தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).


கொன்றை

99. முல்லை
'நீர் அற வறந்த நிரம்பா நீள்இடை,
துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின்,
அஞ்சுவரப் பனிக்கும் வெஞ் சுரம் இறந்தோர்
தாம் வரத் தெளித்த பருவம் காண்வர
5
இதுவோ?' என்றிசின்-மடந்தை!-மதி இன்று,
மறந்து கடல் முகந்த கமஞ் சூல் மா மழை
பொறுத்தல்செல்லாது இறுத்த வண் பெயல்
கார் என்று அயர்ந்த உள்ளமொடு, தேர்வு இல-
பிடவமும், கொன்றையும் கோடலும்-
10
மடவ ஆகலின், மலர்ந்தன பலவே.
பருவம் கண்டு ஆற்றாளாய தலைவியைத் தோழி, 'பருவம் அன்று' என்று வற்புறுத்தியது.-இளந்திரையனார்

221. முல்லை
மணி கண்டன்ன மா நிறக் கருவிளை
ஒண் பூந் தோன்றியொடு தண் புதல் அணிய,
பொன் தொடர்ந்தன்ன தகைய நன் மலர்க்
கொன்றை ஒள் இணர் கோடுதொறும் தூங்க,
5
வம்பு விரித்தன்ன செம் புலப் புறவில்,
நீர் அணிப் பெரு வழி நீள் இடைப் போழ,
செல்க-பாக!-நின் செய்வினை நெடுந் தேர்:
விருந்து விருப்புறூஉம் பெருந் தோட் குறுமகள்,
மின் ஒளிர் அவிர் இழை நல் நகர் விளங்க,
10
நடை நாட் செய்த நவிலாச் சீறடிப்
பூங் கட் புதல்வன் உறங்குவயின் ஒல்கி,
'வந்தீக, எந்தை!' என்னும்
அம் தீம் கிளவி கேட்கம் நாமே.
வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகன் பாகற்குச் சொல்லியது.-இடைக்காடனார்

242. முல்லை
இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப,
புதல் இவர் தளவம் பூங் கொடி அவிழ,
பொன் எனக் கொன்றை மலர, மணி எனப்
பல் மலர் காயாங் குறுஞ் சினை கஞல,
5
கார் தொடங்கின்றே காலை; வல் விரைந்து
செல்க-பாக!-நின் தேரே: உவக்காண்-
கழிப் பெயர் களரில் போகிய மட மான்
விழிக் கட் பேதையொடு இனன் இரிந்து ஓட,
காமர் நெஞ்சமொடு அகலா,
10
தேடூஉ நின்ற இரலை ஏறே.
வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகன் கார் கண்டு பாகற்குச் சொல்லியது.-விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார்

246. பாலை
இடூஉ ஊங்கண் இனிய படூஉம்;
நெடுஞ் சுவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும்;
மனை மா நொச்சி மீமிசை மாச் சினை,
வினை மாண் இருங் குயில் பயிற்றலும் பயிற்றும்;
5
உரம் புரி உள்ளமொடு சுரம் பல நீந்தி,
செய்பொருட்கு அகன்றனராயினும் பொய்யலர்,
வருவர் வாழி-தோழி!-புறவின்
பொன் வீக் கொன்றையொடு பிடவுத் தளை அவிழ,
இன் இசை வானம் இரங்கும்; அவர்,
10
'வருதும்' என்ற பருவமோ இதுவே?
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறீஇயது.-காப்பியஞ் சேந்தனார்

302. பாலை
இழை அணி மகளிரின் விழைதகப் பூத்த
நீடு சுரி இணர சுடர் வீக் கொன்றைக்
காடு கவின் பூத்தஆயினும், நன்றும்
வரு மழைக்கு எதிரிய மணி நிற இரும் புதல்
5
நரை நிறம் படுத்த நல் இணர்த் தெறுழ் வீ
தாஅம் தேரலர்கொல்லோ-சேய் நாட்டு,
களிறு உதைத்து ஆடிய கவிழ் கண் இடு நீறு
வெளிறு இல் காழ வேலம் நீடிய
பழங்கண் முது நெறி மறைக்கும்,
10
வழங்கு அருங் கானம் இறந்திசினோரே?
பருவம் கழிந்தது கண்டு தலைமகள் சொல்லியது.-மதுரை மருதன் இளநாகனார்

371. முல்லை
காயாங் குன்றத்துக் கொன்றை போல,
மா மலை விடர் அகம் விளங்க மின்னி,
மாயோள் இருந்த தேஎம் நோக்கி,
வியல் இரு விசும்பு அகம் புதையப் பாஅய்,
5
பெயல் தொடங்கினவே, பெய்யா வானம்:
நிழல் திகழ் சுடர்த் தொடி ஞெகிழ ஏங்கி,
அழல் தொடங்கினளே ஆயிழை; அதன் எதிர்,
குழல் தொடங்கினரே கோவலர்-
தழங்கு குரல் உருமின் கங்குலானே.
வினை முற்றி மறுத்தராநின்றான் பாகற்குச் சொல்லியது.-ஒளவையார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:28:53(இந்திய நேரம்)