நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்;
என்றும் என் தோள் பிரிபு அறியலரே'
தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல,
புரைய மன்ற, புரையோர் கேண்மை;
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்தருளி,
நறு நுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே!
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி
சொல்லியது.-கபிலர்
தொல் கவின் தொலைய, தோள் நலம்சாஅய,
நல்கார் நீத்தனர்ஆயினும், நல்குவர்;
நட்டனர், வாழி!-தோழி!-குட்டுவன்
அகப்பா அழிய நூறி, செம்பியன்
பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிகப் பெரிது
அலர் எழச் சென்றனர் ஆயினும்-மலர் கவிழ்ந்து
மா மடல் அவிழ்ந்த காந்தள்அம் சாரல்,
இனம் சால் வயக் களிறு பாந்தட் பட்டென,
துஞ்சாத் துயரத்து அஞ்சு பிடிப் பூசல்
நெடு வரை விடரகத்து இயம்பும்
கடு மான் புல்லிய காடு இறந்தோரே.
இயற்பழித்த தோழிக்குத் தலைவி
இயற்பட மொழிந்தது.- மாமூலனார்
நாள் மழை தலைஇய நல் நெடுங்குன்றத்து,
மால் கடல் திரையின் இழிதரும் அருவி
அகல் இருங் கானத்து அல்கு அணி நோக்கி,
தாங்கவும் தகைவரை நில்லா நீர் சுழல்பு
ஏந்து எழில் மழைக் கண் கலுழ்தலின், அன்னை,
'எவன் செய்தனையோ? நின் இலங்கு எயிறு உண்கு' என,
மெல்லிய இனிய கூறலின், வல் விரைந்து,
உயிரினும் சிறந்த நாணும் நனி மறந்து,
உரைத்தல் உய்ந்தனனே-தோழி!-சாரல்,
காந்தள் ஊதிய மணி நிறத் தும்பி
தீம் தொடை நரம்பின் இமிரும்
வான் தோய் வெற்பன் மார்பு அணங்கு எனவே.
முன்னிலைப்புறமொழியாகத் தலைமகள்
தோழிக்குச்சொல்லியது.-நொச்சிநியமங்கிழார்
ஐய! குறுமகட் கண்டிகும்: வைகி,
மகிழ்நன் மார்பில் துஞ்சி, அவிழ் இணர்த்
தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல்
துளங்குஇயல் அசைவர, கலிங்கம் துயல்வர,
செறிதொடி தெளிர்ப்ப வீசி, மறுகில்,
பூப் போல் உண்கண் பெயர்ப்ப நோக்கி,
சென்றனள்-வாழிய, மடந்தை!-நுண் பல்
சுணங்கு அணிவுற்ற விளங்கு பூணள்;
மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர் குழை,
பழம் பிணி வைகிய தோள் இணைக்
குழைந்த கோதை, கொடி முயங்கலளே.
பரத்தையிற்பிரிந்து வந்த தலைமகன்,
'யாரையும் அறியேன்' என்றாற்குத் தலைவி சொல்லியது;
வாயிலாகப் புக்க தோழிதலைவிக்குச் சொல்லியதூஉம்
ஆம்.-ஓரம்போகியார்
'பார் பக வீழ்ந்த வேருடை விழுக்கோட்டு
உடும்பு அடைந்தன்ன நெடும் பொரி விளவின்,
ஆட்டு ஒழி பந்தின், கோட்டு மூக்கு இறுபு,
கம்பலத்தன்ன பைம் பயிர்த் தாஅம்
வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆர் இடைச்
சேறும், நாம்' எனச் சொல்ல-சேயிழை!-
'நன்று' எனப் புரிந்தோய்; நன்று செய்தனையே;
செயல்படு மனத்தர் செய்பொருட்கு
அகல்வர், ஆடவர்; அது அதன் பண்பே.
பொருட்பிரிவுக்கு உடன்பட்ட
தோழியைத் தலைவி உவந்து கூறியது. -கணக்காயனார்
மா இரும் பரப்பகம் துணிய நோக்கி,
சேயிறா எறிந்த சிறு வெண் காக்கை
பாய் இரும் பனிக் கழி துழைஇ, பைங் கால்
தான் வீழ் பெடைக்குப் பயிரிடூஉ, சுரக்கும்
சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே;
பெரும் புலம்பு உற்ற நெஞ்சமொடு, பல நினைந்து,
யானும் இனையேன்-ஆயின், ஆனாது
வேறு பல் நாட்டில் கால் தர வந்த
பல உறு பண்ணியம் இழிதரு நிலவுமணல்
நெடுஞ் சினைப் புன்னைக் கடுஞ் சூல் வெண் குருகு
உரவு நீர்ச் சேர்ப்பனொடு மணவா ஊங்கே.
தலைவன்சிறைப்புறத்தானாக, தலைவி
வன்புறை எதிர்அழிந்தது.-நக்கீரனார்
வேட்டம் பொய்யாது வலைவளம்சிறப்ப,
பாட்டம் பொய்யாது பரதவர் பகர,
இரும் பனந் தீம் பிழி உண்போர் மகிழும்
ஆர் கலி யாணர்த்துஆயினும், தேர் கெழு
மெல்லம் புலம்பன் பிரியின், புல்லெனப்
புலம்பு ஆகின்றே-தோழி! கலங்கு நீர்க்
கழி சூழ் படப்பைக் காண்டவாயில்,
ஒலி காவோலை முள் மிடை வேலி,
வெண் மணற் படப்பை, எம் அழுங்கல் ஊரே.
தலைவி வன்புறை எதிர்அழிந்து
சொல்லியது.-உலோச்சனார்
யாங்குச் செய்வாம்கொல்-தோழி! ஓங்கு கழைக்
காம்புடை விடர் அகம் சிலம்ப, பாம்பு உடன்று
ஓங்கு வரை மிளிர ஆட்டி, வீங்கு செலல்
கடுங் குரல் ஏறொடு கனை துளி தலைஇப்
பெயல் ஆனாதே, வானம்; பெயலொடு
மின்னு நிமிர்ந்தன்ன வேலன் வந்தென,
பின்னு விடு முச்சி அளிப்பு ஆனாதே;
பெருந் தண் குளவி குழைத்த பா அடி,
இருஞ் சேறு ஆடிய நுதல, கொல்களிறு
வீ ததர் வேங்கைய மலை கிழவோற்கே?
ஆற்றாது ஏதம் அஞ்சி வேறுபட்டாள்,
வெறியாடலுற்ற இடத்து,
சிறைப்புறமாகச்சொல்லியது.-பேராலவாயர்
வளை நீர் மேய்ந்து, கிளை முதல்செலீஇ,
வாப் பறை விரும்பினைஆயினும், தூச் சிறை
இரும் புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்து-
கருங் கால் வெண் குருகு!-எனவ கேண்மதி:
பெரும் புலம்பின்றே, சிறு புன் மாலை;
அது நீ அறியின், அன்புமார் உடையை;
நொதுமல் நெஞ்சம் கொள்ளாது, என் குறை
இற்றாங்கு உணர உரைமதி-தழையோர்
கொய்குழை அரும்பிய குமரி ஞாழல்
தெண் திரை மணிப் புறம் தைவரும்
கண்டல் வேலி நும் துறை கிழவோற்கே!
காமம் மிக்க கழிபடர்கிளவி.-சேந்தங்
கண்ணனார்
குறு நிலைக் குரவின் சிறு நனை நறு வீ
வண்டு தரு நாற்றம் வளி கலந்து ஈய,
கண் களி பெறூஉம் கவின் பெறு காலை,
எல் வளை ஞெகிழ்த்தோர்க்கு அல்லல் உறீஇச்
சென்ற நெஞ்சம் செய்வினைக்கு அசாவா,
ஒருங்கு வரல் நசையொடு, வருந்தும்கொல்லோ
அருளான் ஆதலின், அழிந்து இவண் வந்து,
தொல் நலன் இழந்த என் பொன் நிறம் நோக்கி,
போயின்று கொல்லோ, நோய் தலைமணந்தே
வரைவிடை மெலிவு ஆற்றுவிக்கும்
தோழிக்குத் தலைவி சொல்லியது.-பெருவழுதி
என்னர்ஆயினும் இனி நினைவு ஒழிக!
அன்னவாக இனையல்-தோழி!-யாம்
இன்னமாக நத் துறந்தோர் நட்பு எவன்?
