மடந்தை! அழுங்குவர் செலவே-
புலிப் பொறி அன்ன புள்ளி அம் பொதும்பின்
பனிப் பவர் மேய்ந்த மா இரு மருப்பின்
மலர் தலைக் காரான் அகற்றிய தண் நடை
5
ஒண் தொடி மகளிர் இழை அணிக் கூட்டும்,
பொன் படு, கொண்கான நன்னன் நல் நாட்டு
ஏழிற்குன்றம் பெறினும், பொருள்வயின்
யாரோ பிரிகிற்பவரே-குவளை
நீர் வார் நிகர் மலர் அன்ன, நின்
10
பேர் அமர் மழைக் கண் தெண் பனி கொளவே?
பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது; வரைவு உணர்த்தியதூஉம் ஆம்.-பாலை பாடிய பெருங்கடுங்கோ

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:27:01(இந்திய நேரம்)