தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


ஈங்கை

2. பாலை
அழுந்துபட வீழ்ந்த பெருந் தண் குன்றத்து,
ஒலி வல் ஈந்தின் உலவைஅம் காட்டு,
ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த
செம் மறுத் தலைய, நெய்த்தோர் வாய,
5
வல்லியப் பெருந் தலைக் குருளை, மாலை,
மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே;
வை எயிற்று ஐயள் மடந்தைமுன் உற்று
எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம்,
காலொடு பட்ட மாரி
10
மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே!
உடன் போகாநின்றாரை இடைச் சுரத்துக் கண்டார் சொல்லியது.-பெரும்பதுமனார்

86. பாலை
அறவர், வாழி-தோழி! மறவர்
வேல் என விரிந்த கதுப்பின் தோல
பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும்
கடும் பனி அற்சிரம், நடுங்க, காண்தகக்
5
கை வல் வினைவன் தையுபு சொரிந்த
சுரிதக உருவின ஆகிப் பெரிய
கோங்கம் குவி முகை அவிழ, ஈங்கை
நல் தளிர் நயவர நுடங்கும்
முற்றா வேனில் முன்னி வந்தோரே!
குறித்த பருவத்தின்வினைமுடித்து வந்தமை கேட்ட தோழி தலைவிக்கு உரைத்தது.-நக்கீரர்

205. பாலை
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து,
ஆளி நன் மான், வேட்டு எழு கோள் உகிர்ப்
பூம் பொறி உழுவை தொலைச்சிய, வைந் நுதி
ஏந்து வெண் கோட்டு, வயக் களிறு இழுக்கும்
5
துன் அருங் கானம் என்னாய், நீயே
குவளை உண்கண் இவள் ஈண்டு ஒழிய,
ஆள்வினைக்கு அகறிஆயின், இன்றொடு
போயின்றுகொல்லோ தானே-படப்பைக்
கொடு முள் ஈங்கை நெடு மா அம் தளிர்
10
நீர் மலி கதழ் பெயல் தலைஇய
ஆய் நிறம் புரையும் இவள் மாமைக் கவினே!
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லி, செலவு அழுங்கியது. தோழி செலவு அழுங்கச் சொல்லியதூஉம் ஆம்.-இளநாகனார்

312. பாலை
நோகோ யானே, நோம் என் நெஞ்சே-
'பனிப் புதல் ஈங்கை அம் குழை வருட,
சிறை குவிந்திருந்த பைதல் வெண் குருகு,
பார்வை வேட்டுவன், காழ் களைந்தருள,
5
மாரி நின்ற, மையல் அற்சிரம்-
யாம் தன் உழையம் ஆகவும், தானே,
எதிர்த்த தித்தி முற்றா முலையள்,
கோடைத் திங்களும் பனிப்போள்-
வாடைப் பெரும் பனிக்கு என்னள்கொல்?' எனவே.
பொருள் வலித்த தலைமகன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது.-கழார்க் கீரன் எயிற்றியார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:22:19(இந்திய நேரம்)