தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


கரடி (எண்கு)

125.குறிஞ்சி
'இரை தேர் எண்கின் பகு வாய் ஏற்றை
கொடு வரிப் புற்றம் வாய்ப்ப வாங்கி,
நல் அரா நடுங்க உரறி, கொல்லன்
ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து, அகழும்
5
நடு நாள் வருதல் அஞ்சுதும் யாம்' என,
வரைந்து வரல் இரக்குவம் ஆயின், நம் மலை
நல் நாள் வதுவை கூடி, நீடு இன்று
நம்மொடு செல்வர்மன்-தோழி!-மெல்ல
வேங்கைக் கண்ணியர் எருது எறி களமர்
10
நிலம் கண்டன்ன அகன் கண் பாசறை,
மென் தினை நெடும் போர் புரிமார்
துஞ்சு களிறு எடுப்பும் தம் பெருங் கல் நாட்டே.
வரைவு நீட்டிப்ப, ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.

192. குறிஞ்சி
'குருதி வேட்கை உரு கெழு வய மான்
வலி மிகு முன்பின் மழ களிறு பார்க்கும்
மரம் பயில் சோலை மலிய, பூழியர்
உருவத் துருவின், நாள் மேயல் ஆரும்
5
மாரி எண்கின் மலைச் சுர நீள் இடை,
நீ நயந்து வருதல் எவன்?' எனப் பல புலந்து,
அழுதனை உறையும் அம் மா அரிவை!
பயம் கெழு பலவின் கொல்லிக் குட வரைப்
பூதம் புணர்த்த புதிது இயல் பாவை
10
விரி கதிர் இள வெயில் தோன்றி அன்ன, நின்
ஆய் நலம் உள்ளி வரின், எமக்கு
ஏமம் ஆகும், மலைமுதல் ஆறே.
இரவுக்குறி மறுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியது.

325. பாலை
கவிதலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றை
இரை தேர் வேட்கையின் இரவில் போகி,
நீடு செயல் சிதலைத் தோடு புனைந்து எடுத்த
அர வாழ் புற்றம் ஒழிய, ஒய்யென
5
முர வாய் வள் உகிர் இடப்ப வாங்கும்,
ஊக்கு அருங் கவலை நீந்தி, மற்று-இவள்
பூப்போல் உண்கண் புது நலம் சிதைய,
வீங்கு நீர் வாரக் கண்டும்,
தகுமோ?-பெரும!-தவிர்க நும் செலவே.
தோழி செலவு அழுங்குவித்தது.-மதுரைக் காருலவியங் கூத்தனார்

336. குறிஞ்சி
பிணர்ச் சுவற் பன்றி தோல்முலைப் பிணவொடு
கணைக் கால் ஏனல் கைம்மிகக் கவர்தலின்,
கல் அதர் அரும் புழை அல்கி, கானவன்,
வில்லின் தந்த வெண் கோட்டு ஏற்றை,
5
புனை இருங் கதுப்பின் மனையோள் கெண்டி,
குடி முறை பகுக்கும் நெடு மலை நாட!
உரவுச் சின வேழம் உறு புலி பார்க்கும்
இரவின் அஞ்சாய்; அஞ்சுவல்-அரவின்
ஈர் அளைப் புற்றம், கார் என முற்றி,
10
இரை தேர் எண்கினம் அகழும்
வரை சேர் சிறு நெறி வாராதீமே!
ஆறு பார்த்துற்றுச்சொல்லியது.-கபிலர்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:33:22(இந்திய நேரம்)