மரல் நார் உடுக்கை மலை உறை குறவர்
அறியாது அறுத்த சிறியிலைச் சாந்தம்
வறனுற்று ஆர முருக்கி, பையென
மரம் வறிதாகச் சோர்ந்து உக்காங்கு, என்
அறிவும் உள்ளமும் அவர் வயின் சென்றென,
வறிதால், இகுளை! என் யாக்கை; இனி அவர்
வரினும், நோய் மருந்து அல்லர்; வாராது
அவணர் ஆகுக, காதலர்! இவண் நம்
நோய் மலி வருத்தம் காணன்மார் எமரே!
பிரிவிடைத் தலைவியது அருமை கண்டு
தூதுவிடக் கருதிய தோழிக்குத் தலைவி சொல்லியது.-
உலோச்சனார்
மிளகு பெய்தனைய சுவைய புன் காய்
உலறு தலை உகாஅய்ச் சிதர் சிதர்ந்து உண்ட
புலம்பு கொள் நெடுஞ் சினை ஏறி, நினைந்து, தன்
பொறி கிளர் எருத்தம் வெறி பட மறுகி,
புன் புறா உயவும் வெந் துகள் இயவின்,
நயந்த காதலற் புணர்ந்தனள் ஆயினும்,
சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தனகொல்லோ-
கோதை மயங்கினும், குறுந் தொடி நெகிழினும்,
காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும்,
மாண் நலம் கையறக் கலுழும் என்
மாயக் குறுமகள் மலர் ஏர் கண்ணே?
மனை மருட்சி.-இனிசந்த
நாகனார்
பல் கதிர் மண்டிலம் பகல் செய்து ஆற்றி,
சேய் உயர் பெரு வரைச் சென்று, அவண் மறைய,
பறவை பார்ப்புவயின் அடைய, புறவில்
மா எருத்து இரலை மடப் பிணை தழுவ,
முல்லை முகை வாய் திறப்ப, பல் வயின்
தோன்றி தோன்றுபு புதல் விளக்கு உறாஅ,
மதர்வை நல் ஆன் மாசு இல் தெண் மணி,
கொடுங் கோல் கோவலர் குழலோடு ஒன்றி,
ஐது வந்து இசைக்கும் அருள் இல் மாலை,
ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும்
வினை வலித்து அமைதல் ஆற்றலர்மன்னே!
வினைவயிற் பிரிதல்ஆற்றாளாய தலைவி
சொல்லியது.-சேகம்பூதனார்
சிறு வெள்ளாங்குருகே! சிறு வெள்ளாங்குருகே!
துறை போகு அறுவைத் தூ மடி அன்ன
நிறம் கிளர் தூவிச் சிறு வெள்ளாங்குருகே!
எம் ஊர் வந்து, எம் உண்துறைத் துழைஇ,
சினைக் கெளிற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி,
அனைய அன்பினையோ, பெரு மறவியையோ-
ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும்
கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என்
இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே!
காமம் மிக்க கழிபடர்கிளவி.-வெள்ளி
வீதியார்
வேனில் முருக்கின் விளை துணர் அன்ன
மாணா விரல வல் வாய்ப் பேஎய்
மல்லல் மூதூர் மலர்ப் பலி உணீஇய,
மன்றம் போழும் புன்கண் மாலை,
தம்மொடும் அஞ்சும் நம் இவண் ஒழியச்
மயிர் நிரைத்தன்ன வார் கோல் வாங்கு கதிர்ச்
செந்நெல்அம் செறுவின் அன்னம் துஞ்சும்
பூக் கெழு படப்பைச் சாய்க்காட்டு அன்ன என்
நுதற் கவின் அழிக்கும் பசலையும்,
அயலோர் தூற்றும் அம்பலும் அளித்தே.
செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட
தலைவி சொல்லியது.-மூலங்கீரனார்
வடிக் கதிர் திரித்த வல் ஞாண்பெரு வலை
இடிக் குரற் புணரிப் பௌவத்து இடுமார்,
நிறையப் பெய்த அம்பி, காழோர்
சிறை அருங் களிற்றின், பரதவர் ஒய்யும்
சிறு வீ ஞாழற் பெருங் கடற் சேர்ப்பனை,
'ஏதிலாளனும்' என்ப; போது அவிழ்
புது மணற் கானல் புன்னை நுண் தாது,
கொண்டல் அசை வளி தூக்குதொறும், குருகின்
வெண் புறம் மொசிய வார்க்கும், தெண் கடல்
பெண்டு' என அறிந்தன்று; பெயர்த்தலோ அரிதே!
தலைவி பாணற்கு
வாயில்மறுத்தது.-உலோச்சனார்
கண்ணும், தோளும், தண் நறுங்கதுப்பும்,
திதலை அல்குலும் பல பாராட்டி,
நெருநலும் இவணர் மன்னே! இன்றே,
பெரு நீர் ஒப்பின் பேஎய் வெண் தேர்
மரன் இல் நீள் இடை மான் நசையுறூஉம்,
சுடுமண் தசும்பின் மத்தம் தின்ற
பிறவா வெண்ணெய் உருப்பு இடந்தன்ன
உவர் எழு களரி ஓமை அம் காட்டு,
வெயில் வீற்றிருந்த வெம்பு அலை அருஞ் சுரம்
ஏகுவர் என்ப, தாமே-தம்வயின்
இல்லின் வாழ்க்கை வல்லாதோரே.
பிரிவிடை ஆற்றாளாய தலைவி
தோழிக்குச் சொல்லியது.
உள் ஊர் மா அத்த முள் எயிற்று வாவல்
ஓங்கல்அம் சினைத் தூங்கு துயில் பொழுதின்,
வெல் போர்ச் சோழர் அழிசிஅம் பெருங் காட்டு
நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு,
அது கழிந்தன்றே-தோழி!-அவர் நாட்டுப்
பனி அரும்பு உடைந்த பெருந் தாட் புன்னை
துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும்
சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும்,
பெருந் தண் கானலும், நினைந்த அப் பகலே.
வரைவிடை வைத்துப்பிரிய ஆற்றாளாய
தலைவி கனாக் கண்டு, தோழிக்கு
உரைத்தது.-நக்கண்ணையார்
நோய் அலைக் கலங்கிய மதன் அழி பொழுதில்,
காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்;
யானே, பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி-
கை வல் கம்மியன் கவின் பெறக் கழாஅ
மண்ணாப் பசு முத்து ஏய்ப்ப, குவி இணர்ப்
புன்னை அரும்பிய புலவு நீர்ச் சேர்ப்பன்
என்ன மகன்கொல்-தோழி!-தன்வயின்
மார்பு அணங்குறுநரை அறியாதோனே!
தலைமகன்சிறைப்புறமாக, தலைவி,
தோழிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது.-இளந்திரையனார்
'இதுவே, நறு வீ ஞாழல் மா மலர்தாஅய்,
புன்னை ததைந்த வெண் மணல் ஒரு சிறை,
புதுவது புணர்ந்த பொழிலே; உதுவே,
பொம்மற் படு திரை நம்மோடு ஆடி,
புறம் தாழ்பு இருளிய பிறங்குகுரல் ஐம்பால்
துவரினர் அருளிய துறையே; அதுவே,
கொடுங் கழி நிவந்த நெடுங் கால் நெய்தல்
அம் பகை நெறித் தழை அணி பெறத் தைஇ,
தமியர் சென்ற கானல்' என்று ஆங்கு
உள்ளுதோறு உள்ளுதோறு உருகி,
பைஇப் பையப் பசந்தனை பசப்பே.
சிறைப்புறமாகத்தோழி தலைவிக்கு
உரைப்பாளாய் வரைவு கடாயது.-கோக்குளமுற்றனார்
அழுந்து படு விழுப் புண் வழும்பு வாய்புலரா
எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்தாங்கு,
பிரிவில புலம்பி நுவலும் குயிலினும்,
தேறு நீர் கெழீஇய யாறு நனி கொடிதே;
அதனினும் கொடியள் தானே, 'மதனின்
துய்த் தலை இதழ பைங் குருக்கத்தியொடு
பித்திகை விரவு மலர் கொள்ளீரோ?' என
வண்டு சூழ் வட்டியள் திரிதரும்
தண்டலை உழவர் தனி மட மகளே.
பருவம் கண்டு ஆற்றாளாய தலைவி
தோழிக்கு உரைத்தது.-மாறன் வழுதி
கொடுங் குரற் குறைத்த செவ் வாய்ப்பைங் கிளி!
