தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


கண்டல்

54. நெய்தல்
வளை நீர் மேய்ந்து, கிளை முதல்செலீஇ,
வாப் பறை விரும்பினைஆயினும், தூச் சிறை
இரும் புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்து-
கருங் கால் வெண் குருகு!-எனவ கேண்மதி:
5
பெரும் புலம்பின்றே, சிறு புன் மாலை;
அது நீ அறியின், அன்புமார் உடையை;
நொதுமல் நெஞ்சம் கொள்ளாது, என் குறை
இற்றாங்கு உணர உரைமதி-தழையோர்
கொய்குழை அரும்பிய குமரி ஞாழல்
10
தெண் திரை மணிப் புறம் தைவரும்
கண்டல் வேலி நும் துறை கிழவோற்கே!
காமம் மிக்க கழிபடர்கிளவி.-சேந்தங் கண்ணனார்

74. நெய்தல்
வடிக் கதிர் திரித்த வல் ஞாண்பெரு வலை
இடிக் குரற் புணரிப் பௌவத்து இடுமார்,
நிறையப் பெய்த அம்பி, காழோர்
சிறை அருங் களிற்றின், பரதவர் ஒய்யும்
5
சிறு வீ ஞாழற் பெருங் கடற் சேர்ப்பனை,
'ஏதிலாளனும்' என்ப; போது அவிழ்
புது மணற் கானல் புன்னை நுண் தாது,
கொண்டல் அசை வளி தூக்குதொறும், குருகின்
வெண் புறம் மொசிய வார்க்கும், தெண் கடல்
10
கண்டல் வேலிய ஊர், 'அவன்
பெண்டு' என அறிந்தன்று; பெயர்த்தலோ அரிதே!
தலைவி பாணற்கு வாயில்மறுத்தது.-உலோச்சனார்

123. நெய்தல்
உரையாய்-வாழி, தோழி!-இருங் கழி
இரை ஆர் குருகின் நிரை பறைத் தொழுதி
வாங்கு மடற் குடம்பை, தூங்கு இருள் துவன்றும்
பெண்ணை ஓங்கிய வெண் மணற் படப்பை,
5
கானல் ஆயமொடு காலைக் குற்ற
கள் கமழ் அலர தண் நறுங் காவி
அம் பகை நெறித் தழை அணிபெறத் தைஇ,
வரி புனை சிற்றில் பரி சிறந்து ஓடி,
புலவுத் திரை உதைத்த கொடுந் தாட் கண்டல்
10
சேர்ப்பு ஏர் ஈர் அளை அலவன் பார்க்கும்
சிறு விளையாடலும் அழுங்கி,
நினைக்குறு பெருந் துயரம் ஆகிய நோயே.
தலைவன்சிறைப்புறத்தானாக, தோழி தலைவிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது.- காஞ்சிப் புலவனார்

191. நெய்தல்
'சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர்
நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த
வண்டற் பாவை வன முலை முற்றத்து,
ஒண் பொறிச் சுணங்கின் ஐது படத் தாஅம்
5
கண்டல் வேலிக் காமர் சிறுகுடி,
எல்லி வந்தன்றோ தேர்?' எனச் சொல்லி,
அலர் எழுந்தன்று இவ் ஊரே; பலருளும்
என் நோக்கினளே அன்னை; நாளை
மணிப் பூ முண்டகம் கொய்யேன் ஆயின்,
10
அணிக் கவின் உண்மையோ அரிதே; மணிக் கழி
நறும் பூங் கானல் வந்து, அவர்
வறுந் தேர் போதல் அதனினும் அரிதே.
தோழி, தலைமகன் சிறைப்புறமாக, செறிப்பு அறிவுறுப்பான் வேண்டிச் சொல்லியது.-உலோச்சனார்

207. நெய்தல்
கண்டல் வேலிக் கழி சூழ் படப்பை
முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பைக்
கொழு மீன் கொள்பவர் பாக்கம் கல்லென,
நெடுந் தேர் பண்ணி வரல் ஆனாதே;
5
குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி
வந்தனர், பெயர்வர்கொல் தாமே? அல்கல்,
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ,
கோட் சுறா எறிந்தென, சுருங்கிய நரம்பின்
முடி முதிர் பரதவர் மட மொழிக் குறுமகள்,
10
வலையும் தூண்டிலும் பற்றி, பெருங் கால்
திரை எழு பௌவம் முன்னிய
கொலை வெஞ் சிறாஅர் பாற்பட்டனளே.
நொதுமலர் வரைவுழி, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது.

345. நெய்தல்
கானற் கண்டல் கழன்று உகு பைங் காய்
நீல் நிற இருங் கழி உட்பட வீழ்ந்தென,
உறு கால் தூக்க, தூங்கி ஆம்பல்,
சிறு வெண் காக்கை ஆவித்தன்ன,
5
வெளிய விரியும் துறைவ! என்றும்,
அளிய பெரிய கேண்மை நும் போல்,
சால்பு எதிர்கொண்ட செம்மையோரும்
தேறா நெஞ்சம் கையறுபு வாட,
நீடின்று விரும்பார் ஆயின்,
10
வாழ்தல் மற்று எவனோ? தேய்கமா தெளிவே!
தெளிவிடை விலங்கியது.-நம்பி குட்டுவனார்

372. நெய்தல்
அழிதக்கன்றே-தோழி!-கழி சேர்பு
கானற் பெண்ணைத் தேனுடை அழி பழம்,
வள் இதழ் நெய்தல் வருந்த, மூக்கு இறுபு,
அள்ளல் இருஞ் சேற்று ஆழப் பட்டென,
5
கிளைக் குருகு இரியும் துறைவன் வளைக் கோட்டு
அன்ன வெண் மணற்று அகவயின், வேட்ட
அண்ணல் உள்ளமொடு அமர்ந்து, இனிது நோக்கி,
அன்னை தந்த அலங்கல் வான் கோடு
உலைந்தாங்கு நோதல் அஞ்சி, 'அடைந்ததற்கு
10
இனையல் என்னும்' என்ப-மனை இருந்து,
இருங் கழி துழவும் பனித் தலைப் பரதவர்
திண் திமில் விளக்கம் எண்ணும்
கண்டல் வேலிக் கழி நல் ஊரே.
மேல் இற்செறிப்பான் அறிந்து ஆற்றாளாகி நின்ற தலைமகள் ஆற்ற வேண்டி, உலகியல் மேல் வைத்துச் சிறைப்புறமாகச் செறியார் எனச் சொல்லியது.-உலோச்சனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:22:50(இந்திய நேரம்)