தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


கிள்ளி

141. பாலை
இருஞ் சேறு ஆடிய கொடுங் கவுள், கய வாய்,
மாரி யானையின் மருங்குல் தீண்டி,
பொரி அரை ஞெமிர்ந்த புழற் காய்க் கொன்றை,
நீடிய சடையோடு ஆடா மேனிக்
5
குன்று உறை தவசியர் போல, பல உடன்
என்றூழ் நீள் இடைப் பொற்பத் தோன்றும்
அருஞ் சுரம் எளியமன், நினக்கே; பருந்து பட,
பாண்டிலொடு பொருத பல் பிணர்த் தடக் கை
ஏந்து கோட்டு யானை இசை வெங் கிள்ளி
10
வம்பு அணி உயர் கொடி அம்பர் சூழ்ந்த
அரிசில் அம் தண் அறல் அன்ன, இவள்
விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே.
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைவன் சொல்லிச் செலவு அழுங்கியது.-சல்லியங்குமரனார்

390. மருதம்
வாளை வாளின் பிறழ, நாளும்
பொய்கை நீர்நாய் வைகுதுயில் ஏற்கும்
கை வண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த
வயல் வெள் ஆம்பல் உருவ நெறித் தழை
5
ஐது அகல் அல்குல் அணி பெறத் தைஇ,
விழவின் செலீஇயர் வேண்டும்மன்னோ;
யாணர் ஊரன் காணுநன்ஆயின்,
வரையாமைஓ அரிதே; வரையின்,
வரைபோல் யானை, வாய்மொழி முடியன்
10
வரை வேய் புரையும் நல் தோள்
அளிய-தோழி!-தொலையுந பலவே.
பாங்கு ஆயின வாயில் கேட்ப, நெருங்கிச் சொல்லியது; தலைமகள் தோழிக்கு உரைப் பாளாய், வாயிலாகப் புக்கார் கேட்ப, சொல்லியதூஉம் ஆம்.-ஒளவையார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:35:15(இந்திய நேரம்)