தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


மலையன்

77. குறிஞ்சி
மலையன் மா ஊர்ந்து போகி, புலையன்
பெருந் துடி கறங்கப் பிற புலம் புக்கு, அவர்
அருங் குறும்பு எருக்கி, அயா உயிர்த்தாஅங்கு
உய்த்தன்றுமன்னே-நெஞ்சே!-செவ் வேர்ச்
5
சினைதொறும் தூங்கும் பயம் கெழு பலவின்
சுளையுடை முன்றில், மனையோள் கங்குல்
ஒலி வெள் அருவி ஒலியின் துஞ்சும்
ஊறலஞ் சேரிச் சீறூர், வல்லோன்
வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை
10
அகன் தொடி செறித்த முன்கை, ஒள் நுதல்,
திதலை அல்குல், குறுமகள்
குவளை உண்கண் மகிழ் மட நோக்கே.
பின்னின்ற தலைவன்நெஞ்சிற்கு உரைத்தது.-கபிலர்

100. மருதம்
உள்ளுதொறும் நகுவேன்-தோழி!-வள்உகிர்
மாரிக் கொக்கின் கூரல் அன்ன
குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன்
தேம் கமழ் ஐம்பால் பற்றி, என் வயின்
5
வான் கோல் எல் வளை வௌவிய பூசல்
சினவிய முகத்து, 'சினவாது சென்று, நின்
மனையோட்கு உரைப்பல்' என்றலின், முனை ஊர்ப்
பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும்
தேர் வண் மலையன் முந்தை, பேர் இசைப்
10
புலம் புரி வயிரியர் நலம் புரி முழவின்
மண் ஆர் கண்ணின் அதிரும்,
நன்னர் ஆளன் நடுங்கு அஞர் நிலையே.
பரத்தை, தலைவிக்குப்பாங்காயினார் கேட்ப, விறலிக்கு உடம்படச்சொல்லியது.-பரணர்

170. மருதம்
மடக் கண், தகரக் கூந்தல், பணைத் தோள்,
வார்ந்த வால் எயிற்று, சேர்ந்து செறி குறங்கின்,
பிணையல் அம் தழை தைஇ, துணையிலள்
விழவுக் களம் பொலிய வந்து நின்றனளே;
5
எழுமினோ எழுமின், எம் கொழுநற் காக்கம்;
ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர்,
பலர் உடன் கழித்த ஒள் வாள் மலையனது
ஒரு வேற்கு ஓடியாங்கு, நம்
பன்மையது எவனோ, இவள் வன்மை தலைப்படினே?
தோழி விறலிக்கு வாயில் மறுத்தது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:37:22(இந்திய நேரம்)