தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


ஓமை

84. பாலை
கண்ணும், தோளும், தண் நறுங்கதுப்பும்,
திதலை அல்குலும் பல பாராட்டி,
நெருநலும் இவணர் மன்னே! இன்றே,
பெரு நீர் ஒப்பின் பேஎய் வெண் தேர்
5
மரன் இல் நீள் இடை மான் நசையுறூஉம்,
சுடுமண் தசும்பின் மத்தம் தின்ற
பிறவா வெண்ணெய் உருப்பு இடந்தன்ன
உவர் எழு களரி ஓமை அம் காட்டு,
வெயில் வீற்றிருந்த வெம்பு அலை அருஞ் சுரம்
10
ஏகுவர் என்ப, தாமே-தம்வயின்
இரந்தோர் மாற்றல் ஆற்றா
இல்லின் வாழ்க்கை வல்லாதோரே.
பிரிவிடை ஆற்றாளாய தலைவி தோழிக்குச் சொல்லியது.

107. பாலை
உள்ளுதொறும் நகுவேன்-தோழி!-வள்உகிர்ப்
பிடி பிளந்திட்ட நார் இல் வெண் கோட்டுக்
கொடிறு போல் காய வால் இணர்ப் பாலை,
செல் வளி தூக்கலின், இலை தீர் நெற்றம்
5
கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும்,
புல் இலை ஓமைய, புலி வழங்கு அத்தம்
சென்ற காதலர்வழி வழிப்பட்ட
நெஞ்சே நல்வினைப்பாற்றே; ஈண்டு ஒழிந்து,
ஆனாக் கௌவை மலைந்த
10
யானே, தோழி! நோய்ப்பாலேனே.
பிரிவிடை மெலிந்த தலைவி தோழிக்குச் சொல்லியது

137. பாலை
தண்ணிய கமழும் தாழ் இருங் கூந்தல்,
தட மென் பணைத் தோள், மட நல்லோள்வயின்
பிரியச் சூழ்ந்தனை ஆயின், அரியது ஒன்று
எய்தினை, வாழிய-நெஞ்சே!-செவ் வரை
5
அருவி ஆன்ற நீர் இல் நீள் இடை,
கயந் தலை மடப் பிடி உயங்கு பசி களைஇயர்,
பெருங் களிறு தொலைத்த முடத் தாள் ஓமை
அருஞ் சுரம் செல்வோர்க்கு அல்குநிழல்' ஆகும்
குன்ற வைப்பின் கானம்
10
சென்று, சேண் அகறல் வல்லிய நீயே!
தலைவன் செலவு அழுங்கியது.-பெருங்கண்ணனார்

198. பாலை
சேயின் வரூஉம் மதவலி! யா உயர்ந்து
ஓமை நீடிய கான் இடை அத்தம்,
முன்நாள் உம்பர்க் கழிந்த என் மகள்
கண்பட, நீர் ஆழ்ந்தன்றே; தந்தை
5
தன் ஊர் இடவயின் தொழுவேன்; நுண் பல்
கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலை,
வார்ந்து இலங்கு வால் எயிற்று, பொலிந்த தாஅர்,
சில் வளை, பல் கூந்தலளே, அவளே;
மை அணல் எருத்தின் முன்பின் தடக் கை
10
வல் வில் அம்பின் எய்யா வண் மகிழ்த்
தந்தைதன் ஊர் இதுவே;
ஈன்றேன் யானே; பொலிக, நும் பெயரே!
பின் சென்ற செவிலி இடைச் சுரத்துக் கண்டார்க்குச் சொல்லியது.-கயமனார்

252. பாலை
'உலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கி,
சிள்வீடு கறங்கும் சேய் நாட்டு அத்தம்,
திறம் புரி கொள்கையொடு இறந்து செயின அல்லது,
அரும் பொருட் கூட்டம் இருந்தோர்க்கு இல்' என,
5
வலியா நெஞ்சம் வலிப்ப, சூழ்ந்த
வினை இடை விலங்கல போலும்-புனை சுவர்ப்
பாவை அன்ன பழிதீர் காட்சி,
ஐது ஏய்ந்து அகன்ற அல்குல், மை கூர்ந்து
மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண்,
10
முயல் வேட்டு எழுந்த முடுகு விசைக் கத நாய்
நல் நாப் புரையும் சீறடி,
பொம்மல் ஓதி, புனைஇழை குணனே!
'பொருள்வயிற் பிரியும்' எனக் கவன்ற தலைமகட்குத் தோழி சொல்லியது.-அம்மெய்யன் நாகனார்

279. பாலை
வேம்பின் ஒண் பழம் முணைஇ, இருப்பைத்
தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ,
வைகு பனி உழந்த வாவல், சினைதொறும்,
நெய் தோய் திரியின் தண் சிதர் உறைப்ப,
5
நாட் சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையொடு
பொருத யானைப் புட் தாள் ஏய்ப்ப,
பசிப் பிடி உதைத்த ஓமைச் செவ் வரை
வெயில் காய் அமையத்து இமைக்கும் அத்தத்து,
அதர் உழந்து அசையினகொல்லோ-ததர்வாய்ச்
10
சிலம்பு கழீஇய செல்வம்
பிறருழைக் கழிந்த என் ஆயிழை அடியே?
மகட் போக்கிய தாய் சொல்லியது.-கயமனார்

318. பாலை
நினைத்தலும் நினைதிரோ-ஐய! அன்று நாம்
பணைத் தாள் ஓமைப் படு சினை பயந்த
பொருந்தாப் புகர் நிழல் இருந்தனெமாக,
நடுக்கம் செய்யாது, நண்ணுவழித் தோன்றி,
5
ஒடித்து மிசைக் கொண்ட ஓங்கு மருப்பு யானை
பொறி படு தடக்கை சுருக்கி, பிறிது ஓர்
ஆறு இடையிட்ட அளவைக்கு, வேறு உணர்ந்து,
என்றூழ் விடர் அகம் சிலம்ப,
புன் தலை மடப் பிடி புலம்பிய குரலே?
பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகனைத் தோழி சொல்லியது.- பாலை பாடிய பெருங் கடுங்கோ

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:22:38(இந்திய நேரம்)