அஞ்சல் ஓம்பி, ஆர் பதம் கொண்டு,
நின் குறை முடித்த பின்றை, என் குறை
செய்தல்வேண்டுமால்; கை தொழுது இரப்பல்;
பல் கோட் பலவின் சாரல் அவர் நாட்டு,
நின் கிளை மருங்கின், சேறிஆயின்,
அம் மலை கிழவோற்கு உரைமதி-இம் மலைக்
காமம் மிக்க
கழிபடர்கிளவி.-செம்பியனார்
பூம் பொறி உழுவைப் பேழ் வாய்ஏற்றை
தேம் கமழ் சிலம்பின் களிற்றொடு பொரினே,
துறுகல் மீமிசை, உறுகண் அஞ்சாக்
குறக் குறுமாக்கள் புகற்சியின் எறிந்த
தொண்டகச் சிறு பறைப் பாணி அயலது
பைந் தாள் செந்தினைப் படு கிளி ஓப்பும்
ஆர் கலி வெற்பன் மார்பு நயந்து உறையும்
யானே அன்றியும் உளர்கொல்-பானாள்,
பாம்புடை விடர ஓங்கு மலை மிளிர,
உருமு சிவந்து எறியும் பொழுதொடு, பெரு நீர்
போக்கு அற விலங்கிய சாரல்,
நோக்கு அருஞ் சிறு நெறி நினையுமோரே?
தலைவி ஆறுபார்த்து உற்ற அச்சத்தால்
சொல்லியது.-பேரி சாத்தனார்
உள்ளுதொறும் நகுவேன்-தோழி!-வள்உகிர்ப்
பிடி பிளந்திட்ட நார் இல் வெண் கோட்டுக்
கொடிறு போல் காய வால் இணர்ப் பாலை,
செல் வளி தூக்கலின், இலை தீர் நெற்றம்
கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும்,
புல் இலை ஓமைய, புலி வழங்கு அத்தம்
சென்ற காதலர்வழி வழிப்பட்ட
நெஞ்சே நல்வினைப்பாற்றே; ஈண்டு ஒழிந்து,
யானே, தோழி! நோய்ப்பாலேனே.
பிரிவிடை மெலிந்த தலைவி தோழிக்குச்
சொல்லியது
'ஒன்றுதும்' என்ற தொன்று படு நட்பின்
காதலர் அகன்றென, கலங்கிப் பேதுற்று,
'அன்னவோ, இந் நன்னுதல் நிலை?' என,
வினவல் ஆனாப் புனையிழை! கேள், இனி
உரைக்கல் ஆகா எவ்வம்; இம்மென
இரைக்கும் வாடை இருள் கூர் பொழுதில்,
துளியுடைத் தொழுவின் துணிதல் அற்றத்து,
உச்சிக் கட்டிய கூழை ஆவின்
உலமர, கழியும், இப் பகல் மடி பொழுதே!
பிரிவிடை ஆற்றாளாய தலைமளது
நிலைகண்ட தோழிக்குத் தலைமகள்சொல்லியது.-மீளிப்
பெரும்பதுமனார்
'தீமை கண்டோர் திறத்தும்பெரியோர்
தாம் அறிந்து உணர்க' என்பமாதோ;
வழுவப் பிண்டம் நாப்பண் ஏமுற்று,
இரு வெதிர் ஈன்ற வேல் தலைக் கொழு முளை,
சூல் முதிர் மடப் பிடி, நாள் மேயல் ஆரும்
மலை கெழு நாடன் கேண்மை, பலவின்
மாச் சினை துறந்த கோள் முதிர் பெரும் பழம்
விடர் அளை வீழ்ந்து உக்காஅங்கு, தொடர்பு அறச்
சேணும் சென்று உக்கன்றே அறியாது
ஏ கல் அடுக்கத்து இருள் முகை இருந்த
குறிஞ்சி நல் ஊர்ப் பெண்டிர்
இன்னும் ஓவார், என் திறத்து அலரே!
வரைவு நீட்டிப்ப ஆற்றாளாய தலைவி
தோழிக்கு வன்புறை எதிரழிந்து
சொல்லியது.-கந்தரத்தனார்
பெருங் கடல் முழங்க, கானல் மலர,
இருங் கழி ஓதம் இல் இறந்து மலிர,
வள் இதழ் நெய்தல் கூம்ப, புள் உடன்
கமழ் பூம் பொதும்பர்க் கட்சி சேர,
செல் சுடர் மழுங்கச் சிவந்து வாங்கு மண்டிலம்
கல் சேர்பு நண்ணிப் படர் அடைபு நடுங்க,
புலம்பொடு வந்த புன்கண் மாலை
அன்னர் உன்னார் கழியின், பல் நாள்
வாழலென்-வாழி, தோழி!-என்கண்
பழி பிறிதாகல் பண்புமார் அன்றே.
வரைவு நீட ஆற்றாளாய தலைவி வன்புறை
எதிரழிந்து சொல்லியது;
சிறைப்புறமும்ஆம்.-குன்றியனார்
அடைகரை மாஅத்து அலங்கு சினை பொலியத்
தளிர் கவின் எய்திய தண் நறும் பொதும்பில்,
சேவலொடு கெழீஇய செங் கண் இருங் குயில்
புகன்று எதிர் ஆலும் பூ மலி காலையும்,
'அகன்றோர்மன்ற நம் மறந்திசினோர்' என,
இணர் உறுபு, உடைவதன்தலையும் புணர்வினை
ஓவ மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய
துகிலிகை அன்ன, துய்த் தலைப் பாதிரி
வால் இதழ் அலரி வண்டு பட ஏந்தி,
புது மலர் தெருவுதொறு நுவலும்
நொதுமலாட்டிக்கு நோம், என் நெஞ்சே!
பருவம் கண்டு ஆற்றாளாய தலைவி
சொல்லியது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ
'பகல் எரி சுடரின் மேனி சாயவும்,
பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும்
எனக்கு நீ உரையாயாயினை; நினக்கு யான்
உயிர் பகுத்தன்ன மாண்பினேன் ஆகலின்,
அது கண்டிசினால் யானே' என்று, நனி
அழுதல் ஆன்றிசின்-ஆயிழை!-ஒலி குரல்
ஏனல் காவலினிடை உற்று ஒருவன்,
கண்ணியன், கழலன், தாரன், தண்ணெனச்
சிறு புறம் கவையினனாக, அதற்கொண்டு
இஃது ஆகின்று, யான் உற்ற நோயே.
குறை நேர்ந்த தோழி தலைவி குறை
நயப்பக் கூறியது. தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றதூஉம்
ஆம்.- நற்சேந்தனாா
வடு இன்று நிறைந்த மான் தேர்த்தெண் கண்
மடிவாய்த் தண்ணுமை நடுவண் ஆர்ப்ப,
கோலின் எறிந்து காலைத் தோன்றிய
செந் நீர்ப் பொது வினைச் செம்மல் மூதூர்த்
தமது செய் வாழ்க்கையின் இனியது உண்டோ?
எனை விருப்புடையர் ஆயினும், நினைவிலர்;
நேர்ந்த நெஞ்சும் நெகிழ்ந்த தோளும்
வாடிய வரியும் நோக்கி, நீடாது,
'எவன் செய்தனள், இப் பேர் அஞர் உறுவி?' என்று
ஒரு நாள் கூறின்றுமிலரே; விரிநீர்
எவ்வ நோய்; பிறிது உயவுத் துணை இன்றே.
பிரிவிடை மெலிந்த தலைவி வன்புறை
எதிரழிந்து சொல்லியது.- நெய்தல்தத்தனார்
'தோளே தொடி கொட்பு ஆனா; கண்ணே
வாள் ஈர் வடியின் வடிவு இழந்தனவே;
நுதலும் பசலை பாயின்று-திதலைச்
சில் பொறி அணிந்த பல் காழ் அல்குல்
மணி ஏர் ஐம்பால் மாயோட்கு' என்று,
வெவ் வாய்ப் பெண்டிர் கவ்வை தூற்ற,
நாம் உறு துயரம் செய்யலர் என்னும்-
காமுறு தோழி!-காதல்அம் கிளவி,
இரும்பு செய் கொல்லன் வெவ் உலைத் தெளித்த
நோய் மலி நெஞ்சிற்கு ஏமம் ஆம் சிறிதே.
வரைவிடை வைத்துப்பிரிவு ஆற்றாளாய
தலைவி வற்புறுத்தும்
தோழிக்குச்சொல்லியது.-நற்றமனார்
பெருங் களிறு உழுவை தாக்கலின், இரும் பிடி
கருவி மா மழையின் அரவம் அஞ்சுபு,
போது ஏர் உண் கண் கலுழவும், ஏதில்
ஈங்கு ஆகின்றால்-தோழி!-பகுவாய்ப்
பிணவுப் புலி வழங்கும் அணங்கு அருங் கவலை,
அவிர் அறல் ஒழுகும் விரை செலல் கான் யாற்றுக்
கரை அருங் குட்டம் தமியர் நீந்தி,
இரவின் வருதல் அறியாதேற்கே.
ஆற்றது ஏதத்திற்குக்கவன்று
சிறைப்புறமாகத் தலைவி சொல்லியது.-கச்சிப்பேட்டுப்
பெருந்தச்சனார்
குண கடல் முகந்து, குடக்கு ஏர்பு இருளி,
மண் திணி ஞாலம் விளங்க, கம்மியர்
செம்பு சொரி பானையின் மின்னி, எவ் வாயும்
தன் தொழில் வாய்த்த இன் குரல் எழிலி
தென்புல மருங்கில் சென்று அற்றாங்கு,
நெஞ்சம் அவர்வயின் சென்றென, ஈண்டு ஒழிந்து,
உண்டல் அளித்து என் உடம்பே-விறல் போர்
வெஞ் சின வேந்தன் பகை அலைக் கலங்கி,
வாழ்வோர் போகிய பேர் ஊர்ப்
பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே.
பிரிவிடை மெலிந்த தலைவி
சொல்லியது.-தனிமகனார்
நீயே, அடி அறிந்து ஒதுங்கா ஆர் இருள் வந்து, எம்
கடியுடை வியல் நகர்க் காவல் நீவியும்,
பேர் அன்பினையே-பெருங் கல் நாட!-
யாமே, நின்னும் நின் மலையும் பாடி, பல் நாள்
சிறு தினை காக்குவம் சேறும்; அதனால்,
பகல் வந்தீமோ, பல் படர் அகல!
எருவை நீடிய பெரு வரைச் சிறுகுடி
அரியல் ஆர்ந்தவர் ஆயினும், பெரியர்;
பாடு இமிழ் விடர் முகை முழங்க,
ஆடு மழை இறுத்தது, எம் கோடு உயர் குன்றே.
இரவுக்குறி மறுத்தது.-கண்ணங்
கொற்றனார்
'கற்றை ஈந்தின் முற்றுக் குலை அன்ன
ஆள் இல் அத்தத் தாள் அம் போந்தைக்
கோளுடை நெடுஞ் சினை ஆண் குரல் விளிப்பின்,
புலி எதிர் வழங்கும் வளி வழங்கு ஆர் இடைச்
சென்ற காதலர் வந்து, இனிது முயங்கி,
பிரியாது ஒரு வழி உறையினும், பெரிது அழிந்து
உயங்கினை, மடந்தை!' என்றி-தோழி!-
அற்றும் ஆகும், அஃது அறியாதோர்க்கே;
வீழாக் கொள்கை வீழ்ந்த கொண்டி
புல்லு மற்று எவனோ அன்பு இலங்கடையே?
வினை முற்றி வந்து எய்திய காலத்து,
ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறீஇ நின்றாட்கு அவள்
சொல்லியது.
பரந்து படு கூர் எரி கானம் நைப்ப,
மரம் தீயுற்ற மகிழ் தலைஅம் காட்டு
ஒதுக்கு அரும் வெஞ் சுரம் இறந்தனர் மற்றவர்;
குறிப்பின் கண்டிசின் யானே; நெறிப் பட,
வேலும் இலங்கு இலை துடைப்ப; பலகையும்
பீலி சூட்டி மணி அணிபவ்வே;
பண்டினும் நனி பல அளிப்ப; இனியே
வந்தன்று போலும்-தோழி!-நொந்து நொந்து,
அழிதரு வெள்ளம் நீந்தும் நாளே.
செலவுக் குறிப்பு அறிந்த தலைமகள்
தோழிக்கு உரைத்தது.
கல் சேர் மண்டிலம் சிவந்து நிலம் தணிய,
நெய்தல் கூம்ப, நிழல் குணக்கு ஒழுக,
பல் பூங் கானலும் அல்கின்றன்றே;
இன மணி ஒலிப்ப, பொழுது படப் பூட்டி,
மெய்ம் மலி காமத்து யாம் தொழுது ஒழிய,
தேரும் செல் புறம் மறையும்; ஊரொடு
யாங்கு ஆவதுகொல் தானே-தேம் பட
ஊது வண்டு இமிரும் கோதை மார்பின்,
மின் இவர் கொடும் பூண், கொண்கனொடு
இன் நகை மேவி, நாம் ஆடிய பொழிலே?
தலைமகன் பகற்குறி வந்து மீள்வானது
செலவு நோக்கி, தலைமகள் தன்னுள்ளே சொல்லுவாளாய்ச்
சொல்லியது.-ஒளவையார்
அட்டரக்கு உருவின் வட்டு முகை ஈங்கைத்
துய்த் தலைப் புது மலர்த் துளி தலைக் கலாவ,
நிறை நீர்ப் புனிற்றுப் புலம் துழைஇ, ஆனாய்,
இரும் புறம் தழூஉம் பெருந் தண் வாடை!
நினக்குத் தீது அறிந்தன்றோ இலமே;
பணைத் தோள் எல் வளை ஞெகிழ்த்த எம் காதலர்
அருஞ் செயல் பொருட் பிணிப் பிரிந்தனராக,
யாரும் இல் ஒரு சிறை இருந்து,
பேர் அஞர் உறுவியை வருத்தாதீமே!
பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள்
சொல்லியது.
பளிங்கு செறிந்தன்ன பல் கதிர் இடைஇடை,
பால் முகந்தன்ன பசு வெண் நிலவின்,
மால்பு இடர் அறியா, நிறையுறு மதியம்!
சால்பும் செம்மையும் உடையை ஆதலின்,
நிற் கரந்து உறையும் உலகம் இன்மையின்,
எற் கரந்து உறைவோர் உள்வழி காட்டாய்!
நற் கவின் இழந்த என் தோள் போல் சாஅய்,
அறி கரி பொய்த்தலின், ஆகுமோ அதுவே?
நெட்டிடை கழிந்து பொருள்வயிற்
பிரிந்த காலத்து, ஆற்றாளாகிய தலைமகள் திங்கள் மேலிட்டுத்
தன்னுள்ளே சொல்லியது.-வெள்ளைக்குடி நாகனார்
ஓங்கு மணல் உடுத்த நெடு மாப் பெண்ணை
வீங்கு மடல் குடம்பைப் பைதல் வெண் குருகு,
நள்ளென் யாமத்து, உயவுதோறு உருகி,
அள்ளல் அன்ன என் உள்ளமொடு உள் உடைந்து,
உளெனே-வாழி, தோழி! வளை நீர்க்
கடுஞ் சுறா எறிந்த கொடுந் திமிற் பரதவர்
வாங்கு விசைத் தூண்டில் ஊங்குஊங்கு ஆகி,
வளி பொரக் கற்றை தாஅய், நளி சுடர்,
நீல் நிற விசும்பின் மீனொடு புரைய,
மெய் தோய் முயக்கம் காணா ஊங்கே!
வன்புறை எதிரழிந்தது.-பேரி
சாத்தனார்
இசை பட வாழ்பவர் செல்வம் போலக்
காண் தொறும் பொலியும், கதழ் வாய் வேழம்,
இருங் கேழ் வயப் புலி வெரீஇ, அயலது
கருங் கால் வேங்கை ஊறுபட மறலி,
பெருஞ் சினம் தணியும் குன்றநாடன்
நனி பெரிது இனியனாயினும், துனி படர்ந்து
புலவி உணர்த்தல் வன்மையானே.
தலைமகள் வாயில்
மறுத்தது.-கபிலர்.
ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்றே;
எல்லியும், பூ வீ கொடியின் புலம்பு அடைந்தன்றே;
வாவலும் வயின்தொறும் பறக்கும்; சேவலும்
நகை வாய்க் கொளீஇ நகுதொறும் விளிக்கும்;
ஆயாக் காதலொடு அதர்ப் படத் தெளித்தோர்
கூறிய பருவம் கழிந்தன்று; பாரிய
பராரை வேம்பின் படு சினை இருந்த
குராஅற் கூகையும் இராஅ இசைக்கும்;
ஆனா நோய் அட வருந்தி, இன்னும்
தமியேன் கேட்குவென் கொல்லோ,
பரியரைப் பெண்ணை அன்றிற் குரலே?
வரைவிடை மெலிந்த தலைமகள் வன்புறை
எதிர்மொழிந்தது.கிடங்கில் - காவிதிக்
கீரங்கண்ணனார்
கண்ணும் தோளும் தண் நறுங் கதுப்பும்
இன் உயிர் பெரும்பிறிது ஆயினும், என்னதூஉம்
புலவேன் வாழி-தோழி!-சிறு கால்
அலவனொடு பெயரும் புலவுத் திரை நளி கடல்
பெரு மீன் கொள்ளும் சிறுகுடிப் பரதவர்
கங்குல் மாட்டிய கனை கதிர் ஒண் சுடர்
முதிரா ஞாயிற்று எதிர் ஒளி கடுக்கும்
கானல்அம் பெருந் துறைச் சேர்ப்பன்-
வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாளாய
தலைமகள் தோழிக்குச் சொல்லியது.-தாயங்கண்ணனார்
அன்பினர், மன்னும் பெரியர்; அதன்தலை,
'பின்பனி அமையம் வரும்' என, முன்பனிக்
கொழுந்து முந்துறீஇக் குரவு அரும்பினவே;
'புணர்ந்தீர் புணர்மினோ' என்ன, இணர்மிசைச்
செங் கண் இருங் குயில் எதிர் குரல் பயிற்றும்
இன்ப வேனிலும் வந்தன்று; நம்வயின்
'பிரியலம்' என்று, தெளித்தோர் தேஎத்து,
இனி எவன் மொழிகோ, யானே-கயன் அறக்
கண் அழிந்து உலறிய பல் மர நெடு நெறி
வெம் முனை அருஞ் சுரம் முன்னியோர்க்கே?
தோழியால் பிரிவு உணர்த்தப்பட்ட
தலைமகள் பெயர்த்தும் சொல் கடாவப்பட்டு,'அறிவிலாதேம் என்னை
சொல்லியும், பிரியார் ஆகாரோ?' என்று சொல்லியது.-பாலை
பாடிய பெருங்கடுங்கோ
முருகு உறழ் முன்பொடு கடுஞ் சினம் செருக்கிப்
பொருத யானை வெண் கோடு கடுப்ப,
வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை,
மெல் இயல் மகளிர் ஓதி அன்ன
பூவொடு, துயல் வரும் மால் வரை நாடனை
இரந்தோர் உளர்கொல்-தோழி!-திருந்து இழைத்
தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்பப்
நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே?
வன்புறை எதிர் அழிந்தது; பரத்தை
தலைமகட்குப் பாங்காயின வாயில் கேட்பச் சொல்லியதூஉம்
ஆம்.-கபிலர்
மரம் சா மருந்தும் கொள்ளார், மாந்தர்;
உரம் சாச் செய்யார், உயர்தவம்; வளம் கெடப்
பொன்னும் கொள்ளார், மன்னர்-நன்னுதல்!-
நாம் தம் உண்மையின் உளமே; அதனால்
தாம் செய்பொருள் அளவு அறியார்; தாம் கசிந்து,
என்றூழ் நிறுப்ப, நீள் இடை ஒழிய,
சென்றோர்மன்ற நம் காதலர்; என்றும்
என்னோரும் அறிப, இவ் உலகத்தானே.
பிரிவிடை மெலிந்த தலைமகள் வன்புறை
எதிர்மொழிந்தது.-கணி புன்குன்றனார்
நோயும் கைம்மிகப் பெரிதே; மெய்யும்
தீ உமிழ் தெறலின் வெய்தாகின்றே-
ஒய்யெனச் சிறிது ஆங்கு உயிரியர், 'பையென
முன்றில் கொளினே நந்துவள் பெரிது' என,
நிரைய நெஞ்சத்து அன்னைக்கு உய்த்து ஆண்டு
உரை, இனி-வாழி, தோழி!-புரை இல்
நுண் நேர் எல் வளை நெகிழ்த்தோன் குன்றத்து
அண்ணல் நெடு வரை ஆடி, தண்ணென
வியல் அறை மூழ்கிய வளி என்
பயலை ஆகம் தீண்டிய, சிறிதே.
தலைமகன் சிறைப்புறமாக,
வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.-நம்பி
குட்டுவன்
வறம் கொல வீந்த கானத்து, குறும் பூங்
கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்ப,
வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம்,
மாலை அந்தி, மால் அதர் நண்ணிய
பருவம் செய்த கருவி மா மழை!
'அவர் நிலை அறியுமோ, ஈங்கு' என வருதல்
சான்றோர்ப் புரைவதோ அன்றே; மான்று உடன்
உர உரும் உரறும் நீரின், பரந்த
பாம்பு பை மழுங்கல் அன்றியும், மாண்ட
இனிய அல்ல, நின் இடி நவில் குரலே.
தலைமகள் பருவம் கண்டு
அழிந்தது.-கந்தரத்தனார்
ஐதே கம்ம, இவ் உலகு படைத்தோனே-
வை ஏர் வால் எயிற்று ஒள் நுதற் குறுமகள்
கை கவர் முயக்கம் மெய் உறத் திருகி,
ஏங்கு உயிர்ப்பட்ட வீங்கு முலை ஆகம்
துயில் இடைப்படூஉம் தன்மையதுஆயினும்,
வெயில் வெய்துற்ற பரல் அவல் ஒதுக்கில்,
கணிச்சியில் குழித்த கூவல் நண்ணி,
ஆன் வழிப் படுநர் தோண்டிய பத்தல்
கானம் திண்ணிய மலை போன்றிசினே.
பிரிவிடை மெலிந்த தலைமகள்
சொல்லியது; நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டு ஆற்றானாய
தலைமகன் சொல்லியதூஉம் ஆம்.-நப்பாலத்தனார்
உள்ளார்கொல்லோ-தோழி!-கொடுஞ் சிறைப்
புள் அடி பொறித்த வரியுடைத் தலைய
நீர் அழி மருங்கின் ஈர் அயிர் தோன்ற,
வளரா வாடை உளர்பு நனி தீண்டலின்,
வேழ வெண் பூ விரிவன பலவுடன்,
வேந்து வீசு கவரியின், பூம் புதல் அணிய,
மழை கழி விசும்பின் மாறி ஞாயிறு
விழித்து இமைப்பது போல் விளங்குபு மறைய,
எல்லை போகிய பொழுதின் எல் உற,
பனிக்கால் கொண்ட பையுள் யாமத்து,
நில்லாப் பொருட்பிணிப் பிரிந்திசினோரே?
தலைமகள் வன்புறை எதிர்
அழிந்தது.-மதுரைப் பெருமருதனார்
தேம் படு சிலம்பில் தெள் அறல் தழீஇய
துறுகல் அயல தூ மணல் அடைகரை,
அலங்கு சினை பொதுளிய நறு வடி மாஅத்துப்
பொதும்புதோறு அல்கும் பூங் கண் இருங் குயில்,
'கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கை இட்டு
அகறல் ஓம்புமின், அறிவுடையீர்!' என,
கையறத் துறப்போர்க் கழறுவ போல,
மெய் உற இருந்து மேவர நுவல,
இன்னாது ஆகிய காலை, பொருள்வயிற்
பிரியல் ஆடவர்க்கு இயல்பு எனின்,
அரிது மன்றம்ம, அறத்தினும் பொருளே?
பிரிவிடை மெலிந்த தலைமகள்
சொல்லியது.-காமக்கணிப் பசலையார்
விழுந்த மாரிப் பெருந் தண் சாரல்,
கூதிர்க் கூதளத்து அலரி நாறும்
மாதர் வண்டின் நயவரும் தீம் குரல்
மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும்
உயர் மலை நாடற்கு உரைத்தல் ஒன்றோ-
துயர் மருங்கு அறியா அன்னைக்கு, இந் நோய்
தணியுமாறு இது' என உரைத்தல் ஒன்றோ-
செய்யாய்: ஆதலின் கொடியை-தோழி!-
மணி கெழு நெடு வரை அணி பெற நிவந்த
செயலை அம் தளிர் அன்ன, என்
மதன் இல் மா மெய்ப் பசலையும் கண்டே.
அறத்தொடுநிலை வலித்த தோழியைத்
தலைவி முகம் புக்கது.-கூற்றங்குமரனார்
இரும்பின் அன்ன கருங் கோட்டுப் புன்னை
நீலத்து அன்ன பாசிலை அகம்தொறும்,
வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண்
பொன்னின் அன்ன நறுந் தாது உதிர,
புலிப் பொறிக் கொண்ட பூ நாறு குரூஉச் சுவல்
வரி வண்டு ஊதலின், புலி செத்து வெரீஇ,
பரியுடை வயங்கு தாள் பந்தின் தாவத்
தாங்கவும் தகை வரை நில்லா ஆங்கண்,
மல்லல்அம் சேரி கல்லெனத் தோன்றி,
சென்றது அன்றோ, கொண்கன் தேரே?
வரைவிடை
மெலிந்தது.-உலோச்சனார்
கழுது கால் கிளர ஊர் மடிந்தன்றே;
உரு கெழு மரபின் குறிஞ்சி பாடி,
கடியுடை வியல் நகர்க் கானவர் துஞ்சார்;
வயக் களிறு பொருத வாள் வரி உழுவை
கல் முகைச் சிலம்பில் குழுமும்; அன்னோ!-
மென் தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும், இன்று அவர்
வாரார்ஆயினோ நன்றுமன்தில்ல-
உயர் வரை அடுக்கத்து ஒளிறுபு மின்னிப்
பெயல் கால்மயங்கிய பொழுது கழி பானாள்,
திருமணி அரவுத் தேர்ந்து உழல,
உருமுச் சிவந்து எறியும் ஓங்கு வரை ஆறே!
ஆறு பார்த்து உற்றது.-ஆலம்பேரி
சாத்தனார்
கழுநீர் மேய்ந்த கருந் தாள் எருமை
பழனத் தாமரைப் பனிமலர் முணைஇ,
தண்டு சேர் மள்ளரின் இயலி, அயலது
குன்று சேர் வெண் மணல் துஞ்சும் ஊர!
வெய்யை போல முயங்குதி: முனை எழத்
தெவ்வர்த் தேய்த்த செவ் வேல் வயவன்
மலி புனல் வாயில் இருப்பை அன்ன, என்
ஒலி பல் கூந்தல் நலம் பெறப் புனைந்த
பகைவன்மன்? யான் மறந்து அமைகலனே!
ஊடல் மறுத்த தலைமகள்
சொல்லியது.-பரணர்
கடல்அம் காக்கைச் செவ் வாய்ச் சேவல்,
படிவ மகளிர் கொடி கொய்து அழித்த
பொம்மல் அடும்பின் வெண் மணல் ஒரு சிறை,
கடுஞ் சூல் வதிந்த காமர் பேடைக்கு,
இருஞ் சேற்று அயிரை தேரிய, தெண் கழிப்
பூஉடைக் குட்டம் துழவும் துறைவன்
பெருங் கையற்ற என் சிறுமை, பலர் வாய்
நோய் ஆகின்று; அது நோயினும் பெரிதே.
வரையாது நெடுங்காலம் வந்தொழுக
ஆற்றாளாய தலைமகள் சொல்லியது; தோழி தலைமகளுக்குச்
சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச் சொல்லியதூஉம் ஆம்.-முக்கல்
ஆசான் நல்வெள்ளையார்
செந்நெல் அரிநர் கூர் வாட் புண்ணுறக்
காணார் முதலொடு போந்தென, பூவே
படையொடும் கதிரொடும் மயங்கிய படுக்கைத்
தன்னுறு விழுமம் அறியா, மென்மெல,
தெறு கதிர் இன் துயில் பசு வாய் திறக்கும்
பேதை நெய்தற் பெரு நீர்ச் சேர்ப்பதற்கு
யான் நினைந்து இரங்கேனாக, நோய் இகந்து,
பெறினும், வல்லேன்மன்-தோழி!-யானே.
சிறைப்புறமாகத் தலைமகனது
வரவுணர்ந்து வற்புறுப்ப, வன்புறை
எதிர்மொழிந்தது.-அம்மூவனார்
கொடியை; வாழி-தும்பி!- இந் நோய்
படுகதில் அம்ம, யான் நினக்கு உரைத்தென;
மெய்யே கருமை அன்றியும், செவ்வன்
அறிவும் கரிதோ-அறனிலோய்!-நினக்கே?
மனை உறக் காக்கும் மாண் பெருங் கிடக்கை
நுண் முள் வேலித் தாதொடு பொதுளிய
தாறு படு பீரம் ஊதி, வேறுபட
நாற்றம் இன்மையின், பசலை ஊதாய்:
சிறு குறும் பறவைக்கு ஓடி, விரைவுடன்
நெஞ்சு நெகிழ் செய்ததன் பயனோ? அன்பு இலர்,
வெம் மலை அருஞ் சுரம் இறந்தோர்க்கு
என் நிலை உரையாய், சென்று, அவண் வரவே.
பட்ட பின்றை வரையாது, கிழவோன்
நெட்டிடைக் கழிந்து பொருள்வயிற் பிரிய,ஆற்றளாகிய தலைமகள்
தும்பிக்குச் சொல்லியது.-தும்பி சேர் கீரனார்
'கொக்கினுக்கு ஒழிந்த தீம் பழம், கொக்கின்
கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பல்
தூங்கு நீர்க் குட்டத்து, துடுமென வீழும்
தண் துறை ஊரன் தண்டாப் பரத்தமை
புலவாய்' என்றி-தோழி!-புலவேன்-
பழன யாமைப் பாசடைப் புறத்து,
கழனி காவலர் சுரி நந்து உடைக்கும்,
தொன்று முதிர் வேளிர், குன்றூர் அன்ன என்
நல் மனை நனி விருந்து அயரும்
கைதூவு இன்மையின் எய்தாமாறே.
வாயில் வேண்டிச் சென்ற தோழிக்குத்
தலைமகள் மறுத்து மொழிந்தது; தலைமகனை ஏற்றுக்கொண்டு
வழிபட்டாளைப் புகழ்ந்து புக்க தோழிக்குத் தலைமகள்
சொல்லியதூஉம் ஆம்.- பரணர்
மாசு இல் மரத்த பலி உண் காக்கை
வளி பொரு நெடுஞ் சினை தளியொடு தூங்கி,
வெல் போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும்
நல் வகை மிகு பலிக் கொடையோடு உகுக்கும்
அடங்காச் சொன்றி, அம் பல் யாணர்
விடக்குடைப் பெருஞ் சோறு, உள்ளுவன இருப்ப,
மழை அமைந்து உற்ற மால் இருள் நடு நாள்,
தாம் நம் உழையராகவும், நாம் நம்
பனிக் கடுமையின், நனி பெரிது அழுங்கி,
அன்பிலர்-தோழி!-நம் காதலோரே.
வன்பொறை எதிர் அழிந்த தலைமகள்
தோழிக்குச் சொல்லியது; 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழி
தலைமகட்கு உரைத்ததூஉம் ஆம்.- கழார்க் கீரன்
எயிற்றியார்
'விசும்பு உறழ் புரிசை வெம்ப முற்றி,
பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்த;
நல் எயிலுடையோர் உடையம்' என்னும்
பெருந் தகை மறவன் போல-கொடுங் கழிப்
பாசடை நெய்தற் பனி நீர்ச் சேர்ப்பன்,
நாம முதலை நடுங்கு பகை அஞ்சான்,
காமம் பெருமையின், வந்த ஞான்றை-
அருகாது ஆகி அவன்கண் நெஞ்சம்
நள்ளென் கங்குல் புள் ஒலி கேட்டொறும்,
'தேர் மணித் தெள் இசைகொல்?' என,
ஊர் மடி கங்குலும் துயில் மறந்ததுவே.
காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய
தலைமகள் சொல்லியது.-உலோச்சனார்
நிலம் புடைபெயர்வதாயினும், கூறிய
சொல் புடைபெயர்தலோ இலரே; வானம்
நளி கடல் முகந்து, செறிதக இருளி,
கனை பெயல் பொழிந்து, கடுங் குரல் பயிற்றி,
கார் செய்து, என் உழையதுவே; ஆயிடை,
கொல்லைக் கோவலர் எல்லி மாட்டிய
அருள் இலேன் அம்ம; அளியேன் யானே.
பிரிவிடைப் பருவம் கண்டு
சொல்லியது.- மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன்
குமரனார்
என் ஆவதுகொல்? தோழி!-மன்னர்
வினை வல் யானைப் புகர் முகத்து அணிந்த
பொன் செய் ஓடைப் புனை நலம் கடுப்ப,
புழற் காய்க் கொன்றைக் கோடு அணி கொடி இணர்
ஏ கல் மீமிசை மேதக மலரும்,
பிரிந்தோர் இரங்கும் அரும் பெறல் காலையும்,
வினையே நினைந்த உள்ளமொடு துனைஇச்
ஒழிதும் என்ப நாம், வருந்து படர் உழந்தே.
தோழியால் பிரிவு உணர்த்தப்பட்ட
தலைமகள் சொல்லியது.- குதிரைத் தறியனார்
இழை அணி மகளிரின் விழைதகப் பூத்த
நீடு சுரி இணர சுடர் வீக் கொன்றைக்
காடு கவின் பூத்தஆயினும், நன்றும்
வரு மழைக்கு எதிரிய மணி நிற இரும் புதல்
நரை நிறம் படுத்த நல் இணர்த் தெறுழ் வீ
தாஅம் தேரலர்கொல்லோ-சேய் நாட்டு,
களிறு உதைத்து ஆடிய கவிழ் கண் இடு நீறு
வெளிறு இல் காழ வேலம் நீடிய
பழங்கண் முது நெறி மறைக்கும்,
வழங்கு அருங் கானம் இறந்திசினோரே?
பருவம் கழிந்தது கண்டு தலைமகள்
சொல்லியது.-மதுரை மருதன் இளநாகனார்
ஒலி அவிந்து அடங்கி, யாமம்
கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்றே;
தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை
மன்றப் பெண்ணை வாங்கு மடற் குடம்பைத்
துணை புணர் அன்றில் உயவுக் குரல் கேட்டொறும்,
'துஞ்சாக் கண்ணள், துயர் அடச் சாஅய்,
நம்வயின் வருந்தும், நன்னுதல்' என்பது
உண்டுகொல்?-வாழி, தோழி!-தெண் கடல்
வன் கைப் பரதவர் இட்ட செங் கோல்
கொடு முடி அவ் வலை பரியப் போக்கி,
கடு முரண் எறி சுறா வழங்கும்
நெடுநீர்ச் சேர்ப்பன்தன் நெஞ்சத்தானே.
வேட்கை தாங்ககில்லாளாய்த்
தோழிக்குத் தலைமகள் சொல்லியது;சிறைப்புறத்தான் என்பது
மலிந்ததூஉம் ஆம்.-மதுரை ஆருலவியநாட்டு ஆலம்பேரி
சாத்தனார்
வாரல் மென் தினைப் புலர்வுக் குரல் மாந்தி,
சாரல் வரைய கிளைஉடன் குழீஇ,
வளி எறி வயிரின் கிளி விளி பயிற்றும்
நளி இருஞ் சிலம்பின் நல் மலை நாடன்
புணரின், புணருமார் எழிலே; பிரியின்,
மணி மிடை பொன்னின் மாமை சாய, என்
அணி நலம் சிதைக்குமார் பசலை; அதனால்,
அசுணம் கொல்பவர் கை போல், நன்றும்,
இன்பமும் துன்பமும் உடைத்தே,
தண் கமழ் நறுந் தார் விறலோன் மார்பே.
வரையாது நெடுங்காலம் வந்தொழுக,
ஆற்றாளாகிய தலைமகள் வன்புறை எதிர் மொழிந்தது.-
மாறோக்கத்து நப்பசலையார்
நெகிழ்ந்த தோளும், வாடிய வரியும்,
தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கி,
'யான் செய்தன்று இவள் துயர்' என, அன்பின்
ஆழல்; வாழி!-தோழி!-'வாழைக்
கொழு மடல் அகல் இலைத் தளி தலைக் கலாவும்,
பெரு மலை நாடன் கேண்மை நமக்கே
விழுமமாக அறியுநர் இன்று' என,
தேறுவன்மன் யான், அவருடை நட்பே.
'வரைவு நீட ஆற்றாள்' எனக் கவன்று
தான் ஆற்றாளாகிய தோழியைத் தலைமகள்
ஆற்றுவித்தது.-கபிலர்
'முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார்;
வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை;
மாரிப் பித்திகத்து ஈர் இதழ் அலரி
நறுங் காழ் ஆரமொடு மிடைந்த மார்பில்,
குறும் பொறிக் கொண்ட கொம்மை அம் புகர்ப்பின்
கருங் கண் வெம் முலை ஞெமுங்கப் புல்லிக்
தாம் மொழி வன்மையின் பொய்த்தனர், வாழிய-
நொடி விடுவன்ன காய் விடு கள்ளி
அலங்கல்அம் பாவை ஏறி, புலம்பு கொள்
புன் புறா வீழ் பெடைப் பயிரும்
என்றூழ் நீளிடைச் சென்றிசினோரே!
பிரிவிடை மெலிந்த தலைமகள்
சொல்லியது.- முப்பேர் நாகனார்
நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின்,
பாடு இல கலுழும் கண்ணொடு சாஅய்ச்
சாதலும் இனிதே-காதல்அம் தோழி!-
அந் நிலை அல்லஆயினும், 'சான்றோர்
கடன் நிலை குன்றலும் இலர்' என்று, உடன் அமர்ந்து,
உலகம் கூறுவது உண்டு என, நிலைஇய
தாயம் ஆகலும் உரித்தே-போது அவிழ்
தண்ணம் துறைவன் சாயல் மார்பே.
வரையாது நெடுங்காலம் வந்தொழுக,
ஆற்றாளாய தலைமகள் வன்புறை எதிர் அழிந்
தது.-அம்மூவனார்
இகுளை தோழி! இஃது என் எனப்படுமோ-
'குவளை குறுநர் நீர் வேட்டாங்கு,
நாளும்நாள் உடன் கவவவும், தோளே
தொல் நிலை வழீஇய நின் தொடி' எனப் பல் மாண்
உரைத்தல் ஆன்றிசின், நீயே: விடர் முகை,
ஈன் பிணவு ஒடுக்கிய இருங் கேழ் வயப் புலி
இரை நசைஇப் பரிக்கும் மலைமுதல் சிறு நெறி,
தலைநாள் அன்ன பேணலன், பல நாள்,
ஆர் இருள் வருதல் காண்பேற்கு,
யாங்கு ஆகும்மே, இலங்கு இழை செறிப்பே?
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி
களவுக் காலத்து வற்புறுப்ப,தலைவி கூறியது; வன்புறை
எதிர்மறுத்ததூஉம் ஆம்.-குன்றூர்கிழார் மகன்
கண்ணத்தனார்
திங்களும் திகழ் வான் ஏர்தரும்; இமிழ் நீர்ப்
பொங்கு திரைப் புணரியும் பாடு ஓவாதே;
ஒலி சிறந்து ஓதமும் பெயரும்; மலி புனற்
பல் பூங் கானல் முள் இலைத் தாழை
சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ,
வளி பரந்து ஊட்டும் விளிவு இல் நாற்றமொடு
மை இரும் பனைமிசைப் பைதல உயவும்
அன்றிலும் என்புற நரலும்; அன்றி,
விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல் யாழ்
காமம் பெரிதே; களைஞரோ இலரே!
காமம் மிக்க கழிபடர்கிளவி
மிதூர்ந்து தலைமகள் சொல்லியது.- வெள்ளிவீதியார்
கடுங் கதிர் ஞாயிறு மலை மறைந்தன்றே;
அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து, அவர்
நெடுந் தேர் இன் ஒலி இரவும் தோன்றா;
இறப்ப எவ்வம் நலியும், நின் நிலை;
'நிறுத்தல் வேண்டும்' என்றி; நிலைப்ப
யாங்ஙனம் விடுமோ மற்றே!-மால் கொள
வியல் இரும் பரப்பின் இரை எழுந்து அருந்துபு,
புலவு நாறு சிறுகுடி மன்றத்து ஓங்கிய
ஆடு அரைப் பெண்ணைத் தோடு மடல் ஏறி,
கொடு வாய்ப் பேடைக் குடம்பைச் சேரிய,
உயிர் செலக் கடைஇப் புணர் துணைப்
பயிர்தல் ஆனா, பைதல்அம் குருகே?
ஒருவழித் தணந்த காலை ஆற்றாத
தலைமகள் வன்புறை எதிர்மொழிந்தது.-மதுரை ஆருலவிய நாட்டு
ஆலம்பேரி சாத்தனார்
புல்லேன், மகிழ்ந! புலத்தலும் இல்லேன்-
கல்லா யானைக் கடுந் தேர்ச் செழியன்
படை மாண் பெருங் குள மடை நீர் விட்டென,
கால் அணைந்து எதிரிய கணைக் கோட்டு வாளை
அள்ளல்அம் கழனி உள்வாய் ஓடி,
பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து,
செஞ் சால் உழவர் கோல் புடை மதரி,
பைங் காற் செறுவின் அணைமுதல் பிறழும்
கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும்மே!
பரத்தையிற் மறுத்தந்த தலைமகனைத்
தலைமகள் நொந்து சொல்லியது.-நக்கீரர்
முல்லை தாய கல் அதர்ச் சிறு நெறி
அடையாது இருந்த அம் குடிச் சீறூர்த்
தாது எரு மறுகின், ஆ புறம் தீண்டும்
நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து,
உகு பலி அருந்திய தொகு விரற் காக்கை
புன்கண் அந்திக் கிளைவயின் செறிய,
இல்லைகொல் வாழி-தோழி!-நத்துறந்து
அரும் பொருட் கூட்டம் வேண்டிப்
பிரிந்து உறை காதலர் சென்ற நாட்டே?
தலைமகள் பிரிவிடை ஆற்றாளாய்ச்
சொல்லியது.-கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார்
நிலவே, நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பி,
பால் மலி கடலின், பரந்து பட்டன்றே;
ஊரே, ஒலி வரும் சும்மையொடு மலிபு தொகுபு ஈண்டி,
கலி கெழு மறுகின், விழவு அயரும்மே;
கானே, பூ மலர் கஞலிய பொழில் அகம்தோறும்
தாம் அமர் துணையொடு வண்டு இமிரும்மே;
யானே, புனை இழை ஞெகிழ்த்த புலம்பு கொள் அவலமொடு
கனை இருங் கங்குலும் கண்படை இலெனே:
அதனால், என்னொடு பொரும்கொல், இவ் உலகம்?
உலகமொடு பொரும்கொல், என் அவலம் உறு நெஞ்சே?
வேட்கை பெருகத் தாங்கலளாய்,
ஆற்றாமை மீதூர்கின்றாள் சொல்லியது.-வெள்ளி
வீதியார்
வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ,
பழனப் பல் புள் இரிய, கழனி
வாங்கு சினை மருதத் தூங்குதுணர் உதிரும்
தேர் வண் விராஅன் இருப்பை அன்ன, என்
தொல் கவின் தொலையினும் தொலைக! சார
விடேஎன்: விடுக்குவென்ஆயின், கடைஇக்
கவவுக் கை தாங்கும் மதுகைய குவவு முலை
சாடிய சாந்தினை; வாடிய கோதையை;
வாரல்; வாழிய, கவைஇ நின்றோளே!
தலைமகள் ஊடல் மறுத்தாள்
சொல்லியது.-பரணர்
'பெருந் தோள் நெகிழ, அவ் வரி வாட,
சிறு மெல் ஆகம் பெரும் பசப்பு ஊர,
இன்னேம் ஆக, எற் கண்டு நாணி,
நின்னொடு தெளித்தனர் ஆயினும், என்னதூஉம்,
அணங்கல் ஓம்புமதி, வாழிய நீ!' என,
கணம் கெழு கடவுட்கு உயர் பலி தூஉய்,
பரவினம் வருகம் சென்மோ-தோழி!-
பெருஞ் சேயிறவின் துய்த் தலை முடங்கல்
சிறு வெண் காக்கை நாள் இரை பெறூஉம்
பசும் பூண் வழுதி மருங்கை அன்ன, என்
அரும் பெறல் ஆய் கவின் தொலைய,
பிரிந்து ஆண்டு உறைதல் வல்லியோரே.
பட்டபின்றை வரையாது பொருள்வயிற்
பிரிந்த காலத்து, தோழி, 'இவள் ஆற்றா ளாயினாள்; இவளை
இழந்தேன்' எனக் கவன்றாள் வற்புறுத்தது; அக் காலத்து ஆற்றா
ளாய் நின்ற தலைமகள் தோழிக்குச் சொல்லியதூஉம் ஆம்.-
நக்கீரர்
சொல்லிய பருவம் கழிந்தன்று; எல்லையும்
மயங்கு இருள் நடு நாள் மங்குலோடு ஒன்றி,
ஆர் கலி வானம் நீர் பொதிந்து இயங்க,
பனியின் வாடையொடு முனிவு வந்து இறுப்ப,
இன்ன சில் நாள் கழியின், பல் நாள்
உரும் இசை அறியாச் சிறு செந் நாவின்
ஈர் மணி இன் குரல் ஊர் நணி இயம்ப,
பல் ஆ தந்த கல்லாக் கோவலர்
கொன்றைஅம் தீம் குழல் மன்றுதோறு இயம்ப,
உயிர் செலத் துனைதரும் மாலை,
செயிர் தீர் மாரியொடு ஒருங்கு தலைவரினே.
தலைமகள் பிரிவிடை
மெலிந்தது.-கிடங்கில் காவிதிப் பெருங் கொற்றனார்
சுடர் சினம் தணிந்து குன்றம் சேர,
நிறை பறைக் குருகினம் விசும்பு உகந்து ஒழுக,
எல்லை பைபயக் கழிப்பி, முல்லை
அரும்பு வாய் அவிழும் பெரும் புன் மாலை
இன்றும் வருவது ஆயின், நன்றும்
அறியேன் வாழி-தோழி!-அறியேன்,
ஞெமை ஓங்கு உயர் வரை இமையத்து உச்சி,
வாஅன் இழிதரும் வயங்கு வெள் அருவிக்
கங்கைஅம் பேர் யாற்றுக் கரை இறந்து இழிதரும்
சிறை அடு கடும் புனல் அன்ன, என்
நிறை அடு காமம் நீந்துமாறே.
பட்ட பின்றை வரையாது பொருள்வயிற்
பிரிந்து, ஆற்றாளாகிய தலைமகள் வன்புறை எதிர்
அழிந்தது.-மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்
'அருந் துயர் உழத்தலின் உண்மை சான்ம்' எனப்
பெரும்பிறிது இன்மையின் இலேனும் அல்லேன்;
கரை பொருது இழிதரும் கான் யாற்று இகுகரை
வேர் கிளர் மராஅத்து அம் தளிர் போல,
நடுங்கல் ஆனா நெஞ்சமொடு, இடும்பை
யாங்கனம் தாங்குவென் மற்றே?-ஓங்கு செலல்
கடும் பகட்டு யானை நெடு மான் அஞ்சி,
ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்க,
மாரி இரீஇ மான்றன்றால் மழையே.
பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் பருவ
வரவின்கண் சொல்லியது.-ஒளவையார்
வேங்கையும் புலி ஈன்றன; அருவியும்
தேம் படு நெடு வரை மணியின் மானும்;
அன்னையும் அமர்ந்து நோக்கினளே, என்னையும்-
களிற்று முகம் திறந்த கல்லா விழுத் தொடை
ஏவல் இளையரொடு மா வழிப்பட்டென,
'சிறு கிளி முரணிய பெருங் குரல் ஏனல்
காவல் நீ' என்றோளே; சேவலொடு
சிலம்பின் போகிய சிதர் கால் வாரணம்
முதைச் சுவல் கிளைத்த பூழி, மிகப் பல
நன் பொன் இமைக்கும் நாடனொடு
அன்புறு காமம் அமைக நம் தொடர்பே.
பகற்குறி வந்து ஒழுகாநின்ற
காலத்துத் தலைமகன் கேட்பச் சொல்லியது.-காவிரிப்
பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
பொய்கை நீர்நாய் வைகுதுயில் ஏற்கும்
கை வண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த
வயல் வெள் ஆம்பல் உருவ நெறித் தழை
ஐது அகல் அல்குல் அணி பெறத் தைஇ,
விழவின் செலீஇயர் வேண்டும்மன்னோ;
வரைபோல் யானை, வாய்மொழி முடியன்
வரை வேய் புரையும் நல் தோள்
பாங்கு ஆயின வாயில் கேட்ப,
நெருங்கிச் சொல்லியது; தலைமகள் தோழிக்கு உரைப் பாளாய்,
வாயிலாகப் புக்கார் கேட்ப, சொல்லியதூஉம்
ஆம்.-ஒளவையார்
தோளும் அழியும், நாளும் சென்றென;
நீள் இடை அத்தம் நோக்கி, வாள் அற்றுக்
கண்ணும் காட்சி தௌவின; என் நீத்து
அறிவும் மயங்கி, பிறிது ஆகின்றே;
நோயும் பெருகும்; மாலையும் வந்தன்று;
யாங்கு ஆகுவென்கொல் யானே? ஈங்கோ
சாதல் அஞ்சேன்; அஞ்சுவல், 'சாவின்
பிறப்புப் பிறிது ஆகுவதுஆயின்,
மறக்குவேன்கொல், என் காதலன்' எனவே.
பிரிவிடை ஆற்றாளாகி நின்ற தலைமகளை
வற்புறாநின்ற தோழிக்கு 'ஆற்றுவல்' என்பது படச்
சொல்லியது.-அம்மூவனார்