தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).


மயில் (மஞ்ஞை)

13. குறிஞ்சி
எழாஅஆகலின், எழில் நலம் தொலைய
அழாஅதீமோ, நொதுமலர் தலையே!-
ஏனல் காவலர் மா வீழ்த்துப் பறித்த
பகழி அன்ன சேயரி மழைக் கண்,
5
நல்ல பெருந் தோளோயே! கொல்லன்
எறி பொன் பிதிரின் சிறு பல தாஅய்
வேங்கை வீ உகும் ஓங்கு மலைக் கட்சி
மயில் அறிபு அறியாமன்னோ;
பயில் குரல் கவரும் பைம் புறக் கிளியே.
இயற்கைப்புணர்ச்சியின் பிற்றை ஞான்று, தலைவியின் வேறுபாடு கண்ட தோழி, தலைவி மறைத்தற்குச் சொல்லியது.- கபிலர்

115. முல்லை
மலர்ந்த பொய்கைப் பூக் குற்று அழுங்க
அயர்ந்த ஆயம் கண் இனிது படீஇயர்,
அன்னையும் சிறிது தணிந்து உயிரினள்; 'இன் நீர்த்
தடங் கடல் வாயில் உண்டு, சில் நீர்' என,
5
மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி
மனை நடு மௌவலொடு ஊழ் முகை அவிழ,
கார் எதிர்ந்தன்றால், காலை; காதலர்
தவச் சேய் நாட்டர்ஆயினும், மிகப் பேர்
அன்பினர்-வாழி, தோழி!-நன் புகழ்
10
உலப்பு இன்று பெறினும் தவிரலர்;
கேட்டிசின் அல்லெனோ, விசும்பின் தகவே?
பிரிவிடை ஆற்றாளாய தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தியது.

248. முல்லை
'சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீ,
பொறி வரி நல் மான் புகர் முகம் கடுப்ப,
தண் புதல் அணிபெற மலர, வண் பெயல்
கார் வரு பருவம்' என்றனர்மன்-இனி,
5
பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர்,
அன்பு இன்மையின் பண்பு இல பயிற்றும்
பொய் இடி அதிர் குரல் வாய் செத்து ஆலும்
இன மயில் மடக் கணம் போல,
நினை மருள்வேனோ? வாழியர், மழையே!
பருவம் கண்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி மழை மேல் வைத்துப் பருவம் மறுத்தது.-காசிபன் கீரனார்

262. பாலை
தண் புனக் கருவிளைக் கண் போல் மா மலர்,
ஆடு மயிற் பீலியின் வாடையொடு துயல்வர,
உறை மயக்குற்ற ஊர் துஞ்சு யாமத்து,
நடுங்கு பிணி நலிய நல் எழில் சாஅய்,
5
துனி கூர் மனத்தள், முனி படர் உழக்கும்
பணைத் தோள், அரும்பிய சுணங்கின், கணைக் கால்,
குவளை நாறும் கூந்தல், தேமொழி
இவளின் தீர்ந்தும், ஆள்வினை வலிப்ப,
'பிரிவல்' நெஞ்சு, என்னும்ஆயின்,
10
அரிது மன்றம்ம, இன்மையது இளிவே.
தலைமகள் ஆற்றாக் குறிப்பு அறிந்து, பிரிவிடை விலக்கியது.-பெருந்தலைச் சாத்தனார்

264. பாலை
பாம்பு அளைச் செறிய முழங்கி, வலன் ஏர்பு,
வான் தளி பொழிந்த காண்பு இன் காலை,
அணி கிளர் கலாவம் ஐது விரித்து இயலும்
மணி புரை எருத்தின் மஞ்ஞை போல, நின்
5
வீ பெய் கூந்தல் வீசு வளி உளர
ஏகுதி-மடந்தை!-எல்லின்று பொழுதே:
வேய் பயில் இறும்பில் கோவலர் யாத்த
ஆ பூண் தெண் மணி இயம்பும்,
ஈகாண் தோன்றும், எம் சிறு நல் ஊரே.
உடன் போகாநின்ற தலைமகன், தலைமகளை வற்புறீஇயது; உடன்போய் மறுத்தரா நின்றான் ஊர்காட்டி, வற்புறீஇயதும் ஆம்.-ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்

276. குறிஞ்சி
'கோடு துவையா, கோள் வாய் நாயொடு
காடு தேர்ந்து அசைஇய வய மான் வேட்டு
வயவர் மகளிர்' என்றிஆயின்,
குறவர் மகளிரேம்; குன்று கெழு கொடிச்சியேம்;
5
சேணோன் இழைத்த நெடுங் காற் கழுதில்
கான மஞ்ஞை கட்சி சேக்கும்
கல் அகத்தது எம் ஊரே; செல்லாது
சேந்தனை, சென்மதி நீயே-பெரு மலை
வாங்கு அமைப் பழுனிய நறவு உண்டு,
10
வேங்கை முன்றில் குரவையும் கண்டே.
பகற்குறி வந்து பெயரும் தலைமகனை உலகியல் சொல்லியது.-தொல் கபிலர்

288. குறிஞ்சி
அருவி ஆர்க்கும் அணங்குடை நெடுங் கோட்டு
ஞாங்கர், இள வெயில் உணீஇய, ஓங்கு சினைப்
பீலி மஞ்ஞை பெடையோடு ஆலும்
குன்ற நாடன் பிரிவின் சென்று,
5
நல் நுதல் பரந்த பசலை கண்டு, அன்னை
செம் முது பெண்டிரொடு நெல் முன் நிறீஇ,
கட்டின் கேட்கும்ஆயின், வெற்பில்
ஏனற் செந் தினைப் பால் ஆர் கொழுங் குரற்
சிறு கிளி கடிகம் சென்றும், 'இந்
10
நெடு வேள் அணங்கிற்று' என்னும்கொல் அதுவே?
தோழி சிறைப்புறமாகத் தலைமகட்கு உரைப்பாளாய், வெறி அறிவுறீஇ வரைவு கடா யது.-குளம்பனார்

301. குறிஞ்சி
'நீள் மலைக் கலித்த பெருங் கோற் குறிஞ்சி
நாள்மலர் புரையும் மேனி, பெருஞ் சுனை
மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண்,
மயில் ஓரன்ன சாயல், செந் தார்க்
5
கிளி ஓரன்ன கிளவி, பணைத் தோள்,
பாவை அன்ன வனப்பினள் இவள்' என,
காமர் நெஞ்சமொடு பல பாராட்டி,
யாய் மறப்பு அறியா மடந்தை-
தேம் மறப்பு அறியாக் கமழ் கூந்தலளே.
சேட்படுத்து, 'பிரிவின்கண் அன்பின் இயற்கையில் தகுவகையதோர் ஆற்றாமையி னான்' என்று, தோழி தன்னுள்ளே சொல்லியது.-பாண்டியன் மாறன் வழுதி

305. பாலை
வரி அணி பந்தும், வாடிய வயலையும்,
மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும்,
கடியுடை வியல் நகர் காண் வரத் தோன்ற,
தமியே கண்ட தண்டலையும் தெறுவர,
5
நோய் ஆகின்றே-மகளை!-நின் தோழி,
எரி சினம் தணிந்த இலை இல் அம் சினை
வரிப் புறப் புறவின் புலம்பு கொள் தெள் விளி,
உருப்பு அவிர் அமையத்து, அமர்ப்பனள் நோக்கி,
இலங்கு இலை வெள் வேல் விடலையை
10
விலங்கு மலை ஆர் இடை நலியும்கொல் எனவே.
நற்றாய், தோழிக்குச் சொல்லியது; மனை மருட்சியும் ஆம்.-கயமனார்

357. குறிஞ்சி
நின் குறிப்பு எவனோ?-தோழி!-என் குறிப்பு
என்னொடு நிலையாதுஆயினும், என்றும்
நெஞ்சு வடுப்படுத்துக் கெட அறியாதே-
சேண் உறத் தோன்றும் குன்றத்துக் கவாஅன்,
5
பெயல் உழந்து உலறிய மணிப் பொறிக் குடுமிப்
பீலி மஞ்ஞை ஆலும் சோலை,
அம் கண் அறைய அகல் வாய்ப் பைஞ் சுனை
உண்கண் ஒப்பின் நீலம் அடைச்சி,
நீர் அலைக் கலைஇய கண்ணிச்
10
சாரல் நாடனொடு ஆடிய நாளே.
தலைமகன் வரைவு நீடிய இடத்து, 'ஆற்றுவல்' என்பது படச் சொல்லியது; 'மனை மருண்டு வேறுபாடாயினாய்' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்.-குறமகள் குறியெயினி

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:37:12(இந்திய நேரம்)