தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


தாழம்பூ

19. நெய்தல்
இறவுப் புறத்து அன்ன பிணர் படு தடவு முதல்
சுறவுக் கோட்டன்ன முள் இலைத் தாழை,
பெருங் களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு,
நல் மான் உழையின் வேறுபடத் தோன்றி,
5
விழவுக் களம் கமழும் உரவு நீர்ச் சேர்ப்ப!
இன மணி நெடுந் தேர் பாகன் இயக்க,
செலீஇய சேறிஆயின், இவளே
வருவை ஆகிய சில் நாள்
வாழாளாதல் நற்கு அறிந்தனை சென்மே!
புணர்ந்து நீங்கிய தலைவனைத் தோழி வரைவு கடாயது.-நக்கண்ணையார்

78. நெய்தல்
கோட் சுறா வழங்கும் வாள் கேழ்இருங் கழி
மணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய,
பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம்,
வீழ் தாழ் தாழைப் பூக் கமழ் கானல்,
5
படர் வந்து நலியும் சுடர் செல் மாலை,
நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம்;
கேட்டிசின்-வாழி, தோழி!-தெண் கழி
வள் வாய் ஆழி உள் வாய் தோயினும்,
புள்ளு நிமிர்ந்தன்ன பொலம் படைக் கலி மா
10
வலவன் கோல் உற அறியா,
உரவு நீர்ச் சேர்ப்பன், தேர்மணிக் குரலே!
வரைவு மலிந்தது.-கீரங்கீரனார்

203. நெய்தல்
முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்,
தடந் தாட் தாழை முள்ளுடை நெடுந் தோட்டு
அக மடல் பொதுளிய முகை முதிர் வான் பூங்
கோடு வார்ந்தன்ன, வெண் பூத் தாழை
5
எறி திரை உதைத்தலின், பொங்கித் தாது சோர்பு,
சிறுகுடிப் பாக்கத்து மறுகு புலா மறுக்கும்
மணம் கமழ் கானல், இயைந்த நம் கேண்மை
ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது,
கதழ் பரி நெடுந் தேர் வரவு ஆண்டு அழுங்கச்
10
செய்த தன் தப்பல் அன்றியும்,
உயவுப் புணர்ந்தன்று, இவ் அழுங்கல் ஊரே.
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லி வரைவு கடாயது.-உலோச்சனார்

211. நெய்தல்
யார்க்கு நொந்து உரைக்கோ யானே-ஊர் கடல்
ஓதம் சென்ற உப்புடைச் செறுவில்,
கொடுங் கழி மருங்கின், இரை வேட்டு எழுந்த
கருங் கால் குருகின் கோள் உய்ந்து போகிய
5
முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை,
எறி திரை தொகுத்த எக்கர் நெடுங் கோட்டுத்
துறு கடற் தலைய தோடு பொதி தாழை
வண்டு படு வான் போது வெரூஉம்
துறை கெழு கொண்கன் துறந்தனன் எனவே?
வரைவு நீட ஒருதலை ஆற்றாளாம் என்ற தோழி சிறைப்புறமாகத் தன்னுள்ளே சொல்லியது.-கோட்டியூர் நல்லந்தையார்

235. நெய்தல்
உரவுத் திரை பொருத பிணர் படு தடவு முதல்,
அரவு வாள் வாய முள் இலைத் தாழை
பொன் நேர் தாதின் புன்னையொடு கமழும்
பல் பூங் கானல் பகற்குறி வந்து, நம்
5
மெய் கவின் சிதையப் பெயர்ந்தனனாயினும்,
குன்றின் தோன்றும் குவவு மணல் ஏறி,
கண்டனம் வருகம் சென்மோ-தோழி!-
தண் தார் அகலம் வண்டு இமிர்பு ஊத,
படு மணிக் கலி மாக் கடைஇ,
10
நெடு நீர்ச் சேர்ப்பன் வரூஉம் ஆறே.
வரைவு நீட ஆற்றாளாங் காலத்துத் தோழி வரைவு மலிந்தது.

270. நெய்தல்
தடந் தாள் தாழைக் குடம்பை, நோனாத்
தண்டலை கமழும் வண்டு படு நாற்றத்து
இருள் புரை கூந்தல் பொங்கு துகள் ஆடி,
உருள் பொறி போல எம் முனை வருதல்,
5
அணித் தகை அல்லது பிணித்தல் தேற்றாப்
பெருந் தோட் செல்வத்து இவளினும்-எல்லா!-
எற் பெரிது அளித்தனை, நீயே; பொற்புடை
விரி உளைப் பொலிந்த பரியுடை நன் மான்
வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன்
10
கூந்தல் முரற்சியின் கொடிதே;
மறப்பல் மாதோ, நின் விறல் தகைமையே.
தோழி வாயில் நேர்கின்றாள் தலைமகனை நெருங்கிச் சொல்லி, வாயில் எதிர்கொண்டது,உடனிலைக் கிளவி வகையால்.-பரணர்

335. நெய்தல்
திங்களும் திகழ் வான் ஏர்தரும்; இமிழ் நீர்ப்
பொங்கு திரைப் புணரியும் பாடு ஓவாதே;
ஒலி சிறந்து ஓதமும் பெயரும்; மலி புனற்
பல் பூங் கானல் முள் இலைத் தாழை
5
சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ,
வளி பரந்து ஊட்டும் விளிவு இல் நாற்றமொடு
மை இரும் பனைமிசைப் பைதல உயவும்
அன்றிலும் என்புற நரலும்; அன்றி,
விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல் யாழ்
10
யாமம் உய்யாமை நின்றன்று;
காமம் பெரிதே; களைஞரோ இலரே!
காமம் மிக்க கழிபடர்கிளவி மிதூர்ந்து தலைமகள் சொல்லியது.- வெள்ளிவீதியார்

349. நெய்தல்
கடுந் தேர் ஏறியும், காலின் சென்றும்,
கொடுங் கழி மருங்கின் அடும்பு மலர் கொய்தும்,
கைதை தூக்கியும், நெய்தல் குற்றும்,
புணர்ந்தாம் போல, உணர்ந்த நெஞ்சமொடு
5
வைகலும் இனையம் ஆகவும், செய் தார்ப்
பசும் பூண் வேந்தர் அழிந்த பாசறை,
ஒளிறு வேல் அழுவத்துக் களிறு படப் பொருத
பெரும் புண்ணுறுநர்க்குப் பேஎய் போல,
பின்னிலை முனியா நம்வயின்,
10
என் என நினையும்கொல், பரதவர் மகளே?
தலைமகன், தோழி கேட்பத் தன்னுள்ளே சொல்லியது.- மிளை கிழான் நல்வேட்டனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:29:26(இந்திய நேரம